
- மோ. குமரவேல்
இந்த நவீன காலக்கட்டத்தில் வேகமாக ஓடிக்கொண்டு, நம்முடைய வயதையும், சந்தோஷமான நாட்களையும் தொலைத்துவிட்டோம் என்பதே கசப்பான உண்மை.
தான் சந்தோஷமாக வாழவேண்டிய நாட்களை எல்லாம் தொலைத்து விட்டோம் என்பதை நினைத்து, கவலையுடன் தாடியைச் சொரிந்துகொண்டிருக்கிறார் மகாதேவன். அவருக்கு வயது 60. இனிமேல் தான் நாட்களை இழந்ததுபோல், யாரும் இழக்கக்கூடாது. அவரவர் இழந்த நாட்களை அவரிடமே ஒப்படைக்க வேண்டுமென்று முடிவு எடுக்கிறார்.
வீட்டைவிட்டு புறப்பட்டு வெளியே சென்றார். அங்கு தெருவின் மூலையில் ஒரு சிறுவன் அழுதுக்கொண்டிருந்தான். அந்தச் சிறுவன் இருக்கும் திசையை நோக்கி நடந்து சென்றார்.
அந்தச் சிறுவனிடம் "நீ ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுவன் கூறினான். "எனக்கு விளையாட வேண்டுமென்று ஆசை. ஆனால் யாரும் என்னுடன் விளையாட மாட்டார்கள். என்னுடன் விளையாடினாலும் சண்டையிட்டு என்னை அழ வைத்துவிடுவார்கள். அதனால் நான் தனியாகதான் ஏதாவது விளையாடிக்கொண்டிருப்பேன்."
உடனே, மகாதேவன் "நீ கவலைப்படாதே, உன்னுடன் நான் விளையாடுகிறேன்," என்றார்.
அவர் கூறியதைக் கேட்டு, அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம். பிறகு அவருடன் சேர்ந்து அவனும் சந்தோஷமாக துள்ளிக் குதித்துக்கொண்டு விளையாடினான்.