
-ரிஷபன்
நான் முதலில் அவளைக் கவனிக்கவில்லை. பத்தரை மணிக்கு இலை போட்டுவிடுவதாய் வாக்களித்திருந்தேன்.
பைனாப்பிள் ரசம் அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்தது. பருப்பு வடை இன்னும் பாதி பாக்கி இருந்தது. பால் பாயசம் இன்னும் பக்குவ நிலைக்கு வரவில்லை.
திரும்பினால் நந்தினி கையில் எவர்சில்வர் பேலாவுடன்.
"நீயா..." என்றேன் என்னையும் மீறி,
"சந்துரு..."
அவள் கண்களிலும் திகைப்பு.
"நெய் வேணுமாம்... சாஸ்திரிகள் கேட்டார்."
"டேய் கிச்சா... நெய்த் தூக்கை எடு.."
வாங்கி பேலாவில் ஊற்றினேன்.
"போதுமா..."
தலையசைத்தாள். எம்.காம் படித்த இளைஞன். அதுவும் நந்தினியைக் காதலிப்பதாய்ச் சொன்னவன் கையில் ஜாரிணிக் கரண்டியுடன் எதிர்பாராத ஒரு திருமண மண்டப சமையற்கட்டில் நின்றால் திகைப்பு வராமல் என்ன செய்யும்?
"அப்பாவுக்கு உடம்பு முடியலே.. என்னை அனுப்பினார். டோட்டலா காண்டிராக்ட் எடுத்திருக்கோம். ஏதாவது ஒரு சின்னத் தப்புன்னாலும் பேர் கெட்டுரும்."
என் பாட்டுக்கு வேலையில் ஆழ்ந்தபடி பதில் சொன்னேன்.
போய்விட்டாள்.
மணி என்னைப் பார்த்தார்.
"யாருடா அது..."
"தெரிஞ்சவள்."
"தெரிஞ்சவளா... இல்லே, ரொம்ப "வேண்டியவளா?"
அவரை நிமிர்ந்து பார்த்தேன். கண்களில் குறும்பு கொப்பளித்தது.