சிறுகதை – மரியாதை!

ஓவியம்; ஜி.கே.மூர்த்தி
ஓவியம்; ஜி.கே.மூர்த்தி
Published on

-கிருஷ்ணா

ன் மனைவியின் சித்தி பையன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தோம், ஸ்கூட்டரில், வழியில், பெட்ரோல் பங்க்கில் ஸ்கூட்டரை நிறுத்தினேன். ரிசர்வ் விழுந்துவிட்டது.

"வணக்கம் சார். வணக்கம்மா!" என்று சலாமடித்தபடி வந்தான் ஒரு இளைஞன்.

"அட, நீ எங்கேப்பா இங்கே?" என்றேன் வியப்புடன்.

எங்கள் தெருவிலே குடியிருக்கிறான். ஒரு முறை திடீர் பஸ் ஸ்டிரைக் நடந்தபோது, அவனை என் ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு வீட்டில் விட்டிருக்கிறேன். அந்த நன்றி எப்போதும் அவன் கண்களில். இப்போதெல்லாம் மிகவும் பவ்யமாய் நடந்துகொள்கிறான்.

"வரோம் தம்பி" என்றபடி ஸ்கூட்டரைக் கிளப்பினேன்.

"அம்மா படற கஷ்டம் உணர்ந்து, பையனும் கிடைச்ச வேலையில் இருக்கான். நல்ல பையன்" என்று பானு அவனுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் கொடுத்தாள், போகும்போது.

அவன் அப்பா நான்கு வருடம் முன்பு இறந்து போனதால் சிரமப்படுகிறதாம் குடும்பம். பானு அளித்த உபரித் தகவல் இது.

பானுவின் சித்தி பையன் வீட்டின் முன் ஸ்கூட்டரை நிறுத்தினோம். அவர்கள் மகளுக்கு இன்று பிறந்த நாள். கட்டாயம் வரவேண்டும் என்று வற்புறுத்தி அழைத்ததால், வந்திருக்கிறோம். இத்தனைக்கும் இருபதாவது பிறந்த நாள்!

"வாங்க, வாங்க" என்று அகமும் முகமும் மலர வரவேற்றனர்.

நான் அதிகம் இங்கு வந்ததில்லை. இரண்டு குடும்பங்களுக்கும் நடுவே தொடர்பு கூடக் கொஞ்சம் கொஞ்சம்தான்.

''உட்காருங்க" என்று மரியாதையுடன் சோபாவை சுட்டிக்காட்டினார் ரகு - சித்தியின் பையன்.

"குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு வரலியா பானு?" என்று உரிமையுடன் அதட்டினார். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம்.

"ராகவி எங்கே? பிறந்த நாள் வாழ்த்துக்கள்!" என்றபடி பக்கத்து அறைக்குள் நுழைந்து, மறைந்தாள் பானு. குரல் மட்டும் சள சளத்துக்கொண்டிருந்தது.

ரஸ்னா ஜூஸ் 'ஜில்'லென வந்தது. தொண்டைக்கு இதமாய் இருந்தது.

அதுவரை ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியை ரகு அணைத்தார்.

'டீ.வியைவிட நீ முக்கியம்' என்று குறிப்பால் உணர்த்தியது பெருமையாய் இருந்தது.

"சொல்லுங்க" என்று எனது எதிரே சேரில் அமர்ந்தார் ரகு.

ராகவி அறையிலிருந்து வெளிப்பட்டாள். "அங்கிள், இந்தாங்க ஸ்வீட்!'' என்று தட்டை நீட்டினாள். மைசூர்பாகு அழகாக சதுரம், சதுரமாய் வெட்டப்பட்டிருந்தது.

"என் பர்த்டே ட்ரஸ் நல்லாயிருக்கா?" என்றாள் கண்கள் விரிய.

நீலக்கலர் டாப்ஸ். சூரிதார் உடை அவளுக்குப் பொருத்தமாய் இருந்தது. அதைவிட எனது அபிப்ராயம் மிகவும் அவசியம் என்பது போன்ற குரலில் அவள் பேசியது பிடித்திருந்தது.

“அமர்க்களமாயிருக்கு" என்று நான் சொன்னதும் குதித்துக்கொண்டு உள்ளே ஓடினாள்.

"நீங்க சொன்னதும் எவ்வளவு பூரிப்பு பாருங்க!" என்றார் ரகு. என் முகத்தில் பெருமையாய் விரிந்தது மலர்ச்சி. இங்கு நான் மட்டுமே முக்கியம் என்பதாய் இருந்தன அவர்களின் பேச்சு.

