
-ஷபீனா
"அன்னை சாரதா முதியோர் இல்லம்" என்ற பித்தளைப் போர்டு நித்யாவை வரவேற்றது. பெரிய இரும்பு கேட்டைத் திறந்து நடைபாதையில் நடந்தவாறே 'நிருபரி'ன் கண்ணால் அந்தக் கட்டடத்தை அளந்தாள் நித்யா.
ஒரு வார இதழின் மாணவ நிருபர் நித்யா. பி.எஸ்ஸி., படித்துக்கொண்டிருக்கிறாள். பெரிய பங்களா மஞ்சள் வெய்யிலில் தகதகத்தது.
''யாரைப் பாக்கணும் தாயி...?" ஒரு கிழவியின் குரல் நித்யாவை நிறுத்தியது.
''ம்... இங்கே கமலவல்லி அம்மா இல்லே, அவுங்களை..."
''ஓ.. அக்காவையா... போய்க்கோ... ஆபீஸ் ரூம்முலேதான் இருக்காங்க.''
வராண்டா படியேறி -
"மேடம்... நான் வரலாமா...?"
சற்று ஸ்தூலம். சிவந்த மேனி. படித்த களை. அழகான மூக்குக் கண்ணாடி முகம்.
"வாங்க... வாம்மா...! கமலவல்லியின் அழைப்புக் குரல் நித்யாவை உள்ளே அனுப்பியது.
"நமஸ்காரம். நான் நித்யா... 'வார மல்லிகை' நிருபர்.''
"ஒ... வாம்மா... உட்காரு..."
ஐந்து நிமிட மவுனத்தில கமலவல்லியை அளந்தாள் நித்யா. பெரிய பணக்காரக் குடும்பம். கணவர் ரிடையர்டு, ஐ.ஏ.எஸ். கமலவல்லியின் பாழ் நெற்றியில் அவர் மறைந்திருந்தார்.
ஏகப்பட்ட சொத்து சுகங்களை வீணாக்காமல் இப்படி ஒரு முதியோர் இல்லம் துவக்கி சேவை செய்கிறாள் - இவை நித்யாவுக்குத் தெரிந்தவை.
"ஆரம்பிக்கலாமா...?" - நித்யா.
''இரும்மா... முதல்லே இந்த இல்லத்தைச் சுற்றிப் பாத்துக்க... பிறகு பேட்டி."