
-அருண் சரண்யா
காதலியை முத்தமிட ஆசைப்படுவது இயல்பான ஒன்றுதானே?
நீங்கள் 'சுலபமாக எடுத்துக்கொள்ளும்' பிரிவு என்றால் "இதெல்லாம் கொசு ஆசை. மைக்ரோ லெவல் விஷயம்" என்று ஏளனப்படுத்தலாம். மரபு மாறாத பழமைவாதி என்றால்கூட, அப்படி 'ஆசைப்படுவதில்' தப்பு இல்லை என்று ஒத்துக்கொள்வர்கள்.
ஆனால் இப்படி ஒரு இயற்கையான எண்ணம் வந்ததற்கே தன்னை வெறுத்துக்கொண்டான் பரசு.
'நேரடியாக ஊர்மியிடமே தன் ஆசையை வெளியிட்டாலென்ன?' என்று மின்னலாக யோசனை தோன்ற, அப்படி நினைத்ததற்காகத் தன் தலையில் ஓர் இடியை (குட்டு) இறக்கிக்கொண்டான்.
இருதலைக் காதல்தான். என்றாலும் ஊர்மியின் ரேஞ்ஜே தனி. அவள் பொத்திக் காக்கப்பட வேண்டியவள். வெள்ளை உள்ளக்காரி.
"உங்களை ரொம்ப உயர்வாக நினைச்சிருந்தேன் பரசு. கடைசியிலே நீங்களும் சராசரிதானா?" என்று அவள் கேட்டுவிட்டால்? அப்படிக் கேட்டுத் தொலைத்துவிட்டால் கூடப் பரவாயில்லை. கண்ணீர் பொங்கும் கண்களோடு தன்னைக் குற்றம்சாட்டுவதுபோல் பார்த்துவிட்டால்?
பரசுவின் எண்ண ஓட்டங்களுக்குக் காரணம் இருந்தது.