சிறுகதை - நடுத்தர வர்க்கம்!

ஓவியம்: மருது
ஓவியம்: மருது

-கிருஷ்ணா

ன் உள்ளத்தினுள் எரிமலை குமுறிக்கொண்டிருந்தது. இன்று அவனை உண்டு,  இல்லை என்று பார்த்துவிட வேண்டும்!

அறுபதாயிரம் ரூபாய் என்பது சாதாரணமா? அதுவும் ஓய்வை எதிர்நோக்கிக் காத்திருக்கும் என்னைப் போன்ற அரசாங்க குமாஸ்தா வர்க்கத்துக்கு.

இப்படி சுளையாய் எண்ணிக் கொடுத்துவிட்டு நிற்கிறேனே! அவன் இப்படி ஏமாற்றுவான் என யார் கண்டது? பாழும் ஆசை! பணத்தாசை! அதனால் வந்த வினை. நான் உண்டு,  ஆபீஸ் உண்டு, வீடு உண்டு என்று இருந்தவனை, நான்கு மாதம் முன்பு வந்து குறுக்கிட்டது விதி அவன் ரூபத்தில்.

டெண்டர் ஃபைலுக்காக அலைந்துகொண்டிருந்தவனின் கண்ணில் பட்டுவிட்டேன்.

ராஸ்கல்! என்னமாய் பேசினான் தேனொழுக! எவ்வளவு சீக்கிரம் ஒட்டிக்கொண்டு உறவாடினான்!

"சிங்கப்பூருக்குப் பையனை அனுப்புங்களேன் சார். உங்க நலம் விரும்பின்ற முறையில் சொல்றேன். மூன்று வருடமோ,  அஞ்சு வருடமோ பையன் அங்கே வேலை பார்க்கட்டும்" என்றான் ஒரு நாள்.

பணம் என்னும் பிசாசு அவன் வாய் வழியே என் காதுக்குள் புகுந்தது.

"பையன் இங்கேயே நல்ல வேலையிலே சேர்ந்துடுவான் போலிருக்கு. அடுத்த மாசம் ஆர்டர் வந்துடும்."

"என்ன சார் பிச்சாத்து வேலை. மாசம் மூவாயிரம் கிடைக்குமா இங்கே?"

மூவாயிரத்தை அவன் அலட்சியமாய் உச்சரித்த விதத்தில் மயங்கிப்போனேன்.

"சிங்கப்பூரில் மாசம் முப்பதாயிரம் ரூபாய்க்கு வேலை ஏற்பாடு செய்யறேன்."

தூண்டிலை வீசினான்.

மீனாய் நான் சிக்கிவிட்டேன்.

கலர் டீ.வி., ஃபிரிட்ஜ், வி.சி.ஆர், ஏர் கூலர், டி.நகரில் வீடு என்ற ஆசைக் கோட்டைகள் என்னுள் எழ ஆரம்பித்தன.

இதையும் படியுங்கள்:
சத்துக்கள் நிறைந்த மலபார் கொண்டைக்கடலை கறி!
ஓவியம்: மருது

வனை இன்று ஒரு கை பார்த்தே ஆக வேண்டும்.

"கையாலாகாத மனுஷன் நீங்க" என்று தாலி கட்டிய மனைவியே இடித்துக் காண்பித்துவிட்டாள். அவளுக்காகவாவது என் ஆண்மையை நிரூபித்து ஆக வேண்டும்.

அவன் சட்டையைக் கோத்துப் பிடித்து மூஞ்சியில் அறைய வேண்டும். 'அறுபதாயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் சார். மற்றவங்களுக்கு அறுபத்தஞ்சு. என் கமிஷன் ஐயாயிரத்தை உங்களுக்காகக் குறைச்சுக்கிட் டேன் சார்.'

'ஆஹா! என்ன அருமையான நண்பன்" என்று பூரித்துப் போனேன்.

'அறுபதாயிரத்துக்கு எங்கே போவேன்?" என்றேன் தயக்கமாய்

''இப்படி யோசிச்சா எப்படி சார். பையன் ஆறே மாசத்துல உங்க வாழ்க்கையையே மாற்றிடுவான். பணத்தாலேயே அடிப்பான் பாருங்க."

உண்மைதான். பணத்தை வாங்கிக்கொண்டு இவன் என் மனத்தில் அடித்துவிட்டான். வாழ்க்கை முறையே மாறித்தான் போய்விட்டது.

ஏதோ நூறு, இருநூறு கைமாற்றுக் கடனுடன் யோக்கியமாய் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தவனை, பிச்சைக்காரனாக்கி விட்டான், துரோகி!

