சிறுகதை - என் சின்னப் பேரழகியே, ராட்சசியே...

ஓவியம்; கரோ
ஓவியம்; கரோ
Published on

-சோம. வள்ளியப்பன்

ந்தச் சிறுகதை அந்த வாரமே பிரசுரமாகிவிட்டது. இரண்டாண்டுகளில் இருபத்தெட்டுக் கதைகள் பிரசுரமாகியிருந்தாலும் விஜயனுக்கு இந்தக் கதை பிரசுரமாக வேண்டுமே என்று தவித்துக்கொண்டிருந்தான்.

அந்தத் தவிப்புக்குக் காரணம் கவிதா. விஜயனின் மனதை அபகரித்து, அவன் தன் பலமெல்லாம் கவிதாவின் அங்கீகரிப்பில்தான் என எண்ண வைத்தவள்.

அவன் வேலை செய்யும் அதே செக்ஷனில் ஆறு மேஜைகள் தள்ளி அமர்ந்திருக்கிறாள். ஒரு மாதமாய் விஜய் காட்டும் பிரியத்தையும் காதல் வயப்பட்டவர்களுக்கே உண்டான விஷேச நடவடிக்கைகளையும் தெரிந்துகொண்டதாகவே காட்டாதவள். அதன் மூலம் ராட்சசி. அழுத்தக்காரி, அலட்டிக்கொள்கிறாள் கர்வி... என்றெல்லாம் விஜயால் மனதிற்குள் திட்டப் படுபவள்.

'"விஜய், உங்களுக்கு போன்...."

பாதி அலுவலகம் நிமிர்ந்து பார்த்தது. பார்க்காத பாதியில் கவிதா இருப்பாள் என்று சொல்லவும் வேண்டுமா?

"ஹலோ... விஜய் பேசுறேன்....''

"கங்ராட்ஸ்... உங்க கதை இன்னைக்கு 'சூரியன்'ல வந்திருக்கு... ரொம்ப உணர்ச்சிகரமாயிருக்கு..."

"தாங்ஸ்... மதியம் பார்க்கலாம்."

விஜய் தன்னையே கதாநாயகனாக்கி, கவிதாவிடமிருந்து பதில் இல்லாததைக் கோபித்து. வருந்தி, தன் காதல்- தீ தகிப்பை எழுதியிருந்த கதை இன்று இரண்டு லட்சம் பிரதிகள் கடைகடையாய்த் தொங்கும்.

'அத்தனை லட்சமும் படிக்கட்டும், படிக்காமல் போகட்டும்! ஏய்.... சின்னப் பேரழகியே... பேசா மடந்தையே... டிரையல் பாலன்ஸ் புலியே.. இதைப்படி... என்னைப் புரிந்துகொள். காதல் ஒன்றும் பாவம் அல்ல. நான் உன்னை விரும்புகிறேன் என்று கோடிகாட்டுவது கேவலமும் அல்ல. சொல்லித் தொலையேன் நீயும் என்னை விரும்புகிறாய் என்று. உன் கௌரவமா குறைந்து விடும்!'

விஜய்க்கு வேலை ஓடவில்லை. மணி எப்பொழுது பன்னிரண்டாகும்? எப்பொழுது சாப்பாடு முடிந்து நண்பர்கள் கூடுவோம் என்ற தவிப்பு இருந்தது.

அவனை மானேஜர் அழைக்க, அவர்கள் இன்டர்னல் ஆடிட்டர் அறைக்குச் சென்றார்கள். திரும்புகையில் மணி 12.10. தன் சீட்டிற்கு ஓடினான். அவன் மேஜையருகில் நண்பர்கள் ராஜேஷ், மோகன், புவனா, ஒரு டேபிள் தள்ளி கவிதா.

''என்ன விஜய் சாப்பிட்டுட்டு வந்துர்றியா?''

"இல்லப்பா பசிக்கல..."

சொல்லிவிட்டு மிக ஜாக்கிரதையாய் கவிதா பக்கம் பார்த்தான். காதில் விழாமலா இருக்கும்? இராட்சசி. நிமிர வேண்டுமே... ம்ஹும்.

"ஹலோ... வயித்தக் காயப்ப போடாதப்பா ... சாப்பிட்டுட்டு வந்திரு.''

கட்டாயமாக மறுத்தான். கவிதா இன்பார்மலாக அமர்ந்து பேசும் இந்த முப்பது நிமிடங்களைக் கேவலம் வயிற்றை நிரப்புவதில் இழக்க அவன் தயாரில்லை.

"கதை சூப்பரா வந்திருக்குப்பா."

''படிச்சீங்களா?"

"நான் முடிச்சாச்சு. புவனா பாத்திட்டாங்க... புக் எங்க?"

சுற்று முற்றும் பார்த்துவிட்டு, "கவிதாகிட்ட இருக்கா?” என்றான் ராஜேஷ்.

விஜய் நேரடியாக கவிதாவைப் பார்த்தான். அவனுடைய மறைமுகக் காதல் கடிதம் சிறுகதையாக பகிரங்கமாக அவள் கையில்... படி... படி... உனக்குப் புரியாமலா போய்விடும்!”

