
-சுஜாதா
ஜகனுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் ஊரை விட்ட நினைவுகள், கொள்ளிடம் பாலத்தில் ஒலிக்கும் ரயில் வண்டி சப்தத்துடன் திரும்பின.
"சார், சீரங்கம் வந்திருச்சு. இறங்கணும்னிங்களே?" என்று எதிர் பர்த் ஆசாமி எழுப்பினார். விருத்தாசலம் வரை தொணதொணத்தவர்.
"நீங்க ஆர்மியா? பொட்டியைப் பார்த்தாலே தெரியுது நம்ம ஆர்மியைபோல ஸ்ட்ராங்."
"இது டில்லி தர்யாகஞ்சில வாங்கினதுங்க." க்ராப் வெட்டு காட்டிக் கொடுத்துவிடுகிறது.
'டில்லில வேலைங்களா?"
''இல்லைங்க பார்டர்ல போஸ்டிங் ஆயி கமிஷன் முடிஞ்சு திரும்பறேன்."
'சீரங்கத்தில எங்கங்க?"
"கிழக்கு அடையவைளைந்தான்."
"வடபாதியா, தென்பாதியா?"
"தெற்கு."
"அங்க வீடு இருக்குதா?"
"ஆமாங்க."
"கல்யாணம் ஆயிருச்சா?"
"இல்லைங்க. அண்ணனுக்கு இப்பத்தான் கல்யாணம் ஆவுது. கல்யாணமே பண்ணாம இருந்தாரு."
"அப்ப உங்களுக்கு லைன் க்ளியர்னு சொல்லுங்க!"
"ஒருவிதத்தில் அப்படித்தான்!"
"வடக்கே பொண்ணு கிண்ணு பாத்து வெச்சிருக்கீங்களா, ஆர்மிக்காரராச்சே!" அவர் காலாட்டிக்கொண்டே சிரித்தபடி கேட்டார்.