
-ரமாமணி சுந்தர்
இந்த ஆண்டு கோடை விடுமுறையில் எந்தெந்த ஊர்களுக்குப் போகலாம் என்று எங்கள் குடும்ப அங்கத்தினர்கள் நால்வரும் ஒன்று கூடி ஒரு முடிவிற்கு வருவதற்குள் வீடு, உத்திரப் பிரதேச சட்டமன்றம் போல் அமளி துமளிப்பட்டது. அலுவலகத்திலிருந்து கிடைக்கும் எல்.டி.சி.யையும், கொளுத்தும் வெயிலையும் வீணடிக்காமல், சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர், மைசூர் எல்லாம் சுற்றிவிட்டு, பம்பாய் வழியாக தில்லி திரும்பலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட அடுத்த விஷயம், க்யூவில் நின்று ரயில் டிக்கெட்டுகள் வாங்குவது யார் என்பது. கல்லூரியில் படிக்கும் குழந்தைகள் இருவரும் பரீட்சை நெருங்குகிறது என்றும், என் கணவர் ஆபீசுக்கு நேரம் கழித்துப் போனால் வேலை போய் விடும் என்றும் பயமுறுத்தி தப்பித்துக்கொள்ள, க்யூவில் நின்று டிக்கெட் வாங்கும் அதிர்ஷ்ட்டத்தை நான் பெற்றேன்.
அவசர அவசரமாக வீட்டு வேலைகளை முடித்து, ஆட்டோவைப் பிடித்து, தெற்கு தில்லியில் உள்ள சரோஜினி நகர் ரயில்வே ரிசர்வேஷன் அலுவலகத்தை அடைந்தேன். ஒவ்வொரு கவுண்டரிலும் க்யூ அனுமார் வால்போல் நீண்டு, கட்டடத்திற்கு வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. உள்ளதில் நீளம் குறைவாகத் தோன்றிய ஒரு க்யூவில் போய் என்னை ஒட்டிக்கொண்டேன்.
பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, நடந்து முடிந்த பொதுத்தேர்தல், பா.ஜ.க அரசு, ஜெயலலிதா அம்மாவின் மறு அவதாரம், டைடானிக் திரைப்படம் என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் க்யூவில் நின்ற நாங்கள் அலசித் தீர்த்தோம். டிக்கெட் கவுண்டரை அடைய, குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்ற நிலையில், பொழுதைக் கழிப்பதற்கு வேறு என்னதான் வழி?