சிறுகதை – ஜாமீன்!

ஓவியம்; கோபன்
ஓவியம்; கோபன்

-திருவாரூர் பாபு

யில் குலுக்கலுடன் சென்றுகொண்டிருந்தது.

எனக்குப் பயணம் பிடிக்கும். ரயில் பயணம் மிகவும் பிடிக்கும். கம்பார்ட்மெண்டின் மெலிதான குலுக்கல்... ஜன்னல் வழியே வரும் நெடி.. பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்யும் கலவையான மனிதர்கள்.

ஆனால் இப்போது எதையுமே ரசிக்க முடியவில்லை. காரணம் மனசு. நைந்து போய்விட்டது. ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளலாம். துரோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது - நம்பிக்கை துரோகம்.

''சீனிவாசன் இப்படி பண்ணுவான்னு நான் எதிர்பார்க்கல்லப்பா. திட்டம் போட்டுச் செஞ்சிருக்கான். ஒன் குடும்பத்துல ஒருத்தனா இருந்தவன் இப்படி பண்ணிட்டானே.. தயங்காம அவன் காட்டின எடத்துல ஜாமீன் கையெழுத்துப் போட்ட... லட்ச ரூபாய்! இப்ப என்னப்பா பண்ணப்போற...?"

"பார்ப்பம்" என்று நான் போனவாரம் ரகுவிடம் சொன்னபோதும், யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை.

"வேணாம்... வேணாம்னு அடிச்சிக்கிட்டேனே.. அண்ணன் தம்பிங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் ஜாமீன் போடத் தயங்கற காலம்... ரெண்டு வருஷ பழக்கத்தை வச்சி கையெழுத்துப் போட்டு இப்படி ஏமாந்துட்டீங்களே... எனக்குப் படபடங்குதுங்க.. என்ன பண்றது.. லட்ச ரூபாய்!" ஜானகி அழுது தீர்த்துவிட்டாள்.

இதையும் படியுங்கள்:
அன்னாவரம் கோயிலில் அனுசரிக்கப்படும் விநோத சத்தியநாராயண பூஜை!
ஓவியம்; கோபன்

ரண்டு வருடப் பழக்கம். பழக்கமா அது? எவ்வளவு நெருக்கம்?

என் புத்தகக் கடைக்குப் பக்கத்தில் சீனிவாசன் ஃபைனான்ஸ் ஆரம்பித்த தினம் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது. நிதி நிறுவனம்... ஆகவே எப்போதாவது யாராவது வருவார்கள். சீனிவாசன் பெரும்பாலும் என் கடையில். சம வயது. வலுவான சிநேகம் உருவானது. அவ்வப்போது வீடு தேடி வரும் அளவுக்கு.

"என்ன ராமநாதா... வீட்ல ஒரு டேப்ரிகார்டர் இல்ல.. நல்லாவா இருக்கு! ஒன் டாட்டர் சினிமா பாட்டு விரும்பிக் கேட்பா போலிருக்கு...''

அடுத்த வாரமே புத்தம் புதிய டேப் ரிகார்டர் வீட்டுக்கு வந்தது.

"இப்ப ஏன் சீனி இது... என்கிட்டே பணம் இல்லப்பா..."

"நான் ஒன்கிட்ட பணம் கேட்டனா...?"

உண்மையான பேச்சு. மறுக்க முடியாத பேச்சு.

"அட போங்க ராமநாதன்... இந்தக் காலத்துல போய் பிளாக் அண்ட் ஒயிட் டீ.வி. வச்சிருக்கீங்க. கலர்ல பாருங்க... இதுல பார்த்தா கண்ணு போயிடும்."

இரண்டாவது நாளே கலர் டீ.வி.வீட்டுக்கு வந்தது.

அவனைத் தடுக்க முடியவில்லை. மறுக்க முடியவில்லை. கொண்டு வந்து வைத்த பொருளைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

"அட்டகாசம்ப்பா" என்று டீ.வியைப் பார்த்து அபிநயா மகிழ்ச்சியாகக் கூறியபிறகு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

கஷ்டத்தோடு கஷ்டமாக, கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் தந்துவிட்டேன்.

"எங்கயிருந்தோ வந்து இங்க இருக்காரு.. தனியா வேற இருக்காரு.. நாளும் கிழமையுமா ஓட்டல்ல சாப்பிட்டா பார்க்கிறவங்க உங்கள என்ன நினைப்பாங்க. மத்தியானம் நம்ம வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிடுங்க..."

