

-பா. ராகவன்
விஜயன், மஞ்சள் தடவின லெட்டரை மடித்து, பாக்கெட்டில் வைத்தபோது மாலினி வந்தாள். மழையில் கொஞ்சம் நனைந்த கூந்தலின் முன்புற ஓரங்களில் ஈரப்பிசுபிசுப்பு. முகத்தைக் கர்ச்சீப்பால் ஒற்றிக்கொண்ட படிக்கு அவள் அவிழ்த்துவிட்ட முறுவலில் ஒரு செல்லக்கோபம்.
"இன்னைக்கு ஏன் நீ ஆபீஸ் வரலை? ஒரு போன்கூடப் பண்ணமுடியலை. இல்லையா?"
"ஸாரி. என்னமோ சோம்பேறித்தனம். காலை எழுந்திருக்கும்போதே லேட். அப்புறம் சமையல். ஆ, அது ஒரு மாயப்பிசாசு. இன்னைக்காவது உப்பு, உறைப்புகள் சரியாக அமையாமல் விடுவதில்லை என்று உட்கார்ந்ததில் பயங்கர மல்யுத்தம். ஒருவழியாகப் பத்துமணிக்கு சாப்பிட்டு முடித்ததும் படுத்துவிட்டேன். என்னமோ அலுப்பு!"
"சரியா அமைஞ்சுதா, சாப்பாடு?"
"ஓயெஸ். வழக்கம்போல் தோல்வியின்முடிவில் மெஸ்ஸை நோக்கிப் படையெடுத்தேன்."
அவள் சிரித்தாள்.
"ச்சே, பாவம் நீ! என்ன கஷ்டப்படறே?"
அவனுக்கு சுகமாக இருந்தது. பிரத்தியேகமாகப் பரிதாபப்பட யாரும் கிடைத்து விடுகிறபோது மனத்தில், அழுத்தமாகப் பரவுகிற சோக சுகம்.
"பேசாமல் என் வீட்டுக்கு வந்துடேன்? சும்மா வரமாட்டாய். தெரியும். பேயிங்கெஸ்டாக வரலாமில்லையா?"
விஜயன் பதில் சொல்லவில்லை. மென்மையாக ஒரு புன்னகை. தோழமை கலந்த ஒரு லுக். புன்னகையும் அந்தப் பார்வையும் கலக்கிற விகிதத்தில் வெளிப்படுகிற வலிக்காத மறுப்பு. வார்த்தைகளைவிட பாவங்கள், உணர்வுகளை எத்தனை வசீகரமாக வெளிப்படுத்துகின்றன?
திருநெல்வேலியில் இருந்தபடிக்கு, கூரைவேய்ந்த பஞ்சாயத்துப்பள்ளியிலும் போர்டுஸ்கூலிலும் ஆரம்பம் பயின்று, சென்னைக்கு ரயிலேறி கல்லூரிகளில் களம் கண்டு, வாங்கிய எம்ஸிஏவுடன் பெட்டி படுக்கைகளைச் சேர்த்து சுருட்டிக்கொண்டு அவன் பெங்களூரில் அகதிபோல இறங்கினபோது, மாலினி தான் அநாதரட்சகியாக அவனைத் தடுத்தாட்கொண்டாள்.
மூளைகளின் முதலீட்டில் விஸ்வரூபம் காட்டுகிற பன்னாட்டு சாஃப்ட்வேர் நிறுவனம். உனக்கு இருக்கிறதா மூளை? வா, வந்து கொஞ்சம் அவிழ்த்துக்காட்டு. பதிலுக்கு இப்போது ரூபாயாக வாங்கிக்கொள். நாலு வருஷம் கழித்து, ஃப்ளாரிடாவுக்கு அனுப்புகிறேன். அப்போது டாலரில் வாங்கிக்கொள்.