
-கிருஷ்ணா
"சந்தைப் பேட்டை இறங்குங்க" என்று கண்டக்டர் சொன்னதும் விலுக்கென எழுந்தேன். பயண அசதியோ, பசியின் களைப்போ - லேசாகக் கண் அயர்ந்துவிட்டேன் போலும். என்னுடைய ஒரே அரக்கு நிற சூட்கேசை எடுத்துக்கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினேன். கிராமத்துக் காற்று என் உடலை வருடி, வரவேற்றது. கிட்டத்தட்ட பதினைந்து வருடம் இருக்குமா இங்கு வந்து....?
வளைந்து செல்லும் செம்மண் பாதையில் நடந்தேன். பெட்டி சற்று கனமாயிருந்ததால் கை வலித்தது. கொஞ்ச தூரத்திலேயே டீக்கடை வந்தது. ஒரு இளைஞன் லாவகமாக டீயை ஆற்றிக்கொண்டிருந்தான். வெள்ளையனின் மகனாய் இருக்குமோ....? ஊர் அதிகமாக மாறியிருக்கவில்லை. அதே டீக்கடை, மளிகைக்கடை, கோயில், சிதிலமடைந்த சில வீடுகள்... சில கட்சிக் கொடிக் கம்பங்களைத் தவிர, புது வரவுகள் ஏதும் கண்ணில் படவில்லை. கோயிலின் இடதுபுறம், நான்காவது வீடுதான் என்னுடையது. அதாவது எங்கள் பூர்வீகச் சொத்து.
அம்மாவுக்கு என் கடிதம் கிடைத்திருக்குமா? ஒரு வாரம் முன்பே எழுதிவிட்டேனே. கடிதம் கிடைத்திருந்ததன் அடையாளமாய், வாசலிலேயே அம்மாவின் உருவம் தெரிந்தது. அம்மாவைக் கண்டதும் மனத்தில் கொப்பளித்த பாசத்தை மறைக்க முடியவில்லை. நடையைச் சற்று எட்டிப் போட்டேன்.
"வாடா!" என்று வரவேற்றாள். அப்போதுதான் கோலம் போட்டு முடித்ததன் அடையாளமாய்க் கையின் விரல்களில் கோலப் பொடி வெள்ளைத் திட்டுகளாய். அருகில் மாவு டப்பா.
''சௌக்கியமாம்மா?"
''ம். ம்! உள்ளே வா!" என்று நடந்தவளைப் பின்தொடர்ந்தேன்.
வீட்டின் வாசலை மிதித்ததும் ஒரு சிலிர்ப்பு. எத்தனையோ முறை முன்பெல்லாம் வந்தபோது உணராத சிலிர்ப்பு. மொத்தமாய் வந்து விட்டதனாலோ....? கூடத்தின் கட்டிலின் மேலே பெட்டியை வைத்தேன். விரல்களில் பெட்டியின் பிடியின் தடம். விரல்களை உதறிக்கொண்டேன்.