எவ்வளவு நல்ல மனிதர்கள்! இத்தனை நாள் பழகாமல் இருந்து விட்டோமே என்று வருத்தப்பட்டேன்.

"ஒரே ஊரிலிருந்தும், நாம நெருங்கிப் பழகாமல் போனது வருத்தமாயிருக்கு" என்று ரகு சொன்னதும் வியந்து போனேன்.

ஒத்த எண்ண ஓட்டம்!

''ரகுவுக்கு அவன் சொந்தத் தங்கையைவிட,  நான் என்றால் தனி பிரியம்!" என்றாள் பானு, ஸ்கூட்டரில் திரும்பும்போது.

“எப்ப ராகவியைக் கூட்டிட்டுப் போகப் போறீங்க உங்க நண்பூர் வீட்டுக்கு?"

'இன்னிக்கு புதன்கிழமையா? வெள்ளிக்கிழமை போகலாம்னு இருக்கேன்" என்று பதிலளித்தேன்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அம்மாவும் தம்பியும்!
ஓவியம்; ஜி.கே.மூர்த்தி

னது நண்பன் மோகன் மூன்று மாதம் முன்புதான் இந்த ஊருக்கு வேலை மாற்றம் பெற்று வந்திருக்கிறான்.

நிர்மல் ஃபைபர்ஸ்' ஆலையின் பர்சனல் மானேஜர். தென்னிந்தியா முழுதும் கிளைகள் உள்ள பெரிய நிறுவனம்.

நாங்கள் இருவரும் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாய்ப் படித்துத் தேறியவர்கள். அதைவிட அவனது ஏழ்மையின் காரணமாய் அவனது ஸ்கூல் ஃபீஸ், தேர்வுக் கட்டணம் எல்லாவற்றையும் என் அப்பாவே கட்டியிருக்கிறார். அதனால் ஓரளவு நன்றிக்கடன் பட்டவனும் கூட.

இந்த ஊருக்கு வந்ததும் நேரே என் வீடு தேடி வந்து சொல்லிவிட்டுப் போகுமளவு இன்னமும் நன்றி மறக்காத நண்பன். அவன் மூலம் ராகவிக்கு வேலை ஏற்பாடு செய்ய வேண்டும்.

எப்படியோ செய்தி கேள்விப்பட்டு ரகு எங்கள் வீட்டுப் படியேறி உறவைப் புதுப்பித்துக் கொண்டார்.

நானும் உதவுவதாய்ச் சொல்லிவிட்டேன், பானுவின் வற்புறுத்தலை மீற முடியாமல்.

வெள்ளிக் கிழமை காலை ராகவி எங்கள் வீட்டுக்கு வர, ராகு காலம் முடிந்தபிறகு அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.

'நிர்மல் ஃபைபர்ஸ்' ஆபீஸ் எங்களை வரவேற்றது.

ரிஸப்ஷனில் காத்திருந்தோம். விவரம் ஹெட் சொல்லிக் காத்திருந்தோம். ஆபீசிலிருந்து எம்.டி. வந்திருப்பதாகவும், மோகன் அவருடன் மீட்டிங்கில் இருப்பதாகவும், இன்று யாரையும் பார்க்க முடியாது என்று சொல்லி விட்டதாகவும் ரிசப்ஷனிஸ்ட் சொன்னாள்.

"என் பெயரைச் சொன்னீங்களா?" என்றேன் ராகவியின் ஏமாற்றமடைந்த முகத்தை கவனித்தபடி.

''ஓ எஸ்! நோ விசிட்டர்ஸ்னு சொல்லிட்டார்."

ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

அடுத்த நாள் மாலை என் அலுவலகம் முடிந்து நேரே மோகன் வீடு தேடிச் சென்றேன், ராகவியுடன். அங்கும் பார்க்க முடியவில்லை. அந்த வாரம் முழுதும் முயற்சித்தேன்.

எம்.டி. வருகை, ஃபாரின் டெலிகேட்ஸ் விசிட், மினிஸ்டர் வருகை, லேபர் பிரச்னை ... ஏதேதோ காரணங்கள். மோகன் வேண்டுமென்றே என்னைத் தவிர்க்கிறானோ....!

எனக்குள்கூட சந்தேகம் முளை விட்டது.

போகப்போக ராகவியின் உற்சாகம்கூட வடிந்துவிட்டது.

