
-சீதா ரவி
பாரிஜாதம் போல் மயக்கவுமில்லை.. பன்னீர்ப் பூவைப்போல் வாசனையை ஒளித்து வைத்து ரகசியமாக வெளியேற்றவுமில்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட இதம் அது...
"என்ன பேரும்மா - இந்தப் பூவுக்கு...?"
"தெரியலையே கண்ணு..."
"சாமிக்குப் போடலாமோ..."
"ஏன் போடக்கூடாது... அழகான எதையும் சாமிக்குப் போடலாம்..."
கெளரி சந்தேகத்துடன் அம்மாவைப் பார்த்தாள்.
"இல்லம்மா.. பாட்டி சொல்லியிருக்காங்க இல்லியா...? சில பூவெல்லாம் போடக்கூடாதுன்னு..."
அம்மா கெளரியின் சின்னக் கையைப் பிடித்து வருடி உள்ளங்கை நடுவில் அந்த வெள்ளை மலரை வைத்தாள்.
"இத்தனூண்டு பூவிலே எவ்வளவு கச்சிதம் பார்த்தியா... அதுதான் கடவுளோட சிருஷ்டி அற்புதம்..."
சற்றே கனத்த காம்புடன் கெளரியின் கையில் பூ குறுகுறுவென்று சிரித்தது. இதழோரங்கள் இலேசாகச் சுருண்டு வெட்கப்படுவதுபோலிருந்தது. மெதுவாக மூக்கருகில் கொண்டுவந்து வாசனையை முகர்ந்தாள். நட்போடு அது அவளை ஆட்கொண்டது.