

-பாலு சத்யா
திருவிழா முடிந்து திரும்பிப் போகையில் ஒரு தோசைக்கல் வாங்கிப் போக வேண்டும் என்று மீனா நினைத்துக்கொண்டாள். இரும்புப் பாத்திரக்கடையைப் பார்க்கிறபோது மட்டும் இந்த நினைவு வரும்.
பொரி கடலைக்கடைக்காரர்கள் இரும்பு வாணலியில் கரண்டியால் 'டங்டங்'கென்று தட்டிக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு வளையல் கடையில் ரேடியோ பாடிக்கொண்டிருக்க, உட்கார்ந்தவாக்கில் ஒரு ஆள் தூங்கிக்கொண்டிருந்தான்.
ஆளில்லாத பெரிய பெரிய ராட்சத ராட்டினங்களும், சர்க்கஸ் மற்றும் மேஜிக் கூடாரங்களும், மிருகக் காட்சிசாலையும் பார்க்க மீனாவுக்குச் சங்கடமாயிருந்தது.
இந்த வருடம் சூதாட்டத்திற்கென்று தனி இடம் ஒதுக்கியிருந்தார்கள். லங்கடாக் கட்டையிலும், மூணு சீட்டு ஆட்டத்திலும் கூட்டம் கொஞ்சமிருந்தது. பீடிக் கம்பெனிக்காரர்கள் போடும் கோடு விழுந்த இரண்டாந்தரத் திரைப்படங்களைப் பார்க்க வருகிற கூட்டம் கூடக் குறைந்துவிட்டது. எது எப்படியோ, முத்துராமனுக்கு இரவில் குடிப்பதற்கு சாராயம் கிடைத்துவிடுகிறது. நேற்றிரவு குடித்துவிட்டு வந்துதான் முத்துராமன் மீனாவை அடித்தான்.
திருவிழா நடக்காத ஒரு நாளில் மீனா முத்துராமனுடன் இந்த ஊருக்கு வந்திருக்கிறாள். ஆடம்பரமும், அலட்டலும், இரைச்சலும், சந்தடியும் இல்லாமல் ஆற்றை ஒட்டிய சிவன் கோவிலும் ஆற்றின் மேல் குறுக்கில் கட்டப்பட்டிருந்த பாலமும், சற்றுத் தள்ளி ரோட்டின் மேல் நின்ற அம்மன் கோவிலும், சுற்றிப் பசேலென்று தெரிகிற வயல்வெளியும் எவர் மனதையும் கொள்ளை கொள்ளும்.