

-அருண் சரண்யா
சரியாகத் தூங்காததில், காலையில் விழித்தபோதே ரேவதியின் கண்களும் தலையும் வலிக்கத்தொடங்கின.
'அடுத்த வாரத்திலிருந்து கம்பெனியில் அட்டென்டென்ஸ் ரெஜிஸ்டர் இருக்காது. பதிலுக்கு ஏதோ கருவியை நிறுவப்போகிறார்களாம். அடையாள அட்டையை அதில் பொருத்தி எடுத்தால், தான் அலுவலகத்தில் நுழையும் நேரம் பதிவாகிவிடும்'.
இதை நினைத்தபோதுதான் ரேவதிக்கு ரொம்ப பயமாக இருந்தது. வாரத்துக்கு மூன்று நாட்களாவது கம்பெனிக்குத் தாமதமாகப் போகும்படி நேருகிறது - என்னதான் முன்னாளே பல விஷயங்களை திட்டமிட்டு செய்துகொண்டால்கூட. இதுவரை போர்மெனிடம் "சாரி சார்" என்று தொடங்கி பஸ் லேட், வழியில் ஊர்வலம், சாலை விபத்து, பையனுக்கு ஜூரம், குழாயில் தண்ணீர் வரலை, திடீர் விருந்தாளி என்று ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொன்று என்று கூறியாகிவிட்டது. நேற்று போர்மென் காரமாகவே கூறிவிட்டார். "சம்பளம் மட்டும் சமமாக வாங்கிக்கிறீங்க இல்லே? அப்ப ஆம்பிளைங்க மாதிரி சரியான நேரத்துக்கு ஆபீசுக்கு வரணும். எப்பவாவது லேட்டானாலும் உட்கார்ந்து வேலையை முடிச்சுட்டுப் போகணும். அதெல்லாம் இல்லையே! இனிமே லேட்டா வந்தா நிர்வாகத்துகிட்டே சொல்லிடுவேன். மெமோதான்."