விசேஷ தினங்களில் அவனுக்குச் சாப்பாடு என் வீட்டில்தான். ஜானகி கையால்தான் சீனிவாசன் சாப்பிட்டான். சாப்பாடு போட்ட 'போட்ட அந்த கைக்குத்தான் துரோகம்!

"நீ சொன்னா கிடைச்சிடும் ராமநாதா... இப்ப கொஞ்சம் அதிகமா பணம் தேவைப்படுது... நல்ல சீசன்.. தைரியமா இன்வெஸ்ட் பண்ணலாம்... பணத்தை உடனே திரும்ப எடுத்திடலாம்... என்னை நம்பி லட்ச ரூபாய் கொடுக்க மாட்டேங்கிறாங்க... இந்த உதவியை மட்டும் செய் ராமநாதா..."

செய்தேன். அடுத்த வாரமே லட்ச ரூபாய் கடனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டேன்.

இரண்டு வாரம் ஒழுங்காகத் தவணை கட்டிய சீனிவாசன்... மூன்றாவது வாரம் முழுதும் கடை திறக்கவில்லை. எங்கே போய் விட்டான் என்று அவன் தங்கியிருந்த வீட்டைப் போய்ப் பார்த்தபோது... காலி பண்ணிட்டுப் போய்விட்டதாகச் சொல்ல... தூக்கி வாரிப்போட்டது எனக்கு!

வருவான்... வருவான் என்று ஒரு மாதம் காத்திருந்து... அவன் சொல்லியிருந்த ஊருக்கெல்லாம் சென்று பார்த்து, “அப்படி இங்க யாருமே இல்லையே."

கலங்கிய மனத்துடன் போலீஸ் ஸ்டேஷன் சென்றபோது, "எங்க ஸார் புடிக்கிறது. திட்டம் போட்டுச் செய்யறாங்க. விவரமான ஆளு, நீங்களே ஏமாந்திருக்கீங்க! உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்து... எங்கயாச்சும் மாட்டினா உங்க பணம் கிடைக்கலாம்."

மனம் ரணமாயிற்று. ஏமாந்துவிட்டதை விட. எப்படி இதைப்போல் செய்யமுடிகிறது என்ற வியப்புத்தான் மேலோங்கி நின்றது. இவ்வளவு நெருங்கிப் பழகி... மனிதர்களுக்கு எப்படி இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகின்றன? நான்தான் ஏமாளியோ... உலகம் புரியாமல் இருக்கிறேனோ... டேப் ரிகார்டரையும்... டீவியையும் பார்த்துப் பிரமித்துப்போய் ஏமாந்துவிட்டேனோ?

இரண்டு வருடங்கள் சிநேகமாய்ப் பழகி... ஒன்றாகச் சாப்பிட்டு.. எல்லாம் பொய்யா? இப்படி ஒரு நயவஞ்சகத் திட்டத்தை மனத்தில் வைத்துக்கொண்டு எத்தனை பாசாங்கு...?

முதல் தடவையா ஏமாறுகிறேன்...? இல்லை.

சென்ற மாதம் ஒரு நாள் மதியம் கடையில் அமர்ந்திருந்தபோது ஒருவர் தயங்கித் தயங்கிக் கடைக்குள் வந்தார். வயதானவர். கண்ணியமான தோற்றம்.

மனைவியோடு ஒரு திருமணத்துக்கு வந்து திரும்புவதாகவும், பேருந்து நிலையத்தில் பர்ஸ் களவு போய் விட்டதாகவும் கையில் சல்லிக்காசு இல்லாமல் சென்னை போய்ச் சேர நூறு ரூபாய் வேண்டுமென்றும் உருக்கமாகக் கூறினார்.

நான் குழம்பிப் போய் யோசனையாய் அமர்ந்திருக்க... தான் பிராட்வேயில் கண்ணாடிக் கடை வைத்திருப்பதாகக் கூறியவர் பட்டென்று நான் அணிந்திருந்த கண்ணாடியை உருவி... கண்ணாடியின் பவரைச் சொன்னதோடு, ஃபிரேமை லேசாக வளைத்தால் சரியாக உட்காரும் என்று கூற... நம்பினேன்.

டீ வாங்கிக் கொடுத்து...நூறு ரூபாய் பணமும் கொடுத்து அனுப்பினேன். நெகிழ்ந்து போனவர் என் விலாசத்தையும், சென்னையில் இருக்கும் என் மகளின் விலாசத்தையும் கேட்டுக் கொண்டு போனவர்.. போனவர்தான்.. ஏமாற்றம்!

ஜானகிக்குத் தெரியாது. தெரிந்தால் சத்தம் போட்டுத் தீர்த்துவிடுவாள்.

நம்பிக்கை... எவ்வளவு வலுவான ஆயுதம்!

