சிறுகதை - நேசம் மறப்பதில்லை நெஞ்சம்...

ஒவியம்; ஜெ...
ஒவியம்; ஜெ...

-ரிஷபன்

பால் காய்ச்சியாகிவிட்டது. எல்லாம் வந்து இறங்கிவிட்டன. மாடி போர்ஷன். பின்னால் வேப்பமரக் காற்று. ஆள் உயர ஜன்னல்கள். கதவைத் திறந்தால் பிய்த்துக்கொண்டு போனது. பூமா உபரியாய் ஒரு தடவை கணேசனை இறுக்கிக்கொண்டாள். (ஒன்ஸ் மோர்!") தனிக்குடித்தனம். அருமையான வீடு. சொன்னவுடன் ஏற்பாடு செய்துவிட்டான். அருமைக் கணவன்.

''கீழே நம்மை மாதிரியே ஒரு ஜோடி கூட ஒரு அம்மா... ஃப்ரெண்டு புடிச்சுக்க. ஃபோன் இருக்கு. ஓனர் வேற, பின்னால உதவும்..." என்றாள், ஆபீஸ் கிளம்பிப் போகுமுன்.

வீட்டைப் பார்க்க வரும்போது பக்கவாட்டு வழியில், மாடிப்படி ஏறிப் போய்ப் பார்த்தார்கள். இதே போர்ஷனுக்கு வீட்டுக்குள் இருந்தும் மேலே வர படிகள் இருந்தன. இரு வழியாகவும் இறங்க வசதியாக ஒரு கதவு.

காலிங்பெல்லை அழுத்துவதா? 'அம்மா' என்று கூப்பிடுவதா என்று யோசிப்பதற்குள் அந்த வயதான பெண்மணி வெளியே வந்தாள்.

இருவரின் முகத்திலுமே அதிர்ச்சி.

"நீ...ங்களா?"

"நீயா?"

மேலே என்ன பேசுவதென்று புரியவில்லை.

"எ...ன்ன வேணும்?" என்றாள் பாகீரதி.

"மாடி போர்ஷன்ல குடிவந்திருக்கேன். நீங்க..?" என்றாள் பூமா.

"என் பையன் வீடுதான்."

 "ஓ, சித்ரா உங்க மருமகதானா?  வீடு பார்க்க வந்தபோது அவங்கதான் இடத்தைக் காட்டினது."

"வாடகைக்கு விடணும்னுதான் மேலே கட்டினது. அவ ஏற்பாடுதான். அவ ஆபீஸ்ல லோன் வாங்கி..." இதை ஏன் இவளிடம் சொல்ல வேண்டும் என்று பாதியிலேயே நிறுத்தி விட்டாள். "வரேன்."

பூமா மேலே வந்த பிறகும் திகைப்பு அடங்கவில்லை. என்ன விசித்திரம், இந்த வீட்டுக்கா குடி வந்திருக்கிறாள். ஒரு வருஷம் இருக்குமா. இதே பாகீரதி தன் மகன் சுரேஷடன் இவளைப் பெண் பார்க்க வந்ததும், நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்த பிறகு, காரணமே சொல்லாமல், நிராகரித்ததும்..

அப்பா ஆடிப்போய் விட்டார்.

மறுநாள் காலை நிச்சயதார்த்தம். எல்லாம் தயார். உறவினர் கூட்டம் வேறு. ஃபோனில் தகவல். 'கேன்சல் பண்ணிருங்க. நாங்க வரலே.'

ஏனென்று கேட்டால் பதிலே இல்லை. அண்ணன் சற்று முன்கோபி.

''எல்லாம் ஏற்பாடு செஞ்சப்புறம். வேணாம்னா என்ன அர்த்தம்?'

'இங்கே பாருங்க. நாளைக்கு நாங்க வரலேன்னு நீங்க ஃபீல் பண்ணக்கூடாது. முன்னாலேயே தகவல் சொல்லிட்டோம். விட்டுருங்க!'

நேராகப் போய்க் கேட்கலாமா என்றுகூட யோசித்தார்கள். கடைசியில் அவர்களை மனதார சபித்ததோடு சரி. அன்று சட்டென ஒரு வேடிக்கைப் பொருளாக்கியவர்கள் வீட்டிற்கா குடி வந்திருப்பது!

