சிறுகதை - காவ்யாவின் கல்யாணம்!

ஓவியம்: மாயா
ஓவியம்: மாயா

-அஸ்வினி

பெண் பார்க்கும் படலம், வாதப் பிரதிவாதங்களுடன்தான் தொடங்கியது.

அர்ஜுன் தனக்கென்று சில கொள்கைகளில் பிடிப்புள்ளவன். அதற்கு ஒத்து வந்தால்தான் திருமணம் என்பது அவன் தீர்மானம்.

"அப்பா! நான் பெண் பார்க்க வரணும்னா, என்னோட சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்படணும் நீங்க இரண்டு பேரும்.''

"என்னடா, நிபந்தனை, அது இதுன்னு பெரிசா கன்டிஷன் போடறே? நீதாண்டா எங்களுக்குக் கட்டுப்படணும். உன்னை வளர்த்து ஆளாக்கினதுக்கு," என்றாள் அவன் தாய் மதுராம்பாள் வேகமாக.

"அம்மா! நீங்க என்னை வளர்த்து ஆளாக்கினது உங்க கடமை. அதே மாதிரி உங்களைக் காப்பாத்தறது என் கடமை. அதுக்காக, என் தன்மானத்தை இழந்து, நீங்க சொல்றதுக்கெல்லாம் ஜால்ரா போட என்னால முடியாது," என்றான் அர்ஜுன்.

"நீ என்னதாண்டா சொல்ல வர்றே?" என்றார் அப்பா.

"இப்பவே கிளியரா சொல்லிடறேன். பொண்ணு என் மனசுக்குப் பிடிச்சிருந்தாப் போதும். மத்தபடி வரதட்சணை, சீர் செனத்தி அது, இதுன்னு எதுவுமே 'டிமாண்ட்' பண்ணக் கூடாது. கல்யாணச் செலவைக்கூட சரி பாதி நாம ஏத்துக்கணும். கல்யாணத்துல குத்தம், குறை கண்டுபிடிச்சு அனாவசிய தகராறு பண்ணி, கலாட்டா கூடாது. ரொம்ப பெருந்தன்மையா நடந்துக்கணும். இதுக்கெல்லாம் நீங்க ஒத்துக்கிட்டாதான் நான் பெண் பார்க்க வருவேன்", என்ற அர்ஜுனின் ஆணித்தரமான பேச்சில் மௌனமானார் வைத்தியலிங்கம்.

பெண் வீட்டில் அவர்கள் போய் இறங்கியபோது, வாசலிலேயே காத்திருந்த பெண்ணின் பெற்றோர் அவசரமாக வந்து வரவேற்றனர்.

“மீட்டருக்கு மேலே ரெண்டு ரூபா போட்டுக் கொடுங்க சார்," என்ற ஆட்டோ டிரைவரை முறைத்தார் வைத்தியலிங்கம்.

"உழைக்கற காசுதான்யா ஒட்டும்," என்றார் வேதாந்தமாக, ஆட்டோ டிரைவரிடம்.

"அது உங்களுக்கும்தான்பா," என்றான் அர்ஜுன் முணுமுணுப்பாகத் தந்தையிடம்.

ஆட்டோ சார்ஜை கொடுக்க முன்வந்த பெண்ணின் தகப்பனாரைத் தவிர்த்து, அர்ஜூன் கொடுத்தான்.

சம்பிரதாயமான பேச்சுக்களைத் தொடர்ந்து பெண் வந்தாள். பெயர் காவ்யா.

உண்மையிலேயே காவியமாகத்தான் இருந்தாள். பார்த்த மாத்திரத்திலேயே அர்ஜுனுக்குப் பெண்ணைப் பிடித்துப் போய்விட்டது.

ஒரு வாரம் கழித்துத் தெரிவிக்கிறோம் என்ற மழுப்பல் இல்லாமல், அங்கேயே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டனர்.

''சம்பந்தி! எங்க பையனுக்குப் பொண்ணை ரொம்ப பிடிச்சுப்போச்சு. எங்களுக்கும்தான். சீக்கிரமா ஒரு முகூர்த்த தேதி குறிச்சுட்டா, கல்யாணத்தை ஜாம் ஜாமுனு நடத்திடலாம்," என்றார் வைத்தியலிங்கம்.

"அப்படியா? ரொம்ப சந்தோஷம். எங்க பொண்ணுக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு. மீதி லௌகிக விஷயமாப் பேசி முடிச்சுடலாமா?" என்றார் பெண்ணின் தந்தை சிவராமன் பூரிப்பாக.