நான் சீனிவாசன் மீது வைத்த நம்பிக்கைக்குக் காரணம் அப்பா.

''மனுஷனை மனுஷன் நம்பணும்டா... ஒன் அம்மா உடம்பு சரியில்லாம கிடக்கா... கையில பணம் இல்ல. அவசரமா ஒருத்தர்கிட்ட - எனக்குப் பத்து வருஷம் பழக்கம் அவரு. பணம் கேட்டேன். - வெறும் அம்பது ரூபா பணத்தைக் கொடுத்திட்டு 'புரோ நோட்டு'ல கையெழுத்து கேட்டான் பாரு. நொந்து போயிட்டண்டா. அம்பது ரூவா பணத்துக்கு என்னை நம்பல பாரு! அடுத்தநாளே பணத்தைத் திருப்பிக் கொடுத்திட்டேன். நம்பிக்கைத்தாண்டா தம்பி வாழ்க்கை" அப்பா அடிக்கடி புலம்பிக்கொண்டிருப்பார்.

பேங்க் லோனுக்கு, தெரிந்தவர் யாராவது ஜாமீன் கையெழுத்து கேட்டு வந்தால் தயங்காமல் போடுவார். ஆனால், ஏமாந்ததில்லை. நான் ஏமாந்துவிட்டேன்.

கடன் கொடுத்த ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வீட்டின் மேல் கடன் வாங்கினேன். கதறி அழுத ஜானகியைச் சமாதானப்படுத்தி அவள் நகையை அடகுவைத்து, கிட்டத்தட்ட எண்பதாயிரம் திருப்பி விட்டேன்.

கிராமத்தில் கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதை விற்றால் பத்தாயிரம் கிடைக்கும். புறப்பட்டேன்.

இதையும் படியுங்கள்:
நோய்களைத் துரத்தும் துத்திக் கீரை!
ஓவியம்; கோபன்

டிரெயினிலிருந்து இறங்கினேன்.

பிறந்து வளர்ந்த கிராமத்தில் இருபது வருஷங்களுக்குப் பின்பு காலடி வைத்ததில் மனசு சுமையிலிருந்து விடுபட்டு ஒரு தற்காலிக சந்தோஷத்துக்குப் போயிற்று.

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தேன்.

இரண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். முடியாது.

சைக்கிள் எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து பக்கத்தில் இருந்த சைக்கிள் கம்பெனியை நெருங்கினேன். நான் சிறு வயதில் சின்ன சைக்கிள் எடுத்து சைக்கிள் பழகியது இந்தக் கடையிலிருந்துதான்.

வாசலில் நான்கு சைக்கிள்கள் நின்றுகொண்டிருந்தன. நான்குமே எலும்புக் கூடாக இருந்தன.

இந்த சைக்கிளில் ஊர் போய்ச் சேர முடியுமா..?

இதில்தான் போக வேண்டும். வேறு வழியில்லை.

"தம்பி ஒரு சைக்கிள் வேணும்..."

அவன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தான். யார் இவன்? முத்துசாமியின் ஜாடை இருக்கிறதே... பையனா... பேரனா...?

''எங்க போகணும்?" என்றான்.

''ஆரியச்சேரி வரைக்கும்."

'ஆரியச்சேரியில யார் வீட்டுக்கு?"

"வைத்தியநாதன் வீட்டுக்கு" என்றேன் எரிச்சலாய். இந்தப் பாடாவதி சைக்கிளுக்கு எத்தனை கேள்விகள்?

"ஸார் மன்னிக்கணும். உங்களை எனக்குத் தெரியாது. இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியலை. பெரிய மனுஷன் பேரை சொல்லிட்டு சைக்கிள் எடுத்துட்டுப் போறாங்க... திரும்ப வர மாட்டேங்குது... அவுங்களக் கேட்டா யாரு எம் பேரைச் சொன்னாலும் சைக்கிள் கொடுத்திடறதாங்கிறாங்க..இதோட ரெண்டு சைக்கிள் போயிட்டு! தயவுசெஞ்சி உங்களுக்குத் தெரிஞ்ச யாரையாச்சும் ஜாமீன் சொல்லச் சொல்லுங்க. சைக்கிள் தர்றேன்" என்றான் அவன்.

ஜாமீன்..! நூறு ரூபாய்கூட பெறாத இந்த சைக்கிளுக்கு ஜாமீன்!

நான் சிரித்தேன். என்னை அவன் ஆச்சரியமாகப் பார்த்தான். என் சிரிப்பின் அர்த்தம் அவனுக்குப் புரியாது.

பின்குறிப்பு:-

கல்கி 20  ஜூன்  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com