இதையும் படியுங்கள்:
தூங்கும்போது ஏற்படும் குறட்டையும் நிவாரணமும்!
ஒவியம்; ஜெ...

“ஏன் டல்லா இருக்கே?"

கணேசனின் கேள்விக்கு மழுப்பினாள்.

"வீடு பிடிச்சிருக்கில்லே..."

"ம்..."

"அப்பா ஞாபகமா?"

"ம்…"

''இந்த ஸண்டே போய்ப் பார்த்துவிட்டு வரலாமா?"

எப்படியாவது அவள் முகத்தில் மலர்ச்சியைக் கொண்டு வரத் துடிப்பது புரிய, சிரித்தாள்.

"வேணாம். இப்பதானே வந்துட்டு போனாரு.."

றுநாள் இன்னொரு அதிர்ச்சியும் அதை அதிர்ச்சி என்பதைவிட, மகிழ்ச்சி என்றே சொல்ல வேண்டும்.

மாடி போர்ஷனுக்கே கேட்கிற அளவு இரைச்சல். சித்ராவின் குரல்தான்.

இந்த வீட்டுல ஒண்ணு உங்கம்மா இருக்கணும்... இல்லே நான் இருக்கணும். முடிவு பண்ணுங்க...

வேறு குரல்கள் கேட்கவில்லை.

காய்கறி வண்டியைக் கூப்பிடுகிற சாக்கில் பூமா கீழே வந்தாள்.

பாகீரதியின் இருண்ட, கண்ணீர் ததும்பிய முகம் பார்த்து உள் மனசு குதூகலித்தது. 'வேணும். நல்லா வேணும்!'

காய்கறி வண்டியைச் சுற்றி எதிர், பக்கத்து வீட்டுப் பெண்கள்.

"புதுசா குடி வந்தீங்களா?"

பூமா தலையசைத்தாள்.

வம்பு!

"இந்த வீட்டுக்கா?"

"ஏன்... போர்ஷன் நல்லாத்தானே இருக்கு." - பூமாவின் குரலில் பொய்யான ஆச்சர்யம்.

"வீட்டுக்காரிதான் ராட்சசி! மாமியாரை இவ படுத்தறதைப் பார்த்தா... ரத்தக் கண்ணீர்தான். தலைகீழ் நிலைமை இங்கே..."

"அவங்க புருஷன் எதுவும் சொல்ல மாட்டாரா?" பூமா இயல்பாய் வம்பு வளர்த்தாள்.

அரைக்கிலோ போடுப்பா. அவன் ஏன் வாயைத் திறக்கறான்! மனைவி சொல்லே மந்திரம்!"

பெண்கள் சிரித்தார்கள். பூமா படியேறியபோது பாகீரதி வாசல் வராந்தாவில் ஒடுங்கியிருந்தாள்.

மறுபடியும் பூமாவிடம் இறுக்கம்.

'வேணும்... நல்லா வேணும்.'

தன்பின் நிறைய கூச்சல்கள். நிறைய அழுகை. எப்படியும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை.

பூமா மனசு இறுக்கம் தளர ஆரம்பித்தது.

அப்பா, அம்மா வளர்ப்பு இப்படியில்லை. நேசம் மட்டுமே சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவள். சுலபமாய் மறந்து விடுகிற மனசு அப்பா, அம்மாவுக்கு.

பூமாவின் உள்ளும் இரக்கம் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.

"எ...ன்ன?"

சுருண்டு படுத்திருந்தவளின் கண்கள் இடுங்கியிருந்தன. பூமாவைப் பார்த்ததும் மிரண்டு போயிருந்தாள்.

"என்ன மாமி... உடம்பு சரியில்லையா?"

பாகீரதியிடமிருந்து பதில் இல்லை. தொட்டதில் உடம்பு சுட்டது.

"டாக்டர்கிட்டே போகலியா?"

பதறிக் கேட்டதில் இன்னும் மிரண்டாள்.

"வாங்கோ... போயிட்டு வந்திரலாம்..."

