
-அருண் சரண்யா
நாளையிலிருந்து வேலைக்குப் போகப் போகிறோம் என்பதில் கொஞ்சம் பெருமையாகவும் கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தது சிந்துவுக்கு.
"சிந்து, ஒரு க்ளாஸ் தண்ணி கொடேன்" அண்ணன் ரமணனின் செல்லக்கட்டளை. எழுந்தாள். "அப்படியே எனக்கும் வெந்நீர் கொண்டு வாம்மா. மாத்திரை போட்டுக்கணும்" என்றார் அப்பா.
சிந்துவுக்கு அலுப்பாக இருந்தது. 'அதெப்படி இந்தத் தண்ணீர் விஷயம் எப்பொழுதும் தன் தலையிலேயே விழுகிறது?'
சாப்பிடுவதற்காக தட்டுக்களை வைப்பது தங்கை ராதாவென்றால், சொம்பு, தம்ளர்களில் தண்ணீரை நிரப்பி வைப்பது சிந்துவின் கடமை.
அம்மா தினமும் மதிய டிபன் பொட்டலங்களைக் கட்டி விடுவாளென்றாலும் எல்லோருக்கும் தண்ணீர் நிரப்பி வைப்பது. சிந்துவின் பொறுப்பு. அப்பாவுக்கு வெதுவெது வென்னீர், வேலைக்குப் போகும் ரமணனுக்கு சின்ன வாட்டர் கூலரில் ஜில் நீர், சைனஸ் தொந்தரவுள்ள ராதாவுக்கு வெறும் நீர். இப்படிப் பார்த்துப் பார்த்துப் பங்கீடு செய்ய வேண்டும். முணுமுணுக்கக் கூட முடியாது. ("வீட்டுலேதானே இருக்கே. செய்தா என்ன தேய்ஞ்சா போயிடுவே?").