சிறுகதை - கருப்புக் காரில் குழந்தை கடத்தல்!

சிறுகதை - கருப்புக் காரில் குழந்தை கடத்தல்!
Published on

-ஜெ. ஜெயக்குமார்

திருக்கடையூர் அபிலாஷ் ஹோட்டல் தங்கும் விடுதி அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது. மஹாராஷ்ட்ராவிலிருந்து வந்த குடும்பத்தின் ஐந்து வயது பையன் சந்தீப்பை காணவில்லை.

வாலிப வாழ்க்கையில் அப்படியும் இப்படியும் கஷ்டத்தோடும் நஷ்டத்தோடும் அல்லல்பட்டு திருமணம் செய்து முதுமை வாழ்க்கை வரும்போது சற்று வெற்றிபெற்று ஒருவித பொறுப்புணர்வுடன் ஒருவித மனநிறைவுடன் பேரன் பேத்திகளோடு கொண்டாடப் படும் வைபவம் சஷ்டி அப்த பூர்த்தி (அறுபதாம் கல்யாணம்), பீம ரத ஷாந்தி (எழுபதாம் கல்யாணம்), மற்றும் சதாபிஷேகம் எனப்படும் எண்பதாவது வயது நிறைவு திருமணங்கள்.

மயிலாடுதுறை அருகேயுள்ள திருக்கடையூர் இதுபோன்ற திருமணங்களுக்கென்றே மிகவும் பிரசித்தி பெற்று பல மாநிலங்களிலிருந்து தினமும் காலையில் இருபது, மாலையில் இருபது என்று முதியோர் திருமணங்கள் பத்தடிக்குப் பத்தடி பரப்பில் பக்கத்து பக்கத்தில் தொடர் வரிசையில் நடைபெற்றுக்கொண்டேயிருக்கும்.

முதல் நாள் பகல் மூன்று மணி அளவில் திமுதிமுவென்று தம்பதிகள் மற்றும் உறவினர்கள் தங்கும் விடுதி வந்திறங்கி மறுநாள் மூன்று மணி அளவில் வைபவத்தை முடித்துக்கொண்டு மயிலாடுதுறை வழியாக விட்ட வாழ்க்கையைத் தொடரப் போய்விடுவார்கள். தினம் தினம் திரளாக பல்வேறு மாநில தம்பதிகளும் உறவினர்களும் வந்து செல்வதால் விடுதிகள் ஒரே மகிழ்ச்சி கூச்சல் களமாகிவிடும்.

 

வ்வளவு களேபரத்தின் மத்தியில் விடுதியின் நெடிய நடைபாதையில் (காரிடார்) ஒரு சிறிய பிளாஸ்டிக் கிரிக்கெட் பேட்டுடன் ஒரு மஞ்சள் குஷன் ஸ்பான்ஜ் பந்துடன் ஐந்து வயது பேரன் ஆரூரனுடன் விளையாடிக்கொண்டிருந்தார் முதிய மணமகன் பிச்சுமணி.

விடுதியின் கோடியிலமைந்த ‘ஆனந்தம்’, ‘மங்களம்’, ‘அறுசுவை’ போன்ற ரெஸ்ட்டாரெண்ட்களில் உணவருந்த வந்துபோகும் சாரி சாரியான மனித ரயில் வண்டிகட்கு அவ்வப்போது விளையாட்டை நிறுத்தி வழி விட்டுக்கொண்டு பேரன் மற்றும் பக்கத்து அறைகள் சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தார்.

ஒரு முறை பேரன் பந்தை ஓங்கியடிக்க அது பக்கத்தில் நின்றிருந்த ஒரு சிறுவனின் கண்ணில் பட்டுவிட அவன் அழத்தொடங்க அவன் அப்பா ஓடோடி வந்து பிச்சுமணி தாத்தாவை ஹிந்தியில் திட்ட (ஆப் கோ பாகல் ஹோ?) இடம் களேபரமானது.

அவ்வளவு பேர் முன்னிலையிலும் தாத்தா பிச்சுமணி கடிந்துகொள்ளப் படுவதைப் பார்த்த பேரனுக்கு இனம் புரியாத பயம் கலந்த குழப்பம்.

ற்று நேரத்திற்கு பிறகு கிரிக்கெட்டில் கலந்துகொண்ட சந்தீப் என்னும் சிறுவனைக் காணவில்லை என்பது கூடுதல் அதிர்ச்சி அனைவர்க்கும்.

மராட்டிய குடும்பம் இன்னும் சற்று நேரத்தில் தங்கும் அறைகளைக் காலி செய்துவிட்டு அன்றிரவு ரயிலைப் பிடித்து நாக்பூர் திரும்பவேண்டும். அவர்கள் அறைகளை ஆக்கிரமிக்க அம்பாசமுத்திரத்தில் இருந்து வந்த கல்யாணக் குடும்பம் அரை குறை ஹிந்தியில் அவர்களை அவசரப்படுத்திக்கொண்டிருந்தது.

போலீசில் புகார் கொடுக்கப்பட்டு போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், விடுதியின் சி.சி. டி.வி காமிராக்கள் மூலமாக ஆய்வு செய்ததில், முக்காடிட்ட இரு பெண்கள் மற்றும் தொப்பியணிந்த இரு ஆண்கள் சந்தீப்பை அரணாக அணைத்து அப்படியே தூக்கிக்கொண்டு செல்வது தெரிந்தது.

கலங்கிய கண்களோடு மொழி தெரியாத புது இடத்தில் சந்தீப்பின் பெற்றோர் தன் ஒரே மகனை இழந்து அங்கும் இங்கும் அலை பாய்ந்துகொண்டிருந்த விதம் அனைவரையும் நெகிழ வைத்தது. குறிப்பாக பிச்சுமணியை.

