
-யோகி
கையில் இருந்த எல்லா பணமும் செலவழிந்த பின்தான், சேகருக்கு வீட்டு ஞாபகம் வந்தது. அம்மாவின் முகம் மனத் திரையில் தோன்றியது. பிறகு அப்பா, அக்கா, தங்கை என்று எல்லோரின் முகமும் வரிசையாய் தோன்றி மறைந்தன.
வயிறு பசித்தது. நேற்று இரவு சாப்பிட்டு விட்டு பீச்சில் படுத்துத் தூங்கியது. பையில் இருந்த பத்து ரூபாய் எங்கேயோ விழுந்துவிட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது. என்ன செய்வது? வீட்டிற்குப் போவோமா? போவதற்கு முதலில் பணம் இல்லையே.
வீட்டிற்குப் போனால் முதலில் அப்பா பெல்ட்டைக் கழட்டி விளாசு விளாசு என்று விளாசி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். ஒரு ரூபாயா... இரண்டு ரூபாயா.. இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு ஓடிய கோபம் அவருக்கு இருக்காதா? கண்ட துண்டமாய் வெட்டி விட வேண்டும் என்று எண்ணி இருப்பார்.
அக்காவின் வளைகாப்புக்காக அப்பா தவணைக்காரனிடம் இரண்டாயிரம் ரூபாய் வாங்கி வைத்து இருந்தார். அதை அல்லவா தூக்கி வந்து விட்டான்? கையில் இருந்த எல்லா காசும் செலவழிந்தபின்தான் உண்மை உறைக்கிறது. அப்பா பாவம் என்கிற எண்ணம் வருகிறது.