
-உமா கல்யாணி
"நாச்சம்மை... ஏ நாச்சா...'' என்று உரத்த குரலில் அழைத்துக்கொண்டே படியேறி உள்ளே வந்தாள் அலமேலு ஆச்சி.
"வா அலமி" என்று வரவேற்றுக்கொண்டே வெளியே வந்தாள் கதிரேசன் செட்டியாரின் மனைவி நாச்சம்மை ஆச்சி.
நீளமான படிக்கட்டு முழுவதும் வேம்பின் நிழல் படர்ந்திருந்தது.
இருவரும் எதிர் எதிராகப் படிக்கட்டில் அமர்ந்து கொண்டனர்.
''நாச்சா, காலம்பற ஒம்பூட்டுப் பேத்திப் பொண்ணப் பாத்தேன். இங்லீசு பள்ளிக்கூடம் போறாளாம். எல்.கே.ஜி. படிக்குதாம். சொன்னாக" என்ற அலமேலுவின் பார்வை நாச்சம்மையை ஊடுருவியது.
நாச்சம்மையின் முகத்தில் ஓர் ஆதங்கம் தோன்றி அடங்கியது.
"ஹும், பேத்திப் பொண்ணு நல்லா, தாட்டியமா இருக்காளா?'' என்று கேட்டவளின் குரலில் ஏக்கத்தின் வேதனைகள்!
''ஓ! என்னமா இருக்கான்றே! யூனிஃபார்ம் போட்டுக்கினு கால்ல சப்பாத்து மாட்டிக்கினு, ரெண்டு சடை போட்டுக்கினு நல்லா இருக்காடி ஓம்பூட்டுப் பேத்திப் பொண்ணு..." என்றாள் அலமேலு.
"ஹும்...ம்..."
"ஏன் நாச்சம்மை அலுத்துக்கிறே?'
"என்னவோ அவுகதேன் மாறிட்டா கன்னா, அவுக பிள்ளைகளையுமில்லா மாத்திப்பிடுவாக போல்ருக்கு" என்றாள் வேதனைக் குரலில் நாச்சம்மை.
"காலம் மாறுதுல்ல.''
"அதுக்காக நாமகூட மாறிப்பிடணுமாக்கும்? சொல்லச் சொல்ல கேட்க மாட்டேனுட்டு, அரண்மனைபோல இருந்த வீட்டை, முகப்பை இடிச்சுப்பிட்டு புது மாடல்னு என்னவோ கட்டியிருக்காக. வீட்டோட அழகே போயிருச்சு அலமி..."
"ஏன் நாச்சம்மை, இப்பவும் வீடு நல்லாத்தானே இருக்கு. முகப்பை மட்டும்தானே மாத்திக் கட்டியிருக்காக. உள் வளவெல்லாம் மாத்தாம கொள்ளாம அப்படியேதானே இருக்கு."
“வீட்டோட அழகே முகப்புலதான இருக்கு அலமி! மலேயாவுல இருந்து பளிங்கும் பாவையுமாக் கொணாந்து வீட்டு முகப்பை அரண்மனைபோல அலங்காரமாத்தேன் கட்டினாக செட்டியாரு. அதப் பூராவும் பேத்துப்பிட்டு, என்னவோ கன்னாபின்னான்னு பண்ணி மாத்திப்பிட்டானே! நானுந்தேன் தடுத்துப் பாத்தேன். கேட்க மாட்டேன்னுட்டாகளே!"
"படிச்சவுக. நாலு சீமை போய் வாரவுக. எல்லாம் நாகரீகமாய் இருக்கணும்னு நினைக்காக."
சமாதானம் பண்ண முயன்றாள் அலமேலு ஆச்சி. ஆனால் சுலபத்தில் சமாதானமடைவதாக இல்லை நாச்சம்மை ஆச்சி.
"என்ன பெரிய நாகரீகம் வேண்டிக் கிடக்கு? எங்க குடும்பத்தையே 'நாச்சாள் குடும்பம்'னுதேன் சொல்வாக. எவ்வளவோ காலமாத் துலங்கி வர்ற பேரு இது! ஆனா... அவுக எம்பேத்திப் பொண்ணை இந்தப் பேர் சொல்லிக் கூப்பிடலியே. ஹேமான்னோ, கோமான்னோல்ல நாகரீகப் பேர் வச்சுக் கூப்பிடுதாகளாம்."
"போகுது விடு.''
''திருவாதிரைக்கு உத்திரகோச மங்கை போய்ட்டு, அப்படியே ராமேஸ்வரம், திருப்புல்லாணி, சேதுக்கரை எல்லாம் போய்ட்டேனா, திரும்பி வர ஒரு வாரமாயிட்டுது. வந்து பாக்கிறப்ப மனசே பதறிடுச்சே! முகப்பை இடிச்சுப் போட்டுட்டானே. இவ்வளவு ஆன பின்னாடி இந்த மகன்கிட்டே என்ன பேச்சுன்னு இஞ்ச வந்தவதேன், அஞ்ச போக மனசே கொள்ளலை. மருமக நடையாய் நடந்து நடந்து கூப்பிட்டாளே! நான் போகலே. செட்டியார் அவுக கட்டினதை இவன் எப்படி இடிக்கப் போச்சு? நாந்தடுத்துப் பிடுவேன்னுதானே, நான் ஊர்ல இல்லாத சமயத்துல இடிச்சிட்டான்!"
