
-பா.ராகவன்
பத்து நிமிஷத்துக்கு முன்னால், பிரச்னை எதுவும் இல்லாமல், சுமுகமாக நான் தற்கொலை செய்துகொண்டேன். முன்னதாக, இந்தக் காரியத்துக்கு இன்னார்தான் காரணம் அல்லது காரணம் இல்லை என்று கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை. என் மரணம், உள்ளூரில் ஒரு செய்தியாகக் கூடத் தெரிந்துவிடக்கூடாது என்பதால்தான் நாநூறு கிலோ மீட்டர் தள்ளி வந்து செத்துப் போனேன். இதற்குமேல் நான் இருப்பது எத்தனை அவமானமோ, அதைவிடப் பெரிய அவமானம், நான் இறந்துபோனது வெளியே தெரிவது. முக்கியமாக, வைதேகிக்குத் தெரியக்கூடாது.
இருட்டு விலகாத ஆற்றங்கரையில் என் உடம்பு குப்புறக்கிடந்தது. இப்படித்தான், எப்போதாவது குப்புறப் படுத்திருந்தால் வைதேகிக்குக் கொண்டாட்டமாகப் போய்விடும். சப்தமில்லாமல் பின்னால் வந்து, தடாலென்று மூச்சுப் பிடிக்க முதுகில் விழுந்து கட்டிக்கொள்வாள்.
ஒரு கணம் பேச்சு மூச்சு இல்லாமல் போய்விடும். அப்புறம் 'வலிக்கிறதாடா?' என்று அப்பாவியாகக் கேட்டுவிட்டுத் தடவிக் கொடுப்பாள். அதிர்ச்சி தருவது அவளுக்குப் பிடித்த விளையாட்டு. எல்லாமே
குட்டிக்குட்டி அதிர்ச்சிகள். இதெல்லாம் போரடித்துவிட்டதோ என்னமோ? மொத்தமாக சொல்லிக்கொள்ளாமல் ஒரு நாள் ஓடிப்போனாள். மாபெரும் அதிர்ச்சி என்று சொன்னால்கூட அதன் வீரியம் குறைச்சலாகத்தான் வெளிப்படும். என் உடம்பு கிடக்கிற கோலத்தை நீங்கள் பார்க்கவேண்டும். சிலுவைக்குப் பதிலாக மணலில் அறையப்பட்ட ஏசுநாதர் மாதிரி, கைகால்கள் ஹாவென்று விரிந்து கிடக்க, மகத்தான தோல்வியின் அவமானக் கறை முகத்தில் அப்பட்டமாகப் படர்ந்து, ஒழுகிக் காய்ந்து கிடக்கிறதைப் பார்ப்பீர்கள்.
அவள் யாரோடு ஓடிப்போனாள் என்பதே தெரியாததுதான் என் முதல் அவமானம். ஏன் போனாள், எப்போது, எப்படிப் போனாள், பகலிலா, இரவிலா என்பதும் தெரியாதது, இரண்டாவது. நாலு வருஷமாக, எனக்கே எனக்கு என்று பிரத்தியேகமாக ஒரு ஜீவன் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த அறியாமை மூன்றாவது.