
-அடியார்க்கு நல்லான்
காப்பிக் குவளையை டீபாயில் வைத்துவிட்டு மீண்டும் சாய்ந்து, இமைகளை வெற்றாக மூடினான். காலையில் விசேஷத்திற்கு வராத அப்பாவை நினைத்து மனம் கனத்தது. இன்று அவன் பிள்ளைக்கு நாமகரணம். பிள்ளையின் பெயர் சூட்டு விழாவுக்கு மாமனார் வீட்டு ஜனங்கள் அலுவலக நண்பர்கள் என்று நிறைய வந்திருந்தார்கள்.‘அப்பா எங்க ரகு?' என்று கேட்டவர்களிடம் சாமர்த்தியமாய் பதில் சொல்லி சமாளித்தான். லக்னம் வந்ததும் அய்யர்முன் அமர்ந்து கணேச பூஜை செய்தான். சாஸ்திரிகள் கணீரென்று மந்திரம் சொன்னார். முடியும் நேரத் தில்
'அங்காது அங்காது சம்பவசீ...'
என்கிற வரிகளைக் கேட்டதும் யாரோ நினைவுப் பின்னலை சுண்டியிழுக்கிற மாதிரி...
உணர்வுகள் சரிய, உள்ளுக்குள் உடைந்தான் ரகுவரன்.
ரகுவரன் பிறந்து வளர்ந்த கிராமம் மங்கை நல்லூர். அப்பா ஆசிரியர். மகனை நல்லமுறையில் ஆளாக்க வேண்டும் என்கிற உத்வேகம் அவருக்கு. ஆண்பிள்ளை குடும்பம் சுமப்பான் என்று நினைத்தார். மகனை உத்தேசித்து மூத்தவள் சகுந்தலாவை கொஞ்ச படிப்போடு நிறுத்தினார். இருந்த சொற்ப நிலத்தை விற்று அவளின் கல்யாணத்தை. வருமானம் கருதி கடைசி பெண் நீலாவையும் பத்தாவதோடு நிறுத்தினார். அவருடைய உழைப்பும் கவனமும் மகனை நோக்கியே இருந்தது. ரகுவரன் ஊக்கமாய்ப் படித்தான். படிப்பு முடிந்த கையோடு மயிலாடுதுறை வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தான். அப்பா காட்டிய நெறியில் நின்றான்; கனகா வரும் வரை. கல்யாணம் முடிந்து கனகா வந்தாள். மாறத் தொடங்கினான் ரகுவரன்.