
-எஸ்.ஐ.ஆர்.
ஒன்றுக்கொன்று ஒத்துவராத இரண்டு பெரிய யூனியன்கள் ஒன்றாக இயங்கும் நிறுவனத்தில் ஒரு செக்ஷன் சூபரின்டென்டென்ட்டாக வேலை பார்ப்பதுதான் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகம் என்ற முடிவுக்கு வந்தான் ரங்கராஜன், அதுவும் ஒரு யூனியன் தலைவன் அவனது செக்ஷனிலேயே குப்பை கொட்டுகிற சோகம். எடுத்ததற்கெல்லாம் எதிர்ப் பேச்சு, தொட்டதற்கெல்லாம் கோபம். முணுக்கென்றால் வாக்-அவுட். கடல் மாதிரி பெரிய நிறுவனம் மேலே இருக்கிற 'ஆண்டவர்'களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. வேலை. வேலை நடந்தாக வேண்டும். பிரச்னைகள், வருவதற்குத்தான் இருக்கின்றன. சமாளிப்பதற்குத்தானே உனக்குச் சம்பளம் தருகிறோம்? போ. போய் மோது. வெல், அல்லது மடி. முடியலையா? கால் கடுதாசி எழுதிக் கொடுத்து விட்டுப் போ என்பார்கள்.
இன்றைக்கு வந்திருக்கும் பிரச்னை சாதாரணமானதல்ல என்று ரங்கராஜனுக்குத் தோன்றியது. ஏதோ ஒன்று விபரீதமாக நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு சொன்னது.
அது ஒரு பன்னாட்டு கார் தயாரிக்கும் நிறுவனம். ரங்கராஜன் அதில் அசெம்ப்ளி பிரிவின் பொறுப்பாளன். ஒரு நாளைக்குப் பதினைந்து கார்கள் - அசெம்பிள் ஆக வேண்டும். டயராகவும் இன்ஜினாகவும், பாடியாகவும், சீட்டாகவும், டாப்பாகவும் தனித்தனியே குவிந்து கிடக்கிற பொருட்கள் இணைந்து உயிர் பெறுவதற்கு சராசரியாக நாற்பது பேர் வியர்வை வேண்டியிருக்கிறது.