சிறுகதை - ஆட்கள் தேவை!

ஓவியம்; ஸ்யாம்
ஓவியம்; ஸ்யாம்

-கா.சு.வேலாயுதன்

"சார்...!"

"யாரது?"

"வேலைக்கு ஆள் தேவைன்னு வெளியில விளம்பரம் பார்த்தேன், அதுதான்...!"

"அடடடே... வேலைக்கா.... வாங்க வாங்க. உட்காருங்க...!"

"பரவால்ல சார்... இப்படியே நிக்கறேனா...!"

"சும்மா உக்காருங்க சார்... ஆமா நீங்க ஸிங்கரா...? கட்டிங் மாஸ்டரா...? இல்லே, ஓவர்லாக் எம்ப்ராய்டிங், பண்ட்லிங்...!"

"அதெல்லாம் எதுவுமேயில்லை சார். ப்ளஸ் டூ படிச்சிட்டுக் கோயமுத்தூர்ல ஓர்க் ஷாப் வேலை பாத்துட்டிருந்தேன். இப்பெல்லாம் இஞ்சினீயரிங் தொழில் நலிஞ்சு, வர்ற வரும்படி கட்டுபடியாகலை. திருப்பூர் போனா பொழையாத புள்ளையும் பொழைக்கும்ன்னாங்க. அதுதான் குடும்பத்தோட...!"

"அட, அப்பிடியா...? ம்.... ஒர்க்ஷாப்புல வேலை செஞ்சவங்களுக்கு ஏத்த மாதிரி இங்கே எந்த வேலையும் இல்லியே....!"

"சார் அப்பிடி சொல்லக்கூடாது... எந்த வேலை கொடுத்தாலும் நா செய்வேன் சார்.

கண்ணுல பார்த்தா கையில செய்யற திறமை எங்கிட்ட இருக்கு சார்!"

"கண்ணு பார்த்தா கை செய்யுமா... அதெப்படிப்பா...? ஆமா, உன்னோட வயசு என்னாச்சு?"

"முப்பத்தியிரண்டு!"

"முப்பத்தி ரெண்டா... அடேயப்பா... அரசாங்க உத்தியோகத்துல கூட சேத்திக்க மாட்டாங்க. ஏம்ப்பா இந்த வயசுல பழக வேண்டிய வேலையா இது...? படிக்க வேண்டிய காலத்துல பழக வேண்டிய தொழில் தெரியுமா இது? பேசாம நீ ஒர்க்ஷாப் வேலைக்கே போயிடு!''

"சார் சார்... நீங்க சடால்னு அப்பிடி சொல்லக்கூடாது. பெரிய மனசு பண்ணி, எனக்கொரு வேலையக் கொடுங்க. ஜமாய்த்துக் காட்டறேன்!"

"என்னப்பா உன்னோட காலங்கார்த்தால ஒரே தொல்லையாப் போச்சு. இங்கெல்லாம் ஒரு குழந்தைப் புள்ளை ஒரு நாளக்கி ஆயிரக்கணக்குல பீஸ் மடிச்சடுக்குது. பொம்பளைப் புள்ளைக மலை மலையா ஓவர்லாக் அடிச்சு, கை நிறைய காசு சம்பாதிக்கறாங்க. பத்து வயசுல வேலக்கி வந்தவங்கெல்லாம் பெரிய கட்டிங் மாஸ்டராகி, தினம் இருநூறு முந்நூறுன்னு பாக்கெட்டை ரொப்பீட்டுப் போறாங்க தெரியுமா..? இங்கே ஒரு பொடியன் செய்யற வேலையையும், அவனுக சம்பாதிக்கிற சம்பாதனையையும் பார்த்தேன்னா நீயே மிரண்டடிச்சிட்டு ஓடிப் போவே!"

"அப்படியெல்லாம் போக மாட்டேன், நம்புங்க சார்..."

''ம்... சரி சரி உனக்கேத்த மாதிரி சூப்பர் வைசர் வேலை போட்டுத் தர்றேன், செய்வியா?"

"சூபர்வைசரா? ஓ... ரொம்ப தாங்க்ஸ் சார்.."

"சூபர்வைசர்ன்னா உடனே உங்க ஓர்க் ஷாப் மாதிரி வெள்ளைக் காலர்ல 'இன்' பண்ணிட்டுன்னு கனவு காண ஆரம்பிச்சுடாதே... உன்னோட கரி இழுக்கற ஒர்க் ஷாப் வேலையைவிட ஒருபடி கூட!"

