
-லைஃபான்
கண், காது, மூக்கு போன்ற உறுப்புகள் மனிதவேடம் தரித்த அத்தனை பேருக்கும் பொதுவான அம்சம் என்றாலும், இவற்றுள் ஏதாகிலும் ஒன்று அபூர்வமாய் யாரேனும் சிலருக்கு வித்தியாசமான 'சைஸில்' அமைந்து, வேடிக்கை காட்டுவதுண்டு!
இந்த வகையில் காஞ்சனமாலாவின் கவலைக்குரிய விஷயம் -
காது!
இரண்டு பேருக்கான ரேஷனை ஒருவருக்கே அள்ளிவிட்டதுபோல் பெரிய காது!
மேற்படி மெகா காதுகளுக்குத் தோடு போட்டுக்கொள்ளப் பிரியப்படும் பட்சத்தில், ஒட்டியாணத்துக்கான கிரயத்தை விரயம் செய்ய வேண்டி இருக்கும் என்பதால் காஞ்சனமாலா தோடு போட்டுக்கொள்ளவில்லை!
செல்வி(27) காஞ்சனமாலா எனக்கு ஆன்ட்டி!
'ஆன்ட்டி' என்ற ஆங்கிலப்பதத்துக்கு தாங்கள் 'எதிரி' என அர்த்தம் பண்ணிக்கொண்டிருந்தால்கூட பரவாயில்லை; அந்த அளவுக்கு என்னை அன்னாருக்கு (அவ்வப்போது) பிடிக்காது!
என்றாலும் -
அடியேன் 'ஆன்ட்டி' எனப் பதப்பிரயோகம் செய்தது, அப்பாவின் ஒன்றுவிட்ட தங்கை என்ற உறவுமுறையை விளம்ப!
பெற்றோரை இழந்த நாள் முதல் அப்பாவின் பாதுகாப்பில் உள்ள ஆன்ட்டி, என்னிலும் ஈராண்டு சீனியர். மாநில அரசின் ‘கொடுக்கல் - வாங்கல்' இல்லாத அலுவலகத்தில் தட்டச்சர். வீட்டின் முகப்பு அறையில் வாசம்...
போன வாரம்
மகளிர் மன்ற ஆண்டு விழாவுக்கு மகிழ்ச்சி பொங்கப் புறப்பட்டுப்போன ஆன்ட்டி, திரும்பி வந்தபோது தேவைக்கதிகமாய் துக்கத்தைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்...
காரணம் தெரியவில்லை. யார் கேட்டும் பதில் இல்லை. ஒருவழியாய் அப்பா வந்து வினவியபோதுதான் விவரம் தெரிந்தது.