சிறுகதை - தன்மானக் கவிஞன் ராஜாமணி!

short stories...
ஓவியம் - மதி
Published on

-சத்யா

ராஜாமணியின் கெட்ட நேரமோ அல்லது புதுக் கவிதையின் கெட்ட நேரமோ தெரியவில்லை, ராஜாமணிக்குப் புதுக்கவிதை எழுதும் ஆசை வந்துவிட்டது. மரபுக் கவிதை எழுத முயற்சித்துப் பார்த்து, முடியாததால் இனி புதுக் கவிதையைத்தான் எழுதுவது என்ற திட்டவட்டமான முடிவுக்கு அவன் வந்திருந்தான்.

இலக்கண உபத்திரவம் இல்லை. மனத்தில் தோன்றுவதை எழுதித் துண்டு துண்டாக வெட்டினால் போதும், அதுதான் புதுக்கவிதை என்று எண்ணிய ராஜாமணிக்குப் புதுக்கவிதையின் மீது அலாதிப் பற்று உண்டாயிற்று.

புதுக்கவிதையின் மேல் ராஜா மணிக்கு வெறியே ஏற்படுவதற்குச் சரித்திரப் பின்னணி ஒன்று இல்லாமலும் போகவில்லை. பாலக்காட்டிலிருந்து விடுமுறைக்காக வந்திருந்த பெரியப்பாவினால் வந்த வினைதான் அவ்வளவும்.

"எஸ்.எஸ்.எல்.ஸி. படித்துவிட்டு எந்த வேலையும் தேடிக் கொள்ளத் தெரியாத கழுதை" என்று பெரியப்பா தன்னை வர்ணித்ததைக்கூட ராஜாமணி சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. 'அவ்வளவு தூரத்திலிருந்து வந்ததற்கு இதைக்கூடச் சொல்லாவிட்டால் எப்படி? தம்பி மகன் மீது தனக்கிருக்கும் அக்கறையைக் காட்டிக்கொள்ள அவருக்குத் தெரிந்த வழி இதுதான். சொல்லி விட்டுப் போகட்டும்' என்றுதான் விட்டுவிட்டான்.

ஆனால், 'உருப்படியா ஒரு கடிதாசு எழுதக்கூடத் துப்பில்லை' என்று அவர் கூறியதுதான் ராஜாமணியின் இலக்கிய வெறி கிளம்புவதற்குக் காரணமாகிவிட்டது.

தம்மால் தமிழ் மொழிக்கு இவ்வளவு பெரிய சோதனை வரும் என்று தெரிந்திருந்தால், பெரியப்பா ராஜாமணியின் கோபத்தை அப்படிக் கிளறியிருக்க மாட்டார். 'தமிழில் ஒழுங்காக நாலு வரிகூட எழுதத் தெரியாதா? தப்புத் தப்பாகக் கடிதம் எழுதுகிறாயே நீயெல்லாம் எந்த ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்து என்ன குப்பை கொட்டப் போகிறாயோ?' என்று ராஜாமணியின் மீது எரிந்து விழுந்தார்.

பெரியப்பா நல்ல திடகாத்திரமான ஆள். அவர் மீது கோபத்தைத் திருப்பிக்காட்டுவது புத்திசாலித்தனமல்ல என்பதை உணர்ந்திருந்ததனால்தான் ராஜாமணியின் கோபம் தமிழின் மீது திரும்பியது.

'எனக்கா தமிழ் எழுதத் தெரியாது?' என்று பொங்கியெழுந்தான் ராஜாமணி. 'எழுது, ராஜாமணி. எழுது. நீ எழுதப் பிறந்தவன்' என்று அவனுள் இருந்து ஏதோ ஒரு சக்தி அவனை உந்தித் தள்ளியது.

'தான் ஒரு கவிஞன் என்று உணர்ந்த மாத்திரத்திலேயே, 'இவ்வளவு முட்டாள்களுக்கு நடுவே நாம் வாழ வேண்டியிருக்கிறதே' என்ற ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டது ராஜாமணிக்கு.

