
-தாமரை
சுனந்தாதான். பக்கத்தில் வினோதகன். அவன் என்னவோ சொன்னதற்கு வாய் கொள்ளாமல் சிரித்தாள். ஆட்டோ டிரைவர்கூட ஒருகணம் அவர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஓட்டினான்.
ஜீப்பில் போய்க்கொண்டிருந்த பாலாஜி மணி பார்த்தான். மூன்றரை. சுனந்தாவுக்கு ஐந்து மணிக்கு அலுவலகம் முடிகிறது. லங்கர் கானா பக்கம் அவள் வரவேண்டிய அவசியமேயில்லை. டவுன் ஹாலில் பஸ் பிடித்தால் நேரே ராமநாதபுரம்தான். சாமான்கள் ஏதாவது வாங்க வேண்டியிருந்தால்கூட எல்லாம் அங்கேயே கிடைக்கிறது. எதற்காக இங்கு வர வேண்டும்? அதுவும் வினோதகனுடன்?
மூன்றரை என்பதால் பர்மிஷன் போட்டிருக்கக்கூடும். ஏதாவது எமர்ஜென்சியாக இருக்குமோ ..? ஆனால் அவள் முகத்தையும் சிரிப்பையும் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே!
அலுவலகத்தில் பர்மிஷன் போட்டுவிட்டு மதியம் மூன்றரை மணிக்கு சம்பந்தமேயில்லாத லங்கர்கானா அருகே ஆட்டோவில் உலா வருவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? குழப்பமாக இருந்தது.
ஜீப் திவான்பகதூர் சாலையில் பாய்லர் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நின்றபோதுதான் வெளியுலகப் பிரக்ஞையே வந்தது.