
-கிருஷ்ணா
அர்ஜுனன் அம்பின் குறி தவறாத இலக்குபோல, சரக்கென நிலை குத்தி நின்றது என் பார்வை.
ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன்.
அவளா? உணர்ச்சிகளின் கொந்தளிப்பையும் மீறி புத்தி அதட்டியது.
"எப்படி அவளாயிருக்க முடியும்? அவள் வயது இப்போது நாற்பத்தேழாக இருக்க வேண்டும்! இவளோ பதினெட்டு வயது இளம் பெண்!"
பிளாட்பாரத்தில் நடந்துவரும் அவளையே பார்த்தேன்.
அதே குதிரை நடை, முகத்தில் சுடர்விடும் தன்னம்பிக்கை, செப்பு வாய், மெல்லிய உடல் வாகு, அட, அதேபோல கறுப்பு மச்சம் மூக்கின் நுனிமேல்!
மூச்சடைத்துப் பார்த்தேன் அவளை.
ரயில் புறப்பட இன்னும் கால் மணி நேரம் இருந்தது.
"யார் அவ? தெரிஞ்ச பெண்ணா?"
என் மனைவி முழங்கையால் இடிக்கவும் மூச்சு சீரானது.
"பார்த்த முகமாய்த் தெரியுது சீதா. ஆனால், ஞாபகம் வரலே."
அக்மார்க் பொய்! மறக்கக்கூடிய முகமா அது. ஆறு வருடம் தாம்பத்யம் நடத்திய உருவமாயிற்றே!
எனக்குள் பறவைகளின் சடசடப்பு!
அந்தப் பெண் எங்கள் கம்பார்ட்மெண்ட்டிலேயே ஏறி, எங்கள் எதிரிலேயே வந்து அமர்ந்தாள்.
வாயில் சூயிங்கம் போலும், மெல்லும்போது குழி விழுந்தது.