சிறுகதை; வாஷிங்மெஷின்!
-சுஜாதா
இன்றைக்கும் வேலைக்காரி வரவில்லை. ஸ்வேதாவுக்கு ஆம்லெட் கொடுக்கும்போது, அவள் சீருடைக்கு இஸ்திரி போட வேண்டியிருக்கும்போது, வாசல் மணி அழைக்கும்போது, ஃபோன் தொணதொணக்க ''ஃபோனையாவது எடுக்கக்கூடாதா? காலைல எத்தனை காரியம் ஒருத்தி செய்ய முடியும்?" என்று ஹாலில் பேப்பரில் மறைந்திருந்த கணவனைக் கேட்டாள்.
"உங்களுக்குத்தான்."
"இல்லைன்னு சொல்லிடு" என்றான் சதீஷ்.
"காலை வேளையில் பொய் சொல்லி எனக்குப் பழக்கமில்லை."
''பொய் சொல்ல வேளை பார்க்கக்கூடாது சாவித்ரி."
மீண்டும் கதவு மணி ஒலிக்க, கணவன் பெரிய மனது பண்ணி திறக்கச் சம்மதித்து "சாவித்ரி பேப்பர்க்காரன்." எல்லாக் காரியமும் சாவித்ரியைச் சுற்றித்தான்.
"இன்னிக்கு இல்லைப்பா ஏம்பா உன் பொஞ்சாதியை வீட்டு வேலைக்கு வரச் சொன்னேனே!"
"ஆறு வூட்ல செய்றாம்மா. சி.ஐடி காலனில் ஒரு வூட்டை விட்டப்றம் ஒண்ணாந்தேதி வரதா சொன்னாங்க."
"ஒண்ணாந்தேதியா? அதுவரைக்கும் எப்படிப்பா சமாளிப்பேன்?"
"என் தங்கச்சி, அல்லாட்டி தம்பி சம்சாரத்தை வேணா கேட்டுப் பார்க்கறேன். பேப்பர் இல்லிங்களா?"
''இருக்குப்பா. எடுத்துப் பார்த்துப் போடறதுக்கு எனக்கு எங்க அவகாசம்?"
"அய்யா?"
"அய்யாவா" என்று ஏளனமாக "அய்யா பேப்பர் போட்டுட்டா மழை வந்துரும்பா. இருக்கற பேப்பரை சரியா மடிச்சு வெச்சாலே பாக்யம்."
சதீஷ் ஸ்போர்ட்ஸ் பேஜை முடித்துவிட்டு, குறுக்கெழுத்துப் பக்கத்தை நாலாக மடித்துக்கொண்டான். "என்ன என் தலையை உருட்டியாறது?"