'ராஜாமணி... நீ இவ்வளவு பெரிய தமிழ்க் கவிஞனா வருவேன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலைப்பா! தமிழக அரசு உன்னை ஆஸ்தானக் கவிஞரா நியமிச்சு, மாசம் இருபதாயிரம் ரூபாய் சம்பளம் தராங்களாமே?" என்று பெரியப்பா கையைக் கட்டிக்கொண்டு தன்னிடம் கூறும் காட்சி ராஜாமணியின் கற்பனையில் தோன்றியது.

கற்பனை உடனே துண்டிக்கப்பட்டது கையை பவ்யமாகக் கட்டிக்கொண்டிருந்த பெரியப்பா, திடீரென்று கண்களை உருட்டி குரலை உயர்த்தினார்.

''தடிக் கழுதை. ஏன் இப்படி பிரமை பிடிச்ச மாதிரி நிக்கறே? நாலு கம்பெனியிலே ஏறி இறங்கி வேலை கேளு. நான் ஊருக்குப் போறதுக்குள்ளே ஒரு வேலை தேடிக்கலைன்னா நான் பொல்லாதவனாயிடுவேன்; ஆமா!"

'பொல்லாதவன் ஆகிவிடுவேன்' என்று சொன்னதோடு நிறுத்தியிருக்கலாம். ராஜாமணியின் பின் மண்டையில் 'பட்'டென்று ஒரு தட்டுத் தட்டி, 'தேவைப்பட்டால் அடிக்கவும் தயங்க மாட்டேன்' என்று சூசகமாக உணர்த்தவும் செய்தார்.

ராஜாமணிக்குக் கோபம் தலைக்கேறியது. இனியும் அங்கே நிற்பது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உணர்ந்து விடுவிடென்று வெளியேறினான்.

 "எங்கேடா போறே? ஊர் சுற்றவா?" என்று கத்தினார் பெரியப்பா.

''நானும் சூரியனும் ஒன்றுதான்

நான் ஊரைச் சுற்றுகிறேன்.

அவன் உலகைச் சுற்றுகிறான்.

அவ்வளவுதான் வித்தியாசம்

பாவிகள் சாவி கொடுத்து ஆவிகள் சாவதில்லை

நான் வருகிறேன்"

என்று பதிலளித்தான் ராஜாமணி. பெரியப்பாவுக்குப் 'பகீர்' என்றது. 'மண்டையில் பலமாக அடித்து விட்டோமோ?' என்று குழப்பத்தில் ஆழ்ந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ராஜாமணியின் சிந்தனை, சொல், செயல் எல்லாமே புதுக் கவிதை ரகத்திலேயே அமைந்தன. ராஜாமணியின் தந்தை நிஜமாகவே பயந்து போனார். 'வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. பையன் பழையபடி புத்தி ஸ்வாதீனத்தோடு நடமாடினாலே போதும்' என்று கவலைப்பட்டார்.

"ராஜாமணி, என்னடா இது, தத்துப்பித்துன்னு பேசிக்கிட்டு?"

"வானவில்லைக் காணவில்லை. கண்டுபிடித்து வளைப்பேன். கண்டபடி உடைப்பேன்!"

''சரியாப் பேசாம இதென்னடா உளறல்?"

"என்னது? என் கவிதை உமக்கு உளறலாகத் தெரிகிறதா? அப்பா, வேண்டாம்! தயவுசெய்து ஆகாயத்தில் ஆணி அடிக்காதீர்! வெங்காயத்தை வேக வைக்காதீர்! விந்திய மலையில் வெந்தயம் பயிரிடாதீர்!"

"இதான் கவிதையா? அதுக்கெல்லாம் தனி அறிவு வேணும்டா ராஜாமணி. சொன்னாக் கேளு. கொஞ்சம் கஷ்டப்பட்டா குமாஸ்தா வேலை கிடைக்காம போகாது. இந்த மாதிரி யெல்லாம் கவிதை எழுதி தமிழ் தெரிஞ்சவங்க வயிற்றெரிச்சலைக் கொட்டிக்காதே! அவங்க மனசைப் புண்படுத்தாதே! நீ தமிழுக்காக உயிரைக் கொடுக்க வேண்டாம். அதன் உயிரோட விளையாடறதை நிறுத்தினாலே போதும்" - இதமாகச் சொன்னார் ராஜாமணியின் தந்தை. ராஜாமணியாவது கேட்பதாவது?