"இங்கே, பாருங்க சம்பந்தி! எங்க பையன் ரொம்ப முற்போக்குக் கொள்கை இருக்கறவன். வரதட்சணை, சீர் செனத்தி நகை, நட்டு எதுவுமே பொண்ணு வீட்ல வாங்கக் கூடாதுங்கறது அவன் எண்ணம். அதோடு கல்யாணச் செலவையும் பாதி ஏத்துக்கறதா இருக்கோம்" என்ற வைத்தியலிங்கத்தை, ஆச்சரியத்துடன் பார்த்தார் சிவராமன்.

''இந்தக் காலத்துல, இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்கறதுக்கு, நாங்க ரொம்ப கொடுத்து வெச்சிருக்கணும்."

"நீங்க இவ்வளவு பெருந்தன்மையா இருக்கறதைப் பார்த்து எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்தான். இருந்தாலும் பொண்ணைக் கொடுக்கற எங்களுக்கும் சில கடமைகள் இருக்கு. நாங்களா இஷ்டப்பட்டுக் கொடுக்கறதையாவது நீங்க கட்டாயமா ஏத்துக்கணும்,"  என்றாள் அதுவரை பேசாமல் இருந்த சரோஜா - பெண்ணின் தாய்.

அதுவரை பேசாமல் இருந்த அர்ஜுன், "தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க. பொண்ணு வீட்ல, அதைக் கொடு, இதைக் கொடுன்னு கேக்கற பேடித்தனம் எனக்குப் பிடிக்காதது. என் உழைப்பு மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு," என்றான்.

இரு தரப்பினருக்கும் பூரண சம்மதம். திரும்பும்போது அர்ஜுனின் கண்கள் காவ்யாவைத் தேடின. ஜன்னலில் தெரிந்த அவள் அழகு முகம்,  அந்தக் கண்களின் மலர்ச்சி,  அவனுக்குப் பிரியாவிடை கொடுத்தது போல் இருந்தது.

றுநாள்... ஆபீஸில் அர்ஜுனைத் தேடி ஓர் இளம்பெண் வந்திருப்பதாகப் பியூன் வந்து சொன்னபோது யார் என்று அவனால் யூகிக்க முடிந்தது.

காவ்யாதான். எதற்காக வந்திருப்பாள்? ஏதாவது காதல் தோல்வியா? காதலனுடன் சேர்த்து வைக்கச் சொல்லிக் கேட்பாளோ? அப்படி இருந்தால் தான் விட்டுக் கொடுத்து விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

''உங்களோட கொஞ்சம் பேசணும்," கிளி கொஞ்சிய அவள் குரலில் ஒரு நடுக்கமும் தெரிந்தது.

''பக்கத்து ரெஸ்ட்டாரன்ட்டுல போய்ப் பேசுறதுல உங்களுக்கு அப்ஜக்ஷன் எதுவுமில்லியே?" என்ற அர்ஜுனுக்குப் பதிலாகத் தலையாட்டினாள் காவ்யா.

அது லஞ்ச் டயமாதலால், உடனே கிளம்பினான் அர்ஜுன். ரெஸ்டாரன்ட் நிரம்பி வழிந்தது. வெளி வரவேற்பு அறையில் அமர்ந்தனர். அவள் பேசக் காத்திருந்தான்.

''உங்களால் எனக்கொரு உதவியாகணும், ப்ளீஸ்..." என ஆரம்பித்தாள்.

"என்ன? சொல்லு..."

"நிச்சயமாப் பண்ணுவீங்களா? பிராமிஸ்?" என்றாள் சிறு குழந்தையாக.

“ஷ்யூர்,” என்றான், அவள் குழந்தைத்தனத்தில் மனம் பறி கொடுத்த அர்ஜுன்.

என்ன கேட்கப் போகிறாளோ என்று மனம் ஒருபுறம் சிந்தனையில் ஆழ்ந்தது. இந்தக் கல்யாணம் நின்றுவிடக்கூடாதே என்று மற்றொருபுறம் மனம் பிரார்த்தித்தது.

"இது ரொம்ப முக்கியமான விஷயம். ஆனா சொல்றதுக்கும் கூச்சமா இருக்கு," என்று நிறுத்தின காவ்யாவை அவஸ்தையுடன் பார்த்தான் அர்ஜுன்.

"சீக்கிரமாகச் சொல் பெண்ணே!"

''வந்து... உங்களை மாதிரி கணவன் அமையறதுக்கு ரொம்ப கொடுத்து வெச்சிருக்கணும். போலித்தனமான கௌரவங்களை ஒதுக்கிட்டு, நீங்க நடந்துகிட்ட முறை, உங்க பெருந்தன்மை இதை நான் ரொம்ப மதிக்கிறேன். உங்க கொள்கை ரொம்ப உன்னதமானது. ஆனா....."

"அதிகம் சோதிக்காதே பெண்ணே!"

