சிறுகதை - கடலளவு மனசு!

ஓவியம்; சசி...
ஓவியம்; சசி...

-பா. ராகவன்

எம்.ஜி.ஆர். குப்பம் இன்னும் கண் விழிக்கவில்லை. வீதியிலேயே பாய், புடைவை விரித்து ஆண்களும் பெண்களும் கலைந்த ஓவியம் மாதிரி தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

அடைக்கலராஜ், குடிசையை விட்டு வெளியே வந்தான். மணி ஐந்தா? ஐந்தரையா? ஆறு மணி டூட்டிக்கு லேட்டாகி விடக்கூடும்...

அப்போது அது அவன் கண்ணில்பட்டது. கார்ப்பரேஷன் குழாய் அருகே அந்தப் பைத்தியம் தன் நினைவில்லாமல் வானம் பார்த்துப் படுத்திருந்தது.

வெறும் பாவாடை. மிகவும் கிழிந்த, நிறம் போன ரவிக்கை. மேலே புடைவைக்கு பதில் ஒரு சின்னத் துண்டு. அதுவும் விலகி...

பைத்தியங்களுக்கும் யாராவது சாப்பாடு போட்டு விடுகிறார்கள். அதுகளும் நாளெல்லாம் அலைந்து, அலைந்து, உடம்பு உரமேறி...

"ராசு, இன்னாடா பண்ற அங்க?" செல்வமுத்து.

வாயில் கோபால் பல்பொடியுடன் வந்தவனிடம், "பைத்தியம், செல்வமுத்து! நேத்தி முளுக்க தாலுகா ஆபீஸாண்ட சுத்திக்கினு இருந்திச்சி. எப்ப இங்க வந்து உளுந்திச்சின்னு தெரியல. அதான், எளுப்பி தொரத்தலாம்னுட்டு."

"பைத்தியமா? என்னா கட்டை! என்னா கட்டை!"

"அ, ஆமா! மேல துணி வெலகினது கூடத் தெரியலை பாரேன்!"

"எப்போவ்!"

அடைக்கலராஜ் திரும்பிப் பார்த்தான். அவனது ஐந்து வயது மகன். டிராயர் - சட்டை இன்றி, பிறந்த மேனியாகத் தலை சொறிந்துகொண்டு நின்றிருந்தான்.

"ஆத்தா தூங்குது. நீ வந்து களுவி உடு."

"சீ போடா அப்பால. உங்க ஆத்தாள எளுப்பு.''

"யாருப்பா இந்த பொம்பள?"

"போடான்றனில்ல?"

"மாட்டேன்! நீ வா.களுவி வுடு."

"இப்ப நீ ஒத வாங்கப் போற. போடான்றனில்ல?"

இதையும் படியுங்கள்:
உங்கள் குறைகளை நிறைகளாக்கி சாதனை புரியுங்கள்!
ஓவியம்; சசி...

"இன்னாடா காலீல ரவுசு?''

மாசிலாமணி எழுந்து வருவது தெரிந்தது.

"பைத்தியம்ணே!"

''ஐயே, வந்து உளுந்துதே. என் வூட்டாண்ட! தொரத்துங்கடா."

"தூங்குதா? இல்ல, செத்தே பூட்ச்சா?"

அடைக்கலராஜ், இன்னும் முன்னேறி, கூர்ந்து கவனித்தான்.

அவள் சட்டென்று விழித்துக்கொண்டு, எழுந்து உட்கார்ந்தாள். எதையோ நினைத்துக்கொண்டு 'ஈ' என்று சிரித்து, இரண்டு கைகளாலும் தலையைச் சொறிந்தாள்.

"தே... எழுந்து போம்மே!"

"சீ, போ!"

"போன்றனில்ல?"

செல்வமுத்து அடிக்க கை ஓங்கினான்.

"யப்போவ், களுவி வுடு.''

அடைக்கலராஜ் திரும்பி, மகனை முறைக்க,

"ஐயே, டௌசரே இல்லியா? ஏழையா? பாவம்!"

சட்டென்று அவள் தன் துண்டை எடுத்து, அடைக்கலராஜிடம் வீசி, "சுத்திவுடு அந்தப் புள்ளைக்கு" என்று சொல்லி, எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

பின்குறிப்பு:-

கல்கி 20  ஆகஸ்ட்  1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com