"அவனுக்குப் புது மாடல்ல, பங்களா போல இருக்கணும்னு ஆசை. உனக்குப் பழசெல்லாம் மாறிடப்பிடாதுங்கிற நினைப்பு. அவுக முகப்பை இடிச்சு மாத்திக் கட்டிப் பிட்டாகன்னு உனக்குக் கோபம். உள்வளவு பூராவும் செட்டியார் அவுக கட்டி வச்சாப்ல அப்படியேதானே இருக்கு. அட நாச்சம்மை, இனிமே ஆளப் போறவுக அவுக. அவுக இஷ்டம்போல மாத்திக்கிட்டு போறாக. நீ எதுக்கு வீணாப் போட்டு அலட்டிக்கிறே?"
நாச்சம்மை மௌனம் சாதித்தாள். கொஞ்சம் சிந்தனை பண்ணவும் துவங்கி விட்டாள்.
"ரொம்ப அலட்டாம இரு. ஒம் பேத்திப் பொண்ணப் போயி பாத்துட்டு வா. ஒம்பேத்தி ஒன்மாதிரியே மூக்கும் முழியுமா இருக்கு. துருதுருன்னு அலையுது. அப்பத்தான்னு நீ இருக்கே, ஆனா அதுக்கு ஒன்னத் தெரியவே தெரியாதாமே! அந்தப் பச்சை மண்ணுகூட ஒனக்கென்ன மனத்தாங்கல்? போற வரைக்கும் எல்லார்ட்டயும் நல்லா இருக்கலாமில்ல? ஒரு நடை போய்ப் பாத்துட்டு வந்துரு நாச்சம்மை. எதுவும் கூறாமல் இப்போதும் மௌனமாகவே இருந்தாள் நாச்சம்மை.
'வாங்க ஆச்சி!" என்று சிரித்தபடியே வரவேற்ற கமலா டீச்சர், "யாரைப் பார்க்கணும்" என்று கேட்டாள்.
"எம்பேத்தி இஞ்ச படிக்குதாமில்ல, அதைப் பாக்கோணும்" என்றாள் நாச்சம்மை.
"ஒங்க பேத்தியோட பெயர் என்ன ஆச்சி?"
"ஹேமாவோ... கோமாவோ... இந்த நாகரீகப் பேரெல்லாம் யாருக்கு வெளங்குது."
கமலா டீச்சர் மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.
"ஹேமாங்கிற பேர்ல இங்கே யாரும் படிக்கலியே ஆச்சி..."
"இது எல்.கே.ஜி.தானே! இஞ்சதான் எம்பேத்தி படிக்குதுன்னு அலமி சொன்னா. என் மகன் பேரு தேனப்பன்..."
சிறிது யோசனை பண்ணிய கமலா டீச்சர், "தேனப்பன்...? இந்தியன் பாங்கிலே காஷியராய் இருக்கிற தேனப்பன் சார் மகளா...?"
"ஆமா... ஆமா... அவந்தேன்! அவந்தேன்!''
"அவங்க டாட்டர் பேரு ஹேமா இல்லையே!"
"பின்னே?"
நாச்சம்மைன்னுல்ல ரிஜிஸ்தர்ல இருக்கு. ஒருவேளை வீட்ல ஹேமான்னு கூப்பிடுவீங்களோ?"
''நாச்சம்மை! நாச்சியார் கோவில் நாச்சம்மை! குலப் பெயரை மறந்து விடவில்லை. பதிவு பண்ணின பெயர் நாச்சம்மை என்றால், பரம்பரையைப் பழைமை என்று ஒதுக்கலேன்னுதானே அர்த்தம்! எல்லாமே வெளிநாகரீகம் மட்டும்தானே போல்ருக்கு!"
நாச்சம்மை ஆச்சிக்குப் புல்லரிப்பு!
''நாச்சம்மை நாச்சம்மை" என்று கமலா டீச்சர் அழைத்ததும் குடுகுடுவென ஓடிவந்த சிறுமி, தேனப்பன் சாயலில் தெரியவே பூரித்துப் போனாள் ஆச்சி.
அதே பூரிப்போடு மகனின் வீட்டுக்குச் சென்றவள், "பரவால்ல, முகப்பு அழகாத்தேன் இருக்கு. பங்களாபோல இருக்கு..." என்று திருப்தியுடன் தன்னுள் கூறிக்கொண்டே மூன்றாண்டுப் பிரிவை இணைக்கும் முகமாக நாச்சம்மை ஆச்சி படியேறி உள்ளே போனாள்.
பின்குறிப்பு:-
கல்கி 13.10.1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்