ஆபீஸ் லோன் இருபது ஆயிரத்துக்கு நண்பர் மேல் கிடைக்காமல், உறவினர், நண்பர்களிடம் கெஞ்சி, துண்டு விரித்து மேலும் இருபது சேர்த்துவிட்டேன். மீதி இருபதை மூன்று வட்டிக்கு பைனான்ஸ் கம்பெனி ஒன்றில் புரோநோட்டில் கையெழுத்துப் போட்டுச் சமாளித்தேன்.

பையன்தான் சிங்கப்பூர் சீமானாகப் போகிறானே. ஆயிரமாயிரமாய்க் குவியப் போகிறதே. தயக்கமின்றி வாங்கினேன். ஆனால் இப்போது? பைனான்சில் வட்டி மட்டும் கட்டவே முழி பிதுங்குகிறது. கடன் கொடுத்த நட்பும், சுற்றமும் நான் ஏமாந்தது தெரிந்தவுடன் நெருக்குகிறது - பணத்தைத் திரும்பி வாங்க.

இது போதாதென்று 'ஏமாந்த சோணகிரி' என்ற அக்கம்பக்கத்தவர் கேலிப்பார்வை வேறு.

இதற்கெல்லாம் காரணம் அந்த சாத்தானின் மகன்தானே!

பாவம் என் மகன்! மதிப்பெல்லாம் இழந்து நிராயுதபாணியாய் அவனை ஆக்கிவிட்டானே அந்த சதிகார சத்ரு.

'வொர்க் பர்மிட்' இருந்தால்தான் சிங்கப்பூரில் வேலை செய்யமுடியுமாம். டிராவலர்ஸ் விசாவில் வேண்டுமென்றே என் மகனை விமானம் ஏற்றி அனுப்பிவிட்டான். யாருக்குத் தெரியும் இதெல்லாம்?

சிங்கப்பூர் ஏஜண்ட் எல்லாம் செய்து தருவான் என்று பச்சையாய்ப் புளுகியிருக்கிறான். ஆனால் அங்கு கைவிரித்து விட்டார்கள்.

நல்லவேளை போலீஸ் கையில் சிக்கி ஜெயிலில் அடைபட்டு, அவதிப்படாமல் திரும்பினானே, என் பையன்!

த்தியால் அவன் நெஞ்சில் குத்த வேண்டும்போல ஆத்திரம் பீறிட்டது. இன்று அவனைச் சும்மா விடப்போவதில்லை! என்னை என்ன ஏமாளி என்றா நினைத்திருக்கிறான், படவாப் பயல்!?

என் மகன் திரும்பியதும் போய்க் கேட்டதற்கு ஏதோ சால்ஜாப்பு சொல்லிவிட்டான். சிங்கப்பூர் அரசாங்கம் விதிகளைத் திடீரென மாற்றி விட்டதாக ஜோடித்தான் கதையை.

ஆனால் இவன் பிழைப்பே இதுதான் என்று விசாரித்த போது தெரிந்தது. இப்போது இதைச் சொல்பவர்கள் முன்பே சொல்லித் தொலைத்திருக்கலாம். அப்போதெல்லாம் கொழுக்கட்டையையா வாயில் அடக்கி வைத்திருந்தார்கள். எல்லாம் கலி காலம்! யார் கஷ்டப்பட்டால் நமக்கென்ன என்ற விகார புத்தி! ப்ச!

தோ அவன் வீடு வந்துவிட்டது. ஊரான் காசைக் கொள்ளையடித்த பணத்தில் பளபளத்தது வீடு. கடப்பாரையால் நாலு போடு போட வேண்டும் போலிருந்தது.

உள்ளே சென்றேன்.

"என்ன சார்? அங்கேயே நின்னுட்டீங்க? உள்ளே வாங்க" என்று அழைத்தான் அவன்.

அவன் முகத்தைப் பார்த்ததும் ரௌத்ரம் தலைதூக்கியது.

''பணம் விஷயமாய்தான்" என்று அதட்டலாய் ஆரம்பித்தேன்.

"உங்களை நம்பித்தான் இவ்வளவு செலவழிச்சு அனுப்பினேன் பையனை. இப்படி ஏமாத்திட்டீங்களே. சுற்றிவர கடன் கொடுத்தவர்கள் மென்னியை முறிக்காத குறை. தயவு செஞ்சு பாதிப் பணமாவது திருப்பிக் கொடுத்தீங்கன்னா...."

என்னையறியாமல் என் குரலில் கடுமை குறைந்து,  தழுதழுத்து, அழுகையாய்ப் பிசிறடித்தது.

பின்குறிப்பு:-

கல்கி 27 ஜுன் 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com