
-கிருஷ்ணா
"சியாமளி வரப்போகிறாள்."
பக்கத்து வீட்டு மாமி, அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருந்தது காதில் விழ, 'ஜிவ்'வென்று ஓர் இனம் புரியாத எதிர்பார்ப்பு என்னுள் எழுந்தது.
மடத்தனமான நினைப்பு என்று புத்தி சுட்டிக்காட்டினாலும் மனசு சமாதானமாகவில்லை.
எனக்கு ஒன்பது வயசு இருக்கும்போதுதான் முதன்முதலாகப் பக்கத்து வீட்டுக்கு வந்தாள்.
பக்கத்து வீட்டு மாமியின் பையன் சுந்தர்தான் பெருமையுடன் அறிமுகப்படுத்தினான்.
"டேய், இது எங்க சியாமளி அக்கா."
நான் அவளைப் பார்த்தேன்.
''உன் பெயர் என்ன?" என்று கேட்டுத் தலையைச் சிலுப்பி விட்டாள்.
"மணி."
"டிங்டிங் மணியா?" என்று கேட்டதும் என் நண்பர்கள் சிரித்து, கேலிப் பார்வை பார்த்தனர்.
அவமானத்தில் முகம் சிவக்கத் தலை குனிந்தேன். லேசாய்க் கிண்டல் செய்தாலும் கண்ணில் நீர்திரளும் இரக்கசுபாவி நான்.
என் முக மாறுதலைக் கவனித்தவள் பதறிப் போனாள்.
"மன்னிச்சுக்கடா. இதுக்குப் போய் கண்கலங்கி... ப்சு" என்று மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.
அந்தக் கதகதப்பில் என் அழுகை மறைந்து போய் பரவசமானேன். அப்படியே இருக்க மாட்டோமா என்ற ஏக்கம். சட்டென அவள் மேல் ஒரு பிரேமை.
அதற்குப் பிறகு அவள் அங்கிருந்த ஒரு மாசமும் நான் அவளைச் சுற்றியே வந்தேன். அவளுக்கும் என்னைப் பிடித்திருக்க வேண்டும்.
"மணி, எங்கேடா போயிட்டே?" என்பாள், நான் கடைத்தெருவுக்கு அம்மா அனுப்பிப் போயிருந்தால்கூட.