தன் பேரனோடு விளையாடும்போது விளையாட்டில் கலந்துகொண்ட சந்தீப் காருக்கடியில் விழுந்த பந்தை எடுக்கும் முயற்சியில் காணாமல் போய்விட்டானே என்று.

ஒரு வேளை நாம் பேரனோடு விளையாடாமல் இருந்திருந்தால் சந்தீப் காணாமல் போயிருக்கமாட்டானோ என்ற குற்ற உணர்ச்சி அவரை துளைத்து எடுத்தது.

"இதற்குத்தான் வந்த இடத்தில் என்ன விளையாட்டு வேண்டிக்கெடக்கு என்று அப்போதே சொன்னேன் " என்று பிச்சுமணி மனைவி ஜெயா வேதனை தீயில் நெய் ஊற்றினாள்.

சந்தீப் கிரிக்கெட் விளையாடும்போது கடத்தப்பட்டான் என்பதால் முதலில் போலீசார் பிச்சுமணி குடும்பத்திற்கும் கடத்தல் குழுவுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கவேண்டும் என்று சந்தேகப்பட தீவிர விசாரணைக்குப் பிறகு பிச்சுமணியின் குடும்பத்தைச் சந்தேக வளையத்தில் இருந்து விடுவித்தனர்.

இருந்தாலும், பிச்சுமணியின் குடும்பத்தின் அனைத்து தரவுகளையும் வாங்கிக்கொண்டு, "தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்" என்ற பயமுறுத்தல் கலந்த அறிவுறுத்தலோடு அனுப்பப்பட்டனர்.

காணாமல்போன சந்தீப்பின் நிலை குறித்து சஞ்சல மனத்துடன் பிச்சுமணி குடும்பத்தினர் மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக சொந்த ஊர் திருச்சி திரும்ப காரில் பயணப்பட்டுக்கொண்டிருந்தனர்.

நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் வழியெங்கும் போலீஸ் சோதனை; அங்கங்கு காரை நிறுத்தி உடைமைகளை திறந்து சஷ்டி அப்த பூர்த்தி பத்திரிக்கை மற்றும் தங்கும் விடுதி ரசீதுகளைக் காண்பித்து போலீஸின் தீவிர சோதனையில் இருந்து ஒவ்வொரு ஊராக மீண்டுகொண்டிருந்தனர்.

‘அவனவன் ஐநூறு கோடி, ஆயிரம் கோடி ‘தேர்தல் பத்திரம்’ வாங்கறான்,கொடுக்கறான்; அவனையெல்லாம் "எங்கேயிருந்து வந்ததடா அவ்வளவு பணம்?" என்று கேள்வி கேட்காமல் கோயிலுக்குப் போய் வருகிற சாதாரண மனுஷாளை சோதனை போடுவது வேதனை அல்லவா" என்று காரில் அலுத்துக்கொண்டாள் பாட்டி ஜெயா.

வழியில் பல கருப்பு கார்கள் வேகமாக இவர்களைத் தாண்டி சென்றன. தஞ்சாவூர் திருச்சி தேசிய சாலையில் ஒரு கருப்பு கார் கரடுமுரடாக வேகத்தடைகளைத் தாண்டி செல்ல முற்பட்டது போலீஸ் சோதனை சாவடியருகில்.

காரின் முன் சீட்டில் பிச்சுமணியின் மடியில் அமர்ந்திருந்த பேரன் ஆரூரன் "அதோ! அந்த காருக்கடியில்தான் பந்தை எடுக்க ஓடினான் சந்தீப்!" என்றான் சற்று மழலை மொழியில்.

பிச்சுமணிக்கு சரிவர காது கேட்காததால் அவர் மனைவி ஜெயா பேரன் சொன்னதை சற்று உரத்தக் குரலில் செவிபெயர்த்தாள்.

"எப்படிடா! உனக்குத் தெரியும்?" என்று ஜெயா பேரனைக் கேட்க "கார் பின்னாடி ஸ்பைடர்மேன் ஸ்டிக்கர்" என்று பேரன் சொல்லிக்கொண்டிருக்குபோதே போலீஸ் சோதனைக்குக் கார் நிறுத்தப்பட்டு தீவிரமாகச் சோதனை செய்யப்படும்போது காரிலிருந்து இரு ஆண்கள் தலை தெறிக்க ஆளுக்கொரு திசையில் ஓட, போலீசார் புரியாது திகைத்தனர்.

பிச்சுமணி பேரனை தூக்கிக்கொண்டு கருப்பு காரை நோக்கி விரைந்து பின் சீட்டை பார்த்தபோது இரு பெண்கள் இடையில் கையில் மஞ்சள் குஷன் ஸ்பான்ஜ் பந்துடன் கண்களில் திகில் கலந்த,  அறையப்பட்ட அறைகளால் கன்னம் வீங்கிய மராட்டிய மகன் சந்தீப்!

"நான் ஒரு தடவை காருக்கு அடியில் பந்தை எடுத்து வரும்போது காரின் பின்னாடி ஸ்பைடர்மேன் ஸ்டிக்கரை பார்த்தேன்" என்று பாட்டியை அதிர வைத்தான் பேரன்!

எப்போது பார்த்தாலும் ஸ்பைடர்மேன் ஸ்டிக்கராக வாங்கித்தள்ளும் பேரனை எண்ணி அலுத்துக்கொள்ளும் பாட்டி இந்த முறை வித்தியாசமாக பெருமையுடன் பேரனை உச்சி முகர்ந்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com