சிறுகதை - சப்தமும் நாதமும்!

short story...
short story...

-திருவாரூர் பாபு

ருபத்தெட்டு வயதில் இன்னும் எனக்கு அந்த அனுபவம் இல்லை. ஆனால், நண்பர்களுக்காக நான்கு இடங்களில் பெண் பார்த்து ஏனோ அந்த வைபவத்தில் மனசு அத்தனை லயிக்கவில்லை. நான்கில் ஒன்றுகூட கூடி வராதது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால், இது முடிந்துவிட்டது. திட்டவட்டமாகச் சொல்ல முடியாவிட்டாலும் கிட்டத்தட்ட முடிந்து விட்டதுபோல்தான் எனக்குத் தோன்றியது.

கணேசன் வீட்டிலிருந்த அனைவரும் வந்து பார்த்துச் சென்றுவிட்டார்கள். பெண்ணின் வீட்டிலிருந்தும் பார்த்துச் சென்றுவிட்டார்கள். என்றாலும், ஏதோ ஒரு தேக்கத்தில் முகூர்த்தத்துக்கு இன்னும் நாள் குறிக்கப் படாமல் தள்ளிப் போய்க் கொண்டிருக்க... கணேசன் என்னை உசுப்பினான்.

"நீ ஒரு தடவை பார்த்துட்டு வந்துடுடா... எனக்கு அந்தப் பொண்ணை புடிச்சிருக்கு... ஆனா என்னைப் பத்தித்தான் ஒனக்குத் தெரியுமே... வீட்டுல இதைச் சொல்ல முடியல... முடிஞ்சா பெண்ணுகிட்டயோ... அல்லது அவுங்க வீட்லயோ விசாரிடா... வீணை வாசிக்கத் தெரியும்னு சொன்னாங்களே தவிர அது எவ்வளவு தூரத்துக்கு உண்மைன்னு தெரியல... ப்ளீஸ்டா... அப்படியே பொண்ணையும் நீ ஒரு தடவை பார்த்த மாதிரி இருக்கும்..." கண்களில் கனவோடும் நான் போவேனா என்கிற சந்தேகத்தோடும் பேசினான்.

நான் சிரித்தேன்.

"ஏண்டா... நல்லா குடித்தனம் நடத்தத் தெரிஞ்சிருந்தா போதாதா...? வீணை வாசிக்கத் தெரியணும்... இல்ல அதுமாதிரி எதுலயாவது ஈடுபாடு இருக்கணும்... இதெல்லாம் எதுக்குடா...? வீணை வாசிக்கிறதும்... பாட்டுப்பாடறதும்தான் வாழ்க்கையா...?"

''பார்த்தியா...? என்னைப் பத்தி அவ்வளவு தெரிஞ்சிருந்தும் நீயே கிண்டலடிக்கிற பாரு..."

"சரி... பார்க்கிறேன் போதுமா...?" என்றதும்தான் திருப்தியானான்.

இதையும் படியுங்கள்:
மனதை பண்படுத்தும் பொன்மொழிகள்!
short story...

ணேசன் பள்ளிக்கூட நண்பன். கிட்டத்தட்ட பதினான்கு வருடங்கள் ஒன்றாகப் படித்து, ஒன்றாக ஊர் சுற்றி, வங்கித் தேர்வெழுதி வேலை கிடைத்து அவன் நிரந்தரமாகிவிட... நான் அப்பாவின் தொழிலில் ஐக்கியமானேன்.

இருவரும் இருவேறு திசையில் இருந்தபோதும் பழக்கத்தில், நட்பில் எந்தவித விரிசலும் விழவில்லை.

படித்த காலத்தில் இருந்த மாதிரியே நட்பு இறுக்கமாகத்தான் இருந்தது.

