
-சீதா ரவி
தம்ளரில் மிகக் கொஞ்சமாய் டிகாக்ஷன் இருந்தது. பொங்கி வழிந்து அடுப்பிலும் மேடையிலும் குளம் கட்டியதுபோக மீதி பால்,
எரிச்சலுடன் பாலை வேறு பாத்திரத்துக்கு மாற்றிச் சுடவைத்தாள் கல்யாணி. முக்கால் தம்ளருக்கும் குறைவாகவே காப்பி கிடைத்தது.
ஏதோ ஒரு வாரப் பத்திரிகையில் அறிவுரை படித்ததுண்டு. 'உங்கள் கணவன் ஐம்பது சதவிகித வீட்டு வேலையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கணக்குப் போட்டு எதிர்பார்க்காதீர்கள்...
மூன்று நாள் பெங்களூரில் சேல்ஸ் பிரமோஷன் செமினார் முடித்து வீடு திரும்பினால் ஒரு முழு தம்ளர் காப்பியை எதிர்பார்க்கலாமா...? - கல்யாணிக்கு அந்த அலுப்பிலும் கேள்வி எழுந்து சிரிப்பூட்டியது. பத்திரிகைகளில் இந்த விதண்டாவாதக் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்காது.
கடைசி வாய் காப்பியை விழுங்குகையில் சங்கரன் வேகமாக உள்ளே வந்தான். டென்னிஸ் ராக்கெட்டை சோஃபாவில் போட்டான்.
"கல்யாணி..." ரயில் அழுக்குடன் அவன் வியர்வையும் சேர்ந்தது.
''விடுங்க! மேடையெல்லாம் துடைக்கணும். இப்படியா பாலைப் பொங்க விடறது..?"
"ஸாரி! எனக்குக் காலைல சாப்பாடு வேண்டாம். சீக்கிரம் போகணும். உன் செமினார் என்னாச்சு...? சாயந்தரம் சொல்றியா? சீக்கிரம் வந்துடு..."
குளித்துத் தயாராவதற்குள் போய்விட்டான்.
ஈரத்துணி கொண்டு அடுப்பையும் மேடையையும் துடைக்க ஆரம்பிக்கவும் போன்...