
-ரிஷபன்
வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சுப்ரமணியாகத்தான் இருக்கும். சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டான். 'ஞாயிறு காலை பத்தரை மணிக்கு' என்றால் மிகச் சரியாய் ஹால் கடிகாரம் சங்கீதம் எழுப்புகிற நேரத்தில்.
"வாடா... கன் டைம்... நீ வரலேன்னா என்ன செய்யறதுன்னு டென்ஷன்ல இருந்தேன்" என்றேன்.
மிக நிதானமாய் அரசு முறைப் பயணத்தில் வந்தவன் மாதிரி நடந்து சுற்றுப் பிரதேசங்களைப் பார்வையால் அலசினான்.
"கேசட் கொண்டு வந்தியா..."
குரல் என்னையும் மீறிப் பரபரத்தது.
வீட்டில் என்னையும் இப்போது வந்த சுப்ரமணியையும் தவிர வேறு யாரும் இல்லை... ஊஹும். இன்னொரு நபரும் இருக்கிறார். வீட்டுக்குள் இல்லை. வெளியில்...
''பிளாஸ்க்குல காப்பியா" என்றான் மேஜை மீதிருந்ததைப் பார்த்து.
''எடுத்துக்கோ. சாப்பாடு ஆச்சா..."
காப்பியின் மணம் எனக்கும் வீசியது. அதே நேரம்....
"ழெங்கா... ழேய்.. ழெங்கா''
வாசல்புறமிருந்து குரல் கேட்டது.
சுப்ரமணி காபியை மேலே சிந்திக்கொண்டான். வழிந்ததைத் துடைத்துக்கொண்டான்.
"யா... யாருடா அது..."
"பச்... என்னோட தலைவிதி... இன்னைக்கு எல்லாரும் ஜாலியா பங்களூர் மேரேஜுக்குப் போயிருக்க... நான் மட்டும் ப்ரெட் ஸ்லைஸ், ஆப்பிள்னு அனாதையா ஒக்கார்ந்திருக்கேனே..."
என் குரலில் வெறுப்பு பூர்ணமாய் வெளிப்பட்டது.
''உன் பிரதர்னு சொல்லுவியே... அவனா... ஸாரி... அவரா..."
"அவனேதான்"
"அவரை ஏதோ இல்லத்துல... விட்டு வச்சிருக்கிறதா..."