
-சித்ரன்
என்ன இருந்தாலும் பாலுவை அப்படி அறைந்திருக்கக் கூடாதென்று இப்போது தோன்றுகிறது. அந்த நிமிடத்தில் கொதித்த கோபத்தில் அவனை அறைவதைத் தவிர வேறெதுவும் செய்திருக்கவும் முடியாதென்றும் தோன்றியது. வாசலில் அத்தனை பேருக்கு முன்னால்தான் அது நடந்தது. அப்பாவை அவன் மோசமான வார்த்தைகளால் திட்டும்போது பின்னே பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியுமா?
திட்டினவன் வேறு யாராவதாக இருந்திருந்தால் நிச்சயம் கைகால் எல்லாம் எடுத்திருப்பேன். பாலு என் அண்ணன்காரன் என்பதால் வெறும் அறையோடு தப்பித்தான். ராஸ்கல். மேலும் அவன் நிதானத்திலா இருந்தான்? ரோட்டில் கூடியிருந்த கும்பலுக்கு நடுவே அவன் வாயும் காலும் நிலையில்லாமல் தடுமாறிக்கொண்டிருந்தன. சாயங்காலமே ஊற்றிவிட்டு வந்துவிட்டான் போல்.
வழக்கமாய் தண்ணி போட்டுவிட்டு அவன் பண்ணுகிற ரகளைகள் எல்லோருக்கும் பழகிவிட்டதுதான். அதுபோலத்தான் இன்றும். மத்தியானம் டீசன்டாய்த்தான் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். திரும்பி வரும்போது நடந்து வந்தான். உடை, தலை எல்லாம் கலைந்திருந்தது. வண்டி இல்லை. வந்தவன் வீட்டுக்குள் வராமல் நடுரோட்டில் சம்மணம் போட்டு உட்கார்ந்தான். அவன் நிதானத்திலில்லை என்று புரிந்துவிட்டாலும் ரோட்டில் உட்கார்ந்தது வழக்கத்துக்கு மாறாய் இருந்தது. சைக்கிளில் ஒருவன் அவனைத் தவிர்த்து வளைத்து விலகிக் கடந்து போனான். எதிர் வீட்டில் யமுனாவின் அம்மா பார்வையில் கேள்விகளோடு எட்டிப் பார்த்தாள்.