'தங்கம்' என்று அவள் அண்ணன்மார்கள் அவளைச் செல்லமாக அழைப்பார்களாம். ஒருமுறை மறதியாக அவளுக்கு வந்த போனில் அவன் சின்ன அண்ணன் அழைக்க, போனை எடுத்த விஜய் 'தங்கமின்னு இங்க யாரும் இல்லையே' எனச் சொல்ல, 'சாரி... அவங்க பேரு கவிதா...வீட்ல தங்கம்' என்று கூப்பிடுவோம் எனச் சொன்னான்.

சரியாகத்தான் அழைக்கிறார்கள் அண்ணன்கள்... என்ன ஒரு நிறம்! அந்த விரல்கள் பக்கங்களைப் புரட்டுவதையே பார்த்தவனை ராஜேஷ் குரல் திருப்பியது.

பேச்சு சிறுகதைப் போட்டிகள் பற்றியும், பின் அலுவலக டிரான்ஸ்பர்கள் பற்றியும் இருந்தது. விஜய் மனமோ கவிதா படிக்கப் படிக்க அவள் மனத்தில் என்ன ஓடும்? ரியாக்ஷன் என்ன எனப் பார்க்கத் துடித்தது.

அவள் முடித்ததும் அந்தப் புத்தகத்தைச் சிறிது சுருட்டினாற்போல் கையில் வைத்திருந்தாள்... பின்பு மேஜை மேல் வைத்துவிட்டு எழுந்தாள்.

நேரமாகிவிட அனைவரும் 'சொல்லிக்கொண்டு கிளம்ப, விஜய் பரிதாபமாக கவிதா பக்கம் சென்றான்.

"என்னங்க... கதை படிச்சீங்களா?"

"ம்..."

"எப்படியிருக்கு...?"  நெஞ்சு படபடத்தது. அவள் முகத்தில்... ஒன்றும் தெரியவில்லை. பெரிய ஞானி போல சீ...

"ம்...ம்..."

"என்ன, ம்... ம்...ன்னா நல்லாயிருக்கா, இல்லையா?"

ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு தன் சீட்டிற்கு சென்றுவிட்டாள்.

மற்றவர்களும் வந்துவிட விஜய் வேறு வழியின்றி சீட்டிற்கு வந்தான்.

தான் மிகவும் அற்பமாகிவிட்டது போலவும், மிகவும் தாழ்ந்துபோய் நிராகரிக்கப்பட்டு விட்டது போலவும் தோன்றியது விஜய்க்கு.

தன் இறுதி முயற்சியும் தோல்வி... இதைவிட எப்படி பட்டவர்த்தனமாகச் சொல்லமுடியும். அவன் தகுதிக்கு 'ஐ லவ் யூ' என்றெல்லாம் விடலை மாதிரி சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று பட்டுத்தான் சிறுகதையாக்கி அது பிரசுரமுமாகி, படித்தும் விட்டாள். இனி என்ன? எல்லாம் அவுட்.

அன்று அவன் அரைநாள் லீவு. அடுத்த நாள் வந்தபொழுது டீ நேரத்தில் ஒரு சாதாரண ஆபீஸ் விஷயத்தைக் கேட்க வந்த கவிதாவிடம் பேசாமலேயே இருந்தான். படட்டும்... அவளுக்கும் அவமானம், உதாசீனப் படுத்தப்படுதல் என்றால் என்ன என்று புரியட்டும்... மண்டைக்கனம் பிடித்தவள்...

இதையும் படியுங்கள்:
இறைவனை நம்புங்கள்!
ஓவியம்; கரோ

டுத்த வாரம்... சூரியன் பத்திரிகை வரும் அதேநாள் மீண்டும் போன். "ஹலோ... விஜய் ஹியர்..."

"விஜய்... உன் கதைக்கு ஏகப்பட்ட பாராட்டுகள்..."

"என்ன? சொல்லு ராஜேஷ்..."

"மொத்தம் மூணு லெட்டர்ஸ்... வாசகர் கடிதத்துல வந்திருக்குடா... அதுல ஒரு லெட்டர் தங்கம்ன்னு யாரோ எழுதியிருக்காங்க..."

விஜய் படபடப்புடன் திரும்பிப் பார்த்தான். கவிதா சீட்டில் இல்லை. இன்று லீவாம்.

"புக் உங்கிட்ட இருக்காடா?... சீட்லயே இரு... நான் இப்ப வர்றேன்...."

விஜய் ஓடினான். புத்தகத்தை வாங்கினான், பக்கங்கள் கதறின.

ஒன்று, இரண்டு... ஆ...இதோ....

'''எனக்கொரு பதில் சொல்லாயோ,' கதை மிகச் சிறப்பாக இருந்தது. அந்தப் பெண் சம்மதம் சொல்லமாட்டாளா? 'சொல்ல வேண்டும்' என நினைக்க வைத்துவிட்டார் ஆசிரியர். அத்தகையவரைக் காதலிக்க அவளுக்குக் கொடுத்தல்லவா வைத்திருக்க வேண்டும்.

-தங்கம், சென்னை - 4.

பின்குறிப்பு:-

கல்கி 28 ஜனவரி  1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com