
-சுப்ரமணியன் ரவிச்சந்திரன்
"மாப்ள... என்னடா இன்னும் கொக்கைக் காணும்... எங்க போய் ஒழிஞ்சான்... மணி அஞ்சு பத்தாவுது. ச்சே... பாஸ்கரன் நகத்தைக் கடித்துத் துப்பினான்.
சமீப காலமாக இந்த பெஞ்சுகளில் உட்கார முடியாமல் பஸ்களின் புகையும், சத்தமும். புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுவதற்காக இந்த மைதானத்தில் தாற்காலிக ஏற்பாடு. ஆயிற்று ஒன்றரை வருடம்... பஸ்கள் உழுது உழுது நாற்று நடத் தயாரான நிலம் போல சேறு.
பாஸ்கரன், சீனா, மூர்த்தி, சத்யன் என்கிற நண்பர்கள் இங்கு நினைவு தெரிந்த நாளாக வருபவர்கள். ஆரம்பத்தில் கிரிக்கெட் விளையாடினார்கள். அப்புறம் அப்படியிப்படி ஆகி பேசவும் முக்கியமான முடிவுகள் (பெரும்பாலும் சினிமா) எடுக்கவும் இதை ஒரு செயலகமாக ஆக்கிக் கொண்டனர்.
இந்த நால்வர் மட்டும்தான் இவர்கள் என்பதில்லை. வேறு வேறு ஊர்களில் வேலை நிமித்தம் போயிருக்கிறார்கள் சிலர். வாரம் ஒருநாள் வரும் மாதவன் போன்றோரும் உண்டு.
பொங்கல், தீபாவளி, ஆவணி அவிட்டங்களில் பெஞ்சு நிரம்பி வழியும். ஒவ்வொரு வார்த்தைக்கும் சிரிப்பு வெடித்து அந்த பிரதேசத்தையே அதிர வைக்கும்.
அனைவருக்கும் சத்தியன் இருக்க வேண்டும்.
சத்தியன் சரித்திரக் கதைப் பிரியன். தன்னை ஒரு கருணாகர பல்லவன் என்றே நம்பினான். தனக்குப் பிரியமான நபர்களின் வரிசைக்கொப்ப பெயர்களைச் சூட்டி அவ்வாறே அழைப்பான். பழுவேட்டரையன், ஹிப்பாலஸ், கலிங்கத்துப் பீமன், காரி, லங்காபுரி தண்டநாயகன்.