
-அருண் சரண்யா
தீவிர சிகிச்சைப் பகுதியில் படுத்திருந்தார் பிரபல தொழிலதிபர் ராமானந்த். கூரிய கத்தியை ராமானந்தின் கழுத்தில் இறக்கியிருந்தான் குற்றவாளி.
'யார் குற்றவாளி?' பிடிபடவில்லை.
"அண்ணனோட அலறல் மட்டும் அந்த நடுராத்திரியிலே கேட்டுச்சு. மாடிக்கு ஓடிப் போய்ப் பார்த்தா அவர் ரத்த வெள்ளத்திலே கிடக்கிறாரு. அறைவாசலிலே வாட்ச்மேன் ரத்னம் துடிச்சிக்கிட்டிருக்கான். அவன் தோளிலேயும் ஒரு போடு போட்டிருக்கான் அந்தக் கொலைகாரன்" என்றாள் கேவல்களுக்கிடையே சுலோசனை - ராமானந்தின் தங்கை. ராம், லக்ஷ்மண் என்ற இரட்டையர்களின் தாய். ராம் மட்டும் சம்பவம் நடந்த அன்று அவளுடன் இருக்க, லக்ஷ்மண் தன் தந்தையோடு ஊரில் தங்கிவிட்டான்.
கட்டுப் போட்டிருந்த தன் வலது தோளைப் பார்த்தபடியே கதறத் தொடங்கினான் ரத்னம். "அந்தப் பாவி பின்பக்கமாக ஏறியிருக்கணும் சார். மாடி வராண்டாவிலே தயங்கி ஒளிந்து ஒரு உருவம் போவதைக் கவனித்ததும் நான் வேகமாகத்தான் மாடியேறினேன். ஆனால் நான் ஐயாவின் அறைக்குள்ளே நுழைவதற்குள்ளே முதலாளியைத் தாக்கிட்டான் அந்தக் கொலைகாரன். தடியோடு அவன் மேலே வேகமாகப் பாய்ஞ்சேன். ஆனால் தன் கையிலே இருந்த கத்தியாலே என் வலது தோளிலே வேகமா ஒரு போடு போட்டுட்டான். எனக்குக் கண்ணே கிறுகிறுத்துப் போச்சு.''