
சிறுகதை; குமரன்
ஒரு பத்திரிகையாளனுக்கு நிறைய நண்பர்கள் இருக்கவேண்டும். முக்கியமாக பல்வேறு உளவுத்துறைகளில். அப்போதுதான், "நடந்தது இதுதான்; என் பேரைப் போட்டுடாதே" என்ற முன்னுரை, பின்னுரையுடன் நிறைய தகவல்கள் கிடைக்கும்!
எனவே, ரக்ஷானந்தா ஜலீலின் நட்பை நான் வளர்த்துக்கொண்டேன். பெயர் கற்பனை என்று கூறத்தேவையில்லை. அவனுடன் பேசுவதற்காக கொஞ்சம் ஹிந்தி பழகிக்கொண்டேன். அவன் ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்தடிப்பான். கதை தமிழில் மட்டுமே தொடரும், ஒரு வார்த்தைகள் தவிர. த.கு.ம. மன்னிப்பாராக!
'ஏம்பா, ரெய்டு போயிட்டு வெறுங்கையோடு திரும்பினதே கிடையாதா?" என்று ஒருநாள் தூண்டில் போட்டேன். ரஞ்சித் ஹோட்டலின் கூரைத் தோட்டத்தில் பஞ்சாபி நானை கிழித்து மென்று முழுங்கிக் கொண்டிருந்தான். தாடை வலிக்காதோ? தோசைக்கு ஈடாகுமோ!
"சில சமயம் ஏமாற்றத்தோடு திரும்பினதுண்டு. ஏதாவது துப்பு கிடைத்தால்தான் ரெய்டு பண்ணுவோம். ஆனா ரெய்டு வரப் போறாங்கன்னு அந்தாளுக்கும் துப்பு கிடைச்சுடும்! அவசர அவசரமா வேற இடத்துக்கு சூட்கேஸ்களைக் கொண்டு போய் பதுக்கிடுவான்; உளவு பார்க்கிறதுக்கு நாங்க இருக்கோம்னா, எங்களை உளவு பார்க்க தொழிலதிபருங்களும் அரசியல்வாதிங்களும் ஆட்களை வைச்சிருக்காங்க!''
''சில சமயம் நீங்களே கட்டுக்கட்டா நோட்டுங்களைக் கொண்டு போய் வைச்சுட்டு அரெஸ்ட் பண்ணுவீங்களாமே?"
"எமெர்ஜென்ஸி டயத்துல நடந்திருக்கு. அதிகாரத்துல இருக்கிறவங்க, தங்களுக்குப் பிடிக்காதவங்களை சுலபமா' உள்ளே தள்ள இந்த வழியைக் கையாண்டு பழிசுமத்தினதுண்டு. இன்னிக்கு சாத்தியமில்லே. ஒரு கெட்டிக்கார வக்கீல் ரெண்டு நிமிஷத்திலே எங்க கேஸை தவிடுபொடியாக்கிடுவான்."
"எங்களைப் பொறுத்தமட்டில் மனுஷன் நாயைக் கடிச்சாத்தான் நியூஸ்" என்றேன்.
"அப்படியும் நடந்திருக்கு. நான் இன்கம்டாக்ஸ்ல இருந்தப்ப ஒரு சமயம் ஒரு டாக்டர் வீட்டில் ரெய்ட் நடத்தினோம். ஆறு பெட் ரூம்; டபுள் ஃபிளாட். ஒரு இழவும் அகப்படலை. அதிகபட்சம் ஐயாயிரமோ என்னமோதான் இருந்தது. நகைகளும் தோடு, மூக்குத்தி, வளையல், சங்கிலின்னு அளவாகத்தான் இருந்தது. யாரையும் உள்ளே வரவோ, வெளியே போகவோ அனுமதிக்காமல் குடையோ குடையோன்னு குடைஞ்சுக்கிட்டிருந்தோம். ஒரே வாசல்தான். அங்கே காவல் போட்டிருந்தோம்.
"அலுத்துப் போய் 'கிளம்பலாம்'னு முடிவு செய்த நேரத்தில், பாட்டி, அதாவது டாக்டருடைய மாமியார், "ஐயய்யோ! என் தோடு! என் தோடு!"ன்னு அலறினாங்க. எங்களுக்கு ஒண்ணும் புரியலே.
"கெட்டிக்காரக் கிழவி ஒரே தாவாகத் காவி வாசல் கதவை அடைச்சு நின்னுக்கிட்டா.
" 'நான் செத்தாலும் சரி; தோடு கிடைக்கிற வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்'னுட்டா. ஒரு கிழவியை பலவந்தமா நகர்த்திவிட்டு வெளியேற முடியுமா? ரெய்டு நடத்த வந்த எங்க மீதே அவ குற்றம் சுமத்தறான்னு புரிஞ்சுது. நல்லா மடக்கிட்டா.''
அப்புறம்?"
"அப்புறமென்ன; பத்துப் பதினைந்து நிமிஷம் பதட்ட நிலை. பிறகு அந்தப் பொல்லாத தோடு, ஜதையாகக் கட்டிலுக்கடியில் கிடந்து கிடைச்சுது!''
"அதெப்படி?"
புரியலையா? எங்களில் ஒருத்தன்தான், குடைந்து குடைந்து தேடும்போது, ஆசைப்பட்டு அதை லவுட்டியிருக்கணும். 'பாட்டிகிட்ட மாட்டிக்கிட்டோம்; இனி தப்ப முடியாது'ன்ற நிலைல லாகவமா கீழே போட்டு, யாரும் பார்க்காத சமயம் காலால கட்டிலுக்கடியில் உதைச்சுத் தள்ளியிருக்கணும். உளவுத் துறையிலே எல்லாருமே புத்தர்னு சொல்ல முடியாது."
"அடப்பாவிங்களா!" என்றேன்.
''ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம்" என்றான் ரக்ஷானந்தா.
"என்ன?"
''அந்தப் பாட்டி வேணும்னே தோட்டைக் கழற்றி காலுக்கடியில் தள்ளிட்டு எங்களைப் பழிவாங்கிட்டான்னு! அந்தப் பதினைந்து நிமிஷம் நாங்க பட்ட மன அவஸ்தையை எந்த ரெய்டின்போதும் எந்த நிஜ குற்றவாளியும் அனுபவிச்சிருக்க மாட்டான்! யாரோ பொறாமை பிடிச்சவன் தந்த பொய்யான தகவலின் பேரில் தப்பான ரெய்டு நடத்தினதுக்கு பாட்டி எங்களை சரியானபடி தண்டிச்சுட்டா!''
ரக்ஷானந்தா என் செலவில் முழுங்கிய ஐம்பது ரூபாய் டிபனுக்கு நல்ல குட்டிக்கதை கிடைச்சதா நான் நினைக்கிறேன். நீங்க?
பின்குறிப்பு:-
கல்கி 01.09.1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்