இறுக்கமான நட்பு என்ற போதிலும் சிற்சில விஷயங்களில் எனக்கும் அவனுக்கும் நிறைய வேறுபாடு இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை சினிமாவுக்குப் போவது என் வழக்கம். ஆனால் கணேசன் பெரும்பான்மையான ஞாயிறுகளில் ஊரில் எங்காவது கச்சேரி நடந்தால் அங்கு இருப்பான். இல்லை கமலாலயக் கரையில் அமர்ந்துகொண்டு கோயில் ஒலிபெருக்கியிலிருந்து வழிந்து வரும் எதையாவது ரசித்துக்கொண்டிருப்பான்.

நான் அழைத்து சினிமாவுக்கு வர மாட்டான். ஆனால் அவனோடு நான் கச்சேரிக்குச் செல்வேன். மும்மூர்த்திகள் விழா நடக்கும் ஒரு வார காலமும் அவனோடு மும்மூர்த்திகள் சபாவே கதியாகக் கிடப்பேன். இப்படி ஒரு அனுசரிப்பு இருந்ததால்தான் நட்பு இன்னும் உடையாமல் இருக்கிறது.

எப்படியோ சங்கீதம் அவனோடு ஒன்றிப் போய்விட்டது. அதை மறுக்கவோ இல்லை. அவனை அதிலிருந்து மாற்றவோ எனக்கு விருப்பில்லை. நண்பன் சராசரி ஆண்மகனாக இல்லாமல் வித்தியாசமாக இருந்தது சந்தோஷமாக இருந்தது. என் நண்பன் ரசனை உடையவன் என்பது கொஞ்சம் கர்வமாகக்கூட இருந்தது.

ஆனால் தனக்கு வரப்போகிற மனைவிக்கும் சங்கீதம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை விதித்துக்கொண்டிருந்த காரணத்தினால் இரண்டு மூன்று வரன்கள் தட்டிப் போய் விட்டதுதான் எனக்கு வேதனையாக இருந்தது.

நல்ல வரன்கள். கடைசியாய்க் கூடி வருகின்ற நேரத்தில். "பொண்ணைப் பார்த்தா ஞான சூன்யம் மாதிரி இருக்குடா... இது எனக்கு சரிப்பட்டு வராது" என்று என்னிடம் சொல்லிவிட்டு அவன் அம்மா, அப்பாவிடம் வேறு ஏதோ காரணம் சொல்லிக் கல்யாணத்தைத் தவிர்த்துவிட்டான்.

இது எனக்குப் பிடிக்கவில்லை. அவன் இல்லாதபோது வீட்டுக்குச் சென்ற என்னிடம் அவன் அம்மாவும், அப்பாவும் வருத்தப்பட... நான் அவனைத் தனிமையில் கோபித்துக்கொள்ள...

"சரி... சரி... இந்த இடம் கட்டாயம் முடிஞ்சிடும்... நான் ஒத்துக்கறேன்... பொண்ணுக்கு வீணை வாசிக்கத் தெரியும்னு புரோக்கர் சொன்னாரு. அது உண்மையான்னு மட்டும் என் அம்மா, அப்பாவுக்குத் தெரியாம... ப்ளீஸ்...”

சொன்ன அடையாளங்கள் பொருந்தியிருந்த வீட்டுக்கு முன்னே வேப்ப மர நிழலில் மொபட்டை நிறுத்தி இறங்கினேன். சப்தம் கேட்டு வெளியே வந்த பெரியவரைப் பார்த்து வணங்கினேன். பதிலுக்குக் கை கூப்பியவர் வேகமாய் வந்து கதவைத் திறந்துவிட்டார்.

"நான் ரமேஷ்... மாங்குடியில அலயன்ஸ் பேசிக்கிட்டு இருக்கீங்கள்ல... கணேசன்... அவரோட ஃபிரெண்ட்...”

"அடடா...வாங்க.... வாங்க..."

ஆர்ப்பாட்டமான வரவேற்பு.

அவரைப் பின்தொடர்ந்து உள்ளே நுழைந்தேன்.

"மகாலெட்சுமி... மாப்புள வீட்லயிருந்து வந்திருக்காங்க... மாப்பிள்ளையோட ஃபிரெண்டாம்..." சத்தமாய்ச் சொன்ன சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த அம்மா இழுத்திப் போர்த்திக