"இ...ல்லே... வே...ணாம்."

வற்புறுத்தி இழுத்துப் போனாள். ஊசி போட்டு, மருந்து வாங்கியதில் சற்று நிம்மதி வந்தது. ரிக்ஷாவில் வீடு திரும்பினார்கள்.

''நீங்க படுத்துக்கங்க. என்ன சமைக்கணும். சொல்லுங்க."

"நீ... எதுக்கு?"

"ஸ்ஸ். பேசாம படுங்க."

பரபரவென்று சுழன்றாள். மிளகு ரசத்தில் சாதம் கரைத்துக் கொடுத்து, வெந்நீர் குடிக்கக் கொடுத்ததும் பாகீரதிக்கு அழுகை பீறிட்டது. தன்னிரக்க நிலை.

"வேணாம். நீங்க அலட்டிக்காதீங்க. படுங்க."

சின்னச் சின்னதாய் வெளியே தெரியாத உதவிகள். பாகீரதிக்கு உறுத்தல் குறைந்து பழக்கம் இயல்பானது. சித்ரா எப்போது வேலைக்குப் போவாள், பூமா கீழிறங்கி வருவாள் என்று ஏங்கும் அளவு நெருக்கமானது.

பூமாவால் மனத்தோடு வைத்துக்கொள்ள முடியவில்லை. கணவனிடம் சொல்லி விட்டாள்.

"பாவமா இருக்குங்க. அப்படிப் படுத்தறா! இவ பொம்பளையான்னே சந்தேகமா இருக்கு."

''சரி. சரி. நீ ஏதாவது வம்புல மாட்டிக்கப் போறே.''

"சேச்சே. அவ இல்லாதப்பதான் எங்க ராஜ்யம்."

"நினைச்சுக்கிட்டு இரு. வம்பு எந்த உருவத்துல வேணா வரும். யார் கண்டது...? இப்பவே அவளுக்குத் தெரிஞ்சிருக்குமோ... என்னவோ! காலி பண்ணச் சொல்லிடப் போறா... "

"இதுல என்னங்க தப்பு இருக்கு. எனக்கும் போரடிக்குது. சும்மாத்தானே இருக்கேன். கூடமாட ஒத்தாசை செய்யறதுல பொழுது போவுது.''

"ஓக்கே... இட்ஸ் யுவர் ஹெட்ஏக்..."

இதையும் படியுங்கள்:
திறமைசாலிகள் உடன் இணைந்து செயல்படுங்கள்!
ஒவியம்; ஜெ...

ரிலிருந்து அப்பா, அம்மா இருவருமே வந்திருந்தார்கள். குடித்தனம் நடத்துகிற அழகைப் பார்க்க வேண்டுமாம். அவர்களுடன் பேச்சு கொடுத்தபடி இருந்தவளுக்குப் பத்து மணிக்கு பதற்றம் வந்துவிட்டது. கீழே போய்ப் பார்க்க வேண்டும். மாமி என்ன செய்கிறாரோ!

"என்னடி... எங்கே போறே?".

"கீழ் வீட்டுக்குத்தான்."

தகவல் சொன்னாள் - எல்லாவற்றையும்.

அப்பா சட்டென்று சீறினார்

“நீ ஏன் அவங்களுக்கு ஹெல்ப் பண்றே?"

"பாவம்ப்பா!"

"நல்லா அனுபவிக்கட்டும்."

அம்மா நிதானமாய் இருந்தாள்.

"தொலையறது விடுங்க. நமக்கு என்ன... அதைவிட நல்ல வரன் அமைஞ்சாச்சு."

பாகீரதிக்குக் கேட்டிருக்க வேண்டும்.

"நீ எதுக்கு சிரமப்படறே. உங்கப்பா, அம்மா வந்திருக்காங்களே..." என்றாள் சங்கடமாய்.

பூமா சிரித்தாள். "உறவை விட சிநேகம் ரொம்ப தித்திப்பா இருக்கே மாமி..." என்றாள் - பதிலில் மனசு உண்மையாகவே இழைய.

பின்குறிப்பு:-

கல்கி 30  ஜூலை 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com