சிறுகதை; கலைக்க முடியாத வேஷங்கள்!
-இந்திரா செளந்தர்ராஜன்
ஒரே வரியில் மறுத்துவிட்டாள் அகல்யா.
"சாரி... முடியாது - வேற ஆளை பாத்துக்குங்க..." - அவள் அப்படி மறுக்கக் காரணம் இருக்கிறது. மொத்தமாக அறுபது நாட்கள் கால்ஷீட் வேண்டுமாம். ஒரு நாள்கூட இடைவெளியின்றி ஷூட்டிங்காம். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரத் தயார் என்கிறார் புரொட்யூசர்.
அதற்காக தவழத் தொடங்கியிருக்கும் குழந்தையை விட்டு விட்டு எப்படி வெளியூர் போவதாம் ...?
மனசுதான் கேட்குமா?
இல்லை குழந்தைதான் தாங்குவாளா?
நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டு அகல்யா போய்விட்டாள். ஆனால் புரொட்யூசரைப் பிடித்து இழுத்து நிறுத்தி வைத்திருக்கிறான் ராமமூர்த்தி,
நீங்க கவலப்படாதீங்க. நான் சம்மதிக்க வைக்கறேன். எனக்கு உங்க நிலை நல்லா தெரியுது. அகல்யாவுக்கும் இந்தப் படம் நல்ல பிரேக் தரும்..."
- அவரைச் சமாதானப்படுத்தி தினத்தந்தி பேப்பரை எடுத்துப் படித்துக்கொண்டிருங்கள் என்று கொடுத்துவிட்டு மாடிக்குத் தாவி ஏறுகிறான்.
தலைச் சிக்கை எடுத்துவிட்டுக் கொண்டிருக்கிறாள் அகல்யா.
"அகல்.. என்ன நீ இப்படி மூஞ்சில அடிச்சி சொல்லிட்டு வந்துட்டே. எப்பேர்ப்பட்ட சான்ஸ் தெரியுமா இது?"
"நல்ல சான்ஸ்தான். இல்லேங்கலே. ஹரிணியை யார் பார்த்துப்பாங்க...?"
"இப்ப அதான் பெரிய சிக்கலாக்கும். அந்தக் கவலை உனக்கு எதுக்கு?"
"ஐய்யோ என்ன நீங்க... குழந்தைக்கு குறைந்தபட்சம் ஆறுமாசமாவது நான் பால் தரணும்."
''போறும். நீ இவ்வளவு நாள் தந்ததே போதும். ஃபாரெக்ஸ் செரலாக்னு ஏகப்பட்ட ஐட்டம் மார்க்கெட்ல இருக்கு. நான் பாத்துக்கறேன். நீ போய் அக்ரிமென்டல கையெழுத்துப் போடு..."
- ராமமூர்த்தி அவளை வளைக்க ஆரம்பித்துவிட்டான். இந்த விஷயத்தில் அவனொரு மலைப்பாம்பு. அவளுக்கும் தெரியும். அவனை கலக்கத்துடன் பார்க்கிறாள்.