"உங்க கொள்கையை, நீங்க கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும்," என்ற காவ்யாவைத் திடுக்கிட்டுப் பார்த்தான் அர்ஜுன்.

"ஏன் அப்படிச் சொல்றீங்க? அன்னிக்கு நீங்க ஒண்ணும் சொல்லலியே?"

தயக்கத்துடன் ஆரம்பித்தாள் காவ்யா.

“எங்க அப்பா கொஞ்சம் ஒரு மாதிரி. சொல்றதுக்கே வெக்கமா இருக்கு. இருந்தும் இதை மறைக்க நானும், என் அம்மாவும் விரும்பல்லே. அன்னிக்கு எல்லார் மத்தியிலும் சொல்ல, தன்மானம் இடம் கொடுக்கல்லே.

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்துத் தாலி கட்டின என் அம்மாவைத் தவிர்த்து, எங்க அப்பாவுக்கு இன்னொரு பெண்ணோட தொடர்பு உண்டு."

எதிர்பாராத விஷயம்தான் என்றாலும், இது, தங்கள் திருமணத்திற்கு எந்த விதத்திலும் தடங்கலாக இருக்காது என்று நம்பினான் .

''ஓ! இதுதான் உன்னோட தயக்கத்துக்குக் காரணமா? உன் அப்பாவோட தனிப்பட்ட பிரச்னை இது. அதுக்காக நான் மறுத்துடுவேனோன்னு நீ பயப்பட வேண்டாம்.... நான் பார்த்த ஒரே பெண் நீதான். நீதான் என் மனைவின்னு முடிவும் பண்ணியாச்சு. மீதி எதைப் பத்தியும் ஒர்ரி பண்ணிக்காதே," என்றான் மென்மையாக.

இல்லைங்க... பிரச்னையே இனிமேல்தான் ஆரம்பம். எங்க அப்பாவுக்கு என் மேல உயிர்தான். அம்மாவும் கஷ்டப்பட்டு எனக்குன்னு எல்லாம் சேர்த்து வைச்சிருக்காங்க. இப்ப நீங்க எதுவுமே வேண்டாம்னு சொன்னா, அதுதான் சாக்குன்னு அப்பா அத்தனையையும் கொண்டுபோய், எங்க அந்தம்மா கிட்டே கொட்டிடுவாரு. அவங்களுக்கு ரெண்டு பொண்ணு... பிற்காலத்துல அம்மா ரொம்ப கஷ்டப் படுவாங்களோன்னு பயமா இருக்கு. கல்யாணம்ங்கற சாக்கில நீங்க வாங்கி வைச்சுக்கிட்டீங்கன்னா, அது அம்மாவுக்கு அவங்க கால்ல நிக்க உதவியா இருக்கும். உங்க இஷ்டம் இல்லாம ஒரு குந்துமணி நகையைக்கூட நான் தொடமாட்டேன். அம்மாவுக்குக்கூட நான் சொல்ற இந்த விஷயம் தெரியாது." மடை திறந்த வெள்ளமாய்ப் பேசினாள் காவ்யா.

"நான் எதுவும் வேண்டாங்கறதால இப்படிச் சொல்றே. இதுவே குடுக்கற வரதட்சணை எல்லாத்தையும் ஏத்துக்கறவனா இருந்தா என்ன செய்வே?" என்றான் அர்ஜுன்; அவளைச் சீண்டும் நோக்கத்துடன்.

"என்ன செய்ய முடியும்! நான் யதார்த்தமா வாழ விரும்பறேன். உங்களை மாதிரி லட்சியமெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனாலும் எங்க அம்மாவுக்குப் பிரச்னைன்னு வந்தா, நிச்சயம் போராடுவேன்," என்றாள் உறுதியுடன்.

அவள் வெளிப்படையான பேச்சும் மன உறுதியும் அவனை வெகுவாகக் கவர்ந்தன.

''அப்படி ஒரு நிலைமை உங்க அம்மாவுக்கு வரவேண்டாம். வந்தா, நான் நிச்சயம் விட்டுக் கொடுக்கமாட்டேன். எங்க அப்பா அம்மாவைப் போலவே உங்க அம்மாவை என்னால பார்த்துக்க முடியும். அதுக்கு அவங்க சம்மதிக்கலைன்னா நீ வேலைக்குப் போய் சம்பாதிச்சு அவங்களுக்கு உதவ லாமே. நான் தடையா இருக்கவே மாட்டேன்..இந்தக் கல்யாணம் கட்டாயம் நடக்கணும்.... உன்னைப் பார்த்த உடனேயே எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு காவ்யா", என்றவனைப் பார்க்க முடியாமல் தலை குனிந்த காவ்யா, "எனக்கும்தான்", என்றாள் வெட்கத்துடன்.

பின்குறிப்பு:-

கல்கி 15  நவம்பர் 1992இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com