"எப்படி சார்?"

"இங்கே சூப்பர்வைசான்னா காலம்பற ஆறேழு மணிக்கே கம்பெனிக்கி வந்திடணும். இராத்திரி ஒம்பது பத்து மணிகூட ஆகும், வீட்டுக்குப் போக போஸ்ட் ஆபீஸ் போயிட்டு வர்றதுலயிருந்து ஆளுக வேலை செய்யறதைக் கவனிச்சுட்டே, அவங்க கூடமாட வேலைக்கி ஒத்தாசை செய்யணும். அவசர ஆத்திரத்துக்கு நீயே 'பண்ட்லிங்' போடணும்... பீஸ் மடிச்சடுக்கணும்... தெரியாததைத் தெரிஞ்ச பசங்ககிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கணும்...!"

“சரி சார்...! "

"எல்லாத்துக்கும் மேலா லேபரர்கிட்டே சுயமரியாதைய எதிர்பார்க்கக் கூடாது. அவங்கதான் இங்கே ராஜா மாதிரி. ஏதாவது அவங்க உன்னைக் கிண்டலடிச்சாக்கூட காது கேக்காத மாதிரி கண்டுக்காம இருந்துக்கணும். எக்குத்தப்பா ஏதும் பேசிடக்கூடாது... பொடியனுக உட்பட..! தட்டிக் கொடுத்து வேலை வாங்கத் தெரியணும். தப்பித் தவறி ஏதாவது பிரச்னைன்னா தப்பு அவங்களோடதா இருந்தாக்கூட உனக்குத்தான் சீட்டுக் கிழிக்க வேண்டி வரும். ஏன்னா இங்கே உம்மாதிரி படிச்சவங்க ஆயிரம் பேர் கிடைப்பாங்க... ஆனா இந்த வேலையப் படிச்சவங்களை விட்டாப் பிடிக்கறது குதிரைக் கொம்பு!''

"ஆகட்டும் சார்... அப்புறம் சம்பளம்...!"

''ஓ... சம்பளத்தைச் சொல்ல மறந்துட்டனா... முதல்லியே சொல்லியிருக்க வேண்டியது. இங்கே எல்லோருக்கும் வாரக் கூலி. உனக்கு மட்டும் மாதச் சம்பளம் நானூறு ரூபாய்... கொஞ்சம் மனசுக்குத் திருப்திகரமா வேல செஞ்சேன்னா அம்பதோ அறுபதோ கூட்டித் தருவோம்!"

"என்ன சார் சொல்றீங்க...?"

"ஏம்ப்பா... சம்பளத்தைக் கேட்டவுடனே இப்படிப் பதர்றே...? இங்கே இதுதான் ஆபீஸ் உத்தியோகம். படிச்சவங்களுக்கு இவ்வளவுதான் சம்பளம். எந்தக் கம்பனியில வேண்ணா கேட்டுப் பாரு!"

"இல்லே... இங்கே பொடியனுக கூட - வாரம் இருநூறு முந்நூறு சம்பாதிக்கறாங்கன்னு ...!"

"முந்நூறு என்ன... அவனுக சாமர்த்தியம்போல ஆயிரம்கூட சம்பாதிக்கறாங்க... அதுக்காக ஒனக்கு ரெண்டாயிரம் ரொக்கமா எண்ணிக் கொடுத்திட முடியுமா? அவன் செய்யற வேலையில துளியூண்டு நீ செய்வியா? அவனுககூட நீ போட்டி போட முடியமா... வேணுமின்னா உனக்கும் அப்பிடி ஆசையிருந்தா சம்பளமில்லாம வந்து வேலையப் பழகு. பழகி முடிச்சவுடனே 'பீஸ் ரேட்'ல வேல செய்யி... ஆனா பொடியனுகளெல்லாம் 'கேணச்' சிரிப்பு சிரிக்கறானுகன்னு நீ என்னை சடைஞ்சுக்கக் கூடாது...!"

"……. …..!"

"என்னப்பா ரொம்ப அமைதியாயிட்டே... ஒர்க்ஷாப்பே தேவலைன்னு படுதா...? அட என்னப்பா நா பாட்டுக்குப் பேசீட்டே இருக்கேன்... நீ பாட்டுக்குப் போயிட்டே இருக்கே..?"

பின்குறிப்பு:-

கல்கி 28  ஆகஸ்ட் 1994இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com