
-அருண் சரண்யா
ரயில் சக்கரங்கள் கண்ணிமைப்பதற்குள் பாலகிருஷ்ணன் தலைக்குமேல் வேகமாகப் பயணம் செய்தன. பிறகு ஒரு நிமிடத்திற்கு முழு அமைதி...
"ஹையா, ரயில் நம்ம தலைக்கு மேலே போச்சு பார்த்தியா?" என்று குதூகலம்தான் சுரங்கப் பாதையில் நின்றுகொண்டிருந்த பாலகிருஷ்ணன் தான் சுமந்துகொண்டிருந்த இரண்டு வயது மகனிடம்.
குழந்தை அப்படி ஒன்றும் மகிழ்ந்ததாகத் தெரியவில்லை. அதை சிரிக்க வைப்பதற்குள் இதுவரை தலைக்குமேல் நான்கு ரயில்கள் ஓடும் வரை பொறுத்தாகிவிட்டது. இனிக் கிளம்ப வேண்டும். தலைக்குமேல் வேறு வேலைகள் இருந்தன.
குழந்தையின் முகம் உர்ரென்றிருந்தது. 'அப்படியே அம்மா மாதிரி' என்று நினைத்தான். உடனே அந்த நினைப்பை யாராவது கேட்டுவிட்டு, தவறாகப் பொருள் கொள்வார்களோ என்று எண்ணியதுபோல அதாவது இவன் அம்மாவை மாதிரி அதாவது என் மனைவி மாதிரி. என் அம்மா அப்படி இல்லை. சொக்கத் தங்கம். மலர்ந்த பரங்கிப்பூ. அதிகபட்சம் சிரிப்பு. குறைந்தபட்சம் புன்னகை - இது அம்மாவின் முகத்தில் நான் கண்ட இரண்டு எல்லைகள்.'
ஆனால் பாமா வேறுமாதிரி மெளனமாய் வறுத்தெடுப்பாள். அல்லது விஷம் கொட்டுவாள்.
"உங்க அக்காவை மார்க்கெட்டிலே பார்த்தேன். உங்ககிட்டே ஐயாயிரம் கடன் கேக்கப் போறாளாம். நாம இருப்பது வாடகை வீடு. ஆனா அவ சொந்த வீடு கட்றதுக்கு நம்ம பணம் தேவைப்படுது. ஏதோ யோசிச்சு முடிவெடுங்க."