
சிறுகதை: சுபா
வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும், கமலம் துணியோடு குழந்தையை அள்ளிக்கொண்டாள். கால்கள் அதிர்ந்து நடுங்கின. நிற்க முடியாமல் தரையில் உட்கார்ந்தாள். குழந்தையைத் தன் முகத்தோடு தேய்த்து முகர்ந்தாள். அவளுடைய நாசித்துவாரங்கள் வழியே குழந்தையை முழுவதும் உள்ளே இழுத்துக் கொள்ளுவதுபோல அப்படி ஓர் ஆழமான மூச்சிழுப்பு.
"ஏய்... அழக்கூடாது" என்று எச்சரித்தான், சுப்பிரமணி. இடுப்பு வேட்டியை சரி செய்தான். மசி தெளித்தாற்போல நூறு பொத்தல்களுடன் இருந்த பனியனை மறைக்க ஆணியில் தொங்கிய சட்டையை உருவினான்.
கமலம் கண்ணீரை அடக்கியதில் கன்னங்கள் சிவந்துபோயின. குழந்தையின் மீது முத்தங்களாகப் பொழிந்தாள். அது பஞ்சுக் கைகளை முறுக்கி முகத்தில் தேய்த்துக்கொண்டது. பால் வாசம் கமகமத்தது. இப்போதுதான் குடித்து முடித்து உப்பிய வயிறுடன் இருந்தபோதும், இன்னும் ஓரே ஒரு முறை என்று கமலம் ரவிக்கையை மேலேற்றினாள். குழந்தை சீந்தவில்லை. துணித்திரைக்கு மறுபக்கம் இருந்த சமையல் பகுதிக்குக் குழந்தையோடு போனாள்.
சுப்பிரமணி கதவைத் திறந்தான். 'வாங்க வாங்க" என்று சற்று உரக்கவே வரவேற்றான். இரண்டு முன் போர்ஷன்காரர்களும் சங்கோஜமில்லாமல் இங்கே வேடிக்கை பார்த்தனர்.