த்து நாள் கழித்து நான் மட்டும் தனியாய் ஆபீஸ் முடிந்ததும் ரகு வீடு தேடிச் சென்றேன்.

"வாங்க" என்று வரவேற்ற ரகுவின் குரலில் உணர்ச்சியில்லை.

அவர் சொல்லாமலே சோபாவில் அமர்ந்தேன். டீ.வி ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ டிராமா.

வீடே டீ.வியின்பால் ஈர்க்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன்.

ரகு, அவர் மனைவி, ராகவி, அவள் தம்பி அனைவரும் நாடகத்தின் அறுவை ஜோக் ஒன்றுக்கு சிரித்துக் கொண்டிருந்தனர்.

ஒருவர்கூட என்னிடம் பேச முயலாதது சங்கடமாய் இருந்தது.

''அப்ப, நான் வரேன்" என்று கிளம்பினேன்.

“காப்பி சாப்பிட்டுட்டுப் போகலாமே" என்ற ரகுவின் குரலில் பழைய விருந்தோம்பல் இல்லை. இயந்திரத்தனமான குரல்! அப்பப்பா! மனிதர்கள்தான் எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் தம் இயல்பை! எப்படி எல்லாம் வெளிப்படுத்துகிறார்கள் தங்கள் மனதை, குரல் மூலம்!

காப்பியை மறுத்துவிட்டுக் கிளம்பினேன்.

சம்பிரதாயமாக வாசல்வரை வந்தவர், நான் ஸ்கூட்டரைக் கிளப்புவதற்கு முன்பே வாசலைத் தாழிட்டு விட்டார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: முகம் தெரியாத முகம்!
ஓவியம்; ஜி.கே.மூர்த்தி

ழியில் பெட்ரோல் பங்க். சட்டைப் பையைப் பார்த்தேன். பெட்ரோலுக்குப் பணமிருந்தது.

'"வாங்க சார்" என்றான் எங்கள் தெரு இளைஞன் பவ்யமாய்.

"எத்தனை லிட்டர் சார்?"

பணத்தைக் கொடுத்தேன். அவன் பில் போட ஓடினான், என்னைக் காக்க வைக்க மனமில்லாமல்.

மோகன் இன்று என் ஆபீசுக்குப் போன் செய்தான்.

எதிர்பாராத வேலைப் பளுவில், ஒரு வாரமாய் நான் அலைந்தும் சந்திக்க இயலாமல் போய்விட்டதற்கு மன்னிப்புக் கேட்டான். வார்த்தைக்கு நூறு மன்னிப்பு சொன்னான்

பெரிய பதவியில் இருப்பதால் இது மாதிரியான சங்கடமான நிலை என்று விளக்கினான்

"என்ன விஷயம்?" என்று கேட்டான். "எனக்குத் தெரிந்தவருக்கு வேலை வேண்டும்" என்றேன்.

நாளை காலை அலுவலகத்துக்கு வந்து பார்க்கும்படிச் சொன்னான். வேலைக்கு சேர்க்க விரும்பும் ஆளையும் கூட்டி வரச் சொன்னான். நிச்சயம் வேலை கிடைக்கும், ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்தான்.

அதைச் சொல்லத்தான் ரகுவின் வீடு தேடிச் சென்றேன். ப்ச், அவர்களுக்குக் கொடுப்பினை இல்லை.

பெட்ரோல் பங்க் இளைஞன் பணிவாய் மீதி சில்லரையை நீட்டினான்.

''தம்பி, நீ என்ன படிச்சிருக்கே?"

"பி.ஏ. எகனாமிக்ஸ் சார்!" என்றவனை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

''படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கலேன்னு வீட்டுல பாரமா இருக்கறதைவிட ஏதோ ஒரு வேலை கிடைச்சா போதுங்கறது என் வீட்டு நிலைமை சார்!" என்றான் என் பார்வையைப் படித்தவனாய்.

உழைப்புக்கு அஞ்சாத இளைஞன்! வீட்டுச் சுமையைத் தாங்கத் தயாராய் உழைக்கும் இளைஞன்! என்றோ ஸ்கூட்டரில் ஏற்றிச் சென்ற உதவிக்கு இன்னும் மரியாதை கொடுக்கும் இளைஞன்!

"தம்பி, நாளைக்குக் காலையிலே என்னோட நீ வர முடியுமா, ஒருத்தரைப் பார்க்க?" என்றேன்.

 பின்குறிப்பு:-

கல்கி 02 ஜனவரி 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com