

-நிகில் முத்தையா
காலையில் எழுந்தது முதல், செல்வி பம்பரமாய் இயங்கிக் கொண்டிருந்தாள்.
இட்லி வெந்துவிட்டது. அடுத்த ஈடு ஊற்றினாள். மிக்ஸியில் இருந்து சட்னியை ஊற்றித் தாளித்துக் கொட்டினாள்.
குக்கரை இறக்கியாகிவிட்டது. எலுமிச்சை சாதம் கிளறி, கேரட் பொரியல், அவ்வளவுதான்.
கவிதாவும், சின்னபாப்பாவும் டிபன் காரியரில் எடுத்துக்கொள்வார்கள். இரண்டு பேரையும் உலுக்கி உட்காரவைத்தாள்.
"பால்" என்று கத்திய சின்ன பாப்பாவிற்கு பால் கொடுத்து, பின்பக்கம் அனுப்பினாள்.
கவிதாவுக்கு எண்ணெய் வைத்துத் தலை வாரி, பின்னால் போய் குளிக்கச் சொன்னாள்.
சின்ன பாப்பாவிற்கு குளிக்க ஊற்றியதும் "அப்பாவை எழுப்புங்கடி" என்று குரல் கொடுத்துவிட்டு, மீண்டும் அடுப்பங்கரையில் பாக்கி இருந்த ஒரு சுற்று வேலையை முடித்தாள்.
பாத்திரம் வந்து கழுவிக்கலாம்.
டிபன் சாப்பிட்டு யூனிஃபார்ம், ஷூ மாட்டி கிளம்பிவிட்டார்கள். மூர்த்தியும் கிளம்பியாகிவிட்டது.
"இன்றைக்கு அந்த சீட் முடியுது. தோடு எடுக்கப் போறேன்!"
"கூட யார் வராங்க?"
"பக்கத்து வீட்டு பாப்பி அம்மாதான்!"
"ஜாக்கிரதையாப் போய் வாங்க. மேற்கொண்டு பணம் ஆனால் என்ன செய்வே?"
"எங்க அத்தை சின்ன பாப்பாவிற்கு போட்ட மோதிரம் எடுத்துப் போறேன். அதையும் போட்டுடறேன்."
"சரி." கிளம்பிவிட்டான்.
அவள் குளிக்கப் போனாள்.
எவ்வளவு நாள் ஆசை! காதுக்குத் தோடும் விசிறி விசிறியாய்த் தொங்கும் தொங்கல்களும்! எவ்வளவு பேர்! எவ்வளவு தோடுகள்!