
-அசோகமித்திரன்
அந்த மண்ணெண்ணெய் அடுப்பிலிருந்து வந்த புகை சிவகாமியை உடனே அந்த அடுப்பிலிருந்து ஒரு துவாரத்தின் மூடியைத் திறந்து பார்க்கச் செய்தது. உண்மையில் அந்த அடுப்பு புதிதாக இருந்த நாட்களில் இப்படிப் பரிசோதிக்கத் தேவையில்லை. அடுப்பின் விளிம்பில் ஓரிடத்தில் குச்சி போன்றது ஒன்று வெளியே எவ்வளவு நீட்டிக்கொண்டிருக்கிறது என்பதைக் கொண்டு அடுப்பில் உள்ள எண்ணெய்யின் அளவை அறிந்துகொள்ளலாம்.
இப்போது அந்தக் குச்சி வேலை செய்வதில்லை. எல்லாப் பழங்கால அடுப்புகளைப் போல இதையும் மூடி திறந்து, ஈர்க்குச்சி விட்டு எண்ணெய் இன்னும் எவ்வளவு இருக்கிறது. என்று பார்க்க வேண்டும். இப்போது வரும் புகையின் வாசனை அதையும் தேவையில்லாது செய்துவிடும். உடனே எண்ணெய் விடவேண்டும். அல்லது அடுப்பை அணைக்க வேண்டும். அடுப்பை உடனே அணைக்காவிட்டால் திரிகள் எரிந்து கருகிப் போய்விடும். மீண்டும் திரிகளை அடுப்பில் பொருத்துவது கடினமான காரியம். ஆனால் சாதம் இப்போதுதான் கொதிக்கத் தொடங்கி யிருந்தது .
சிவகாமி மூன்று மாடிப்படி இறங்கி, மாடிப்படியோரத்தில் வைத்திருந்த கணவனின் சைக்கிள் விளக்கை அசைத்துப் பார்த்தாள். அதில் சிறிது எண்ணெய் இருந்தது. ஆனால் விளக்கை ஒரு சங்கிலி கொண்டு சைக்கிளோடு சேர்த்தும் பூட்டியிருந்தது. அந்தப் பூட்டுக்குச் சாவி வேண்டுமானால் தூங்கும் கணவனை எழுப்பியாக வேண்டும். தினமும் பயன்படுத்தப்படும் சாவியானால் அது அவனுடைய சட்டை அல்லது பாண்ட் பையில் இருக்கும்.
மூன்று வாரங்களுக்கு ஒருமுறை அவன் இரவு ஒன்பது மணியிலிருந்து ஐந்து மணி வரை வேலைக்குப் போகும்போது மட்டும் அந்த விளக்கை சைக்கிளில் மாட்டிப் பூட்டி வைப்பான். அந்த விளக்கு அவனுக்குப் பாதையைக் காட்டும் என்பதற்காக அல்ல. நெரிசலில்லாத நெடுஞ்சாலையில் இருட்டில் கனவேகமாகச் செல்லும் வண்டி ஏதும் அவன் மீது இடித்து விடக்கூடாதேயென்றுதான்.