''ஏன், நான் கவிதை எழுதினால் என்ன? காற்றுக்கும் வேர்ப்பதுண்டு. கங்கைக்கும் தாகம் உண்டு. சோற்றுக்கும் பசியெடுக்கும். நெருப்புக்கும் குளிரெடுக்கும்" என்று பதிலுக்கு நெத்தியடி அடித்தான்.

இதையும் படியுங்கள்:
காற்றினிலே வரும் கீதம் - நாடக விமர்சனம்! நெகிழ்ச்சிக்கு இடையே பல நெருடல்கள்!
short stories...

ராஜாமணியின் தாய் 'ஓ' வென்று அழ ஆரம்பித்து விட்டாள்.

''ஏங்க, ராஜாமணியை உடனே டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டுப் போங்க. எந்தப் பாவி கண்ணுபட்டுதோ, இப்படி ஆயிட்டானே?" என்று புலம்ப, ராஜாமணிதான் சமாதானப்படுத்தினான்.

"தாயே, கால்வாயில் கால் வைத்தவன் உண்டு. வாய்க்காலில் வாய் வைத்தவன் உண்டா? இந்து மகா சமுத்திரத்தில் சந்து பொந்துகள் ஏது? இதற்கு ஏன் கலங்குகிறீர்கள்?" – என்று ராஜாமணி தன் தாயாருக்கு ஆறுதல் கூறி, அவள் சோகத்தை மேலும் அதிகப்படுத்தினான்.

தான் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்ததில் பயந்துபோன பெரியப்பா, பாலக்காட்டுக்குத் திரும்பிவிட்டார். ஆனால், ராஜாமணி சகஜ நிலைக்குத் திரும்பவில்லை.

பத்திரிகைகளுக்குச் சரமாரியாக எழுதித் தள்ளினான். அவன் கவிதைகள் புரியாவிட்டாலும், பக்கங்களை நிரப்ப விஷயம் கிடைக்காத பத்திரிகைகள், அவற்றைப் பிரசுரித்தன. இலக்கிய விமர்சகர்களோ, அவனுடைய கவிதைக்குப் புதிய புதிய அர்த்தங்களைக் கண்டுபிடித்து கட்டுரைகளே எழுதித் தள்ளினார்கள்.

டாக்டர் பட்டம் வாங்க எண்ணிய தமிழ் எம்.ஏ. மாணவர்கள், எம்.ஃபில்லுக்கு அவன் கவிதைகளை ஆராய்ந்திருந்தார்கள். அவன் புகழ் மேலும் பரவியது. சந்தேகப் பேர்வழிகளுக்கு அவன் தந்த இறுமாப்பான பதில்கள் அவனைத் தன்னம்பிக்கையும் தன்மானமும் மிக்க இலக்கியவாதி என்று பெயர் பெறச் செய்தன.

மீண்டும் பாலக்காட்டு பெரியப்பா வந்தார். ஆனால்,  இம்முறை ராஜாமணியை அவர் கோபித்துக் கொள்ளவில்லை.

"எனக்கு அப்பவே தெரியும், இவன் இலக்கிய ராஜாவாகவும் கவிதை மணியாகவும் விளங்குவான்னு" என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டார்.

அதற்குக் காரணம் இல்லாமலும் போகவில்லை. ராஜாமணி பத்திரிகை பேட்டி ஒன்றில் தனது கவி ஆர்வத்தைத் (தலையில்) தட்டிக் கொடுத்துத் தூண்டிவிட்டவர் தன் பெரியப்பாதான் என்று கூறியிருந்தானே!

பின்குறிப்பு:-

கல்கி 05  ஜூன் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com