
-ஸ்ரீகி
திருமதி கமலா அவர்களுக்கு,
வாழ்த்துக்கள். நீங்கள் எங்கள் நிலா டீவியின்...
கமலா அந்த லெட்டரைப் படிக்குமுன் ஒரு அறிமுகம் மிஸஸ் ரமேஷ், கோபாலன் ஜயலக்ஷ்மியின் கடைசி மாட்டுப்பெண். ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு விஜய் மற்றும் சோனா என்று அழைக்கப்படும் எல்.கே.ஜி. சூர்யாவின் அம்மா, இவை தவிர கடைசியாக கமலா! வீட்டில் கல்யாணம் ஆகாத மச்சினன், நாத்தனார் யாரும் இல்லை. மாமனார் - மாமியார் ஆரோக்கியம்தான். வேலைக்காரி உண்டு.
கமலாவுக்கு பெங்களூர் குளிரில் காலை ஐந்து மணிக்கு எழுந்தால் இரவு பத்து மணி வரை நடுவில் கிடைக்கும் சில தீவுப் பிரதேசங்களைத் தவிர ஓய்வு இல்லை. பால்காரன், காப்பி, காய்கறி, பூஜைக்கு பூ, சோனாவின் பல் தேய்க்க கலாட்டா, காம்ப்ளான், ஷூ, ஸ்கூல் வேன், ஷேவிங் ப்ளேட், செக்புக்... எல்லாம் முடிந்து சாப்பிட உட்காரும்போது கமலாவின் முதல் தீவு - மணி பத்தரை! பிறகு ஜோஸப் ஸ்டோர்ஸ், மாவு மெஷின், அயர்ன் கடை அதற்குள் குட்டி ராட்சசன் வந்துவிடுவான். சில சமயம் கமலா மத்தியானம் குப்புறப் படுத்துக்கொண்டு. காரணமின்றி அழுதிருக்கிறாள். பிறகு சாயங்காலம் ரமேஷின் போன் ஆறு மணிக்கு, "கமலா, மீதி இன்னிக்கும் கொஞ்சம் லேட் ஆகும். நாளைக்கு போர்ட் மீட்டிங் இருக்கு... என்ன கோவமா? பதில் காணோம்?"
யாரிடம் கோபப்பட? அம்மாவின் லெட்டர் மாதிரி சாயங்கால போன்.