சிறுகதை – தண்டனை!

ஓவியம்; வேதா
ஓவியம்; வேதா

-கிருஷ்ணா

தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்தது. ராஜாவின் உடலில் வியர்வை ஓடிக்கொண்டிருந்தது. ஹீரோ அடியாட்களைப் போட்டு புரட்டிக்கொண்டிருந்தார் திரையில்.

இவனுக்கும் தியேட்டர் அதிபரையும், மானேஜரையும் அதேபோல் அடித்து, நொறுக்க வேண்டும் போல் ஆத்திரம் வந்தது. ஏ.சி. தியேட்டராம், ச்சே!

இருக்காதா பின்னே? டிக்கெட் விலையோ பத்தே கால் ரூபாய். ஏ.சிக்கும் சேர்த்தே கட்டணம். கொள்ளை விலைதான். ஆனால் இந்த தியேட்டர்காரர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு செய்து தர வேண்டிய வசதிகளை மக்களுக்கு மறுக்கிறார்களே!

அனைவரின் மூச்சுக் காற்றும் அடைபட்ட அரங்கினுள்ளேயே சுழன்று, சுழன்று... ப்ச, வியாதியல்லவா வரும். எழுந்து போய்த் தியேட்டர் மானேஜர் அறையை அடைந்து ஏன் ஏசி போடப் படவில்லை என்று கேட்டான்.

மானேஜர் இவனை ஏற இறங்கப் பார்த்தார். அப்போது, அடியாட்கள் போலிருந்த இரண்டு பேர் உள்ளே நுழைந்து, ''என்ன சார் விஷயம்?" என்று மானேஜரைக் கேட்டார்கள்.

"சாருக்கு ஏ.ஸி. போடணுமாம்!" என்று அவர், இவன் பக்கம் கைகாட்டினார்.

அந்த இருவரின் பார்வையும் இவன் மேல் படர்ந்தது. "அத்தனை பேர் சும்மா படம் பார்க்கிறபோது, உங்களுக்கு மட்டும் என்ன சார்? பேசாம போய்ப் படத்தைப் பாருங்க. இல்லைன்னா... எங்களுக்கு ஒண்ணுமில்லை... சாருக்குத்தான் கஷ்டம்...!' என்று இவனருகில் வந்தார்கள்.

இனியும் அங்கு நின்று பேசுவது விபரீதமாகும் என்பதை உணர்ந்து, மீண்டும் வந்து படம் பார்க்கத் துவங்கினான். ஆயினும், எப்படியாவது அந்த தியேட்டர்காரர்களைத் தண்டித்தே ஆகவேண்டும் என்ற வெறி அவனுக்குள் எழுந்தது.

என்ன செய்யலாம்?

யோசிக்கும்போதே படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் அணைத்துக் கொள்ள 'சுபம்' போட்டு விட்டார்கள்.

கர்சீப்பால் வழியும் வியர்வையைத் துடைத்தபடி ஆத்திரம் அடங்காமல் வெளியே வந்தான்.

ஒரு முடிவுடன் வேகமாய் நடந்தான் ராஜா.

றுநாள் -

ராஜா பப்ளிக் டெலிபோன் பூத்தை நெருங்கினான்.

சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான். யாரும் கவனிக்கவில்லை.

பொருளாதார நஷ்டம் தியேட்டர்காரனுக்கு ஏற்படுத்த ஒரே வழி, மாலைக் காட்சியை நடத்த முடியாமல் செய்துவிட வேண்டும்.

எண்களைச் சுழற்றினான்.

"ஹலோ அம்பிகா தியேட்டர்?"

மனதைத் திடப்படுத்திக் கொண்டான். இது ஒன்றும் தவறில்லை. அவர்களுக்கு இப்படித்தான் தண்டனை கொடுக்க முடியும், தன்னைப் போன்ற சாதாரண மனிதனால்.

"எஸ், அம்பிகா தியேட்டர்...''

கர்சீப்பால் போன் வாயை மூடினான் அவசரமாய்.

"உங்க தியேட்டரில் குண்டு வைச்சிருக்கு. சரியாய் மாலைக்காட்சி நடக்கும்போது வெடிக்கும்."

சட்டென ஃபோனை வைத்துவிட்டு, மனதில் படர்ந்த திருப்தியுடன் வெளியே நடக்கலானான்.

பின்குறிப்பு:-

கல்கி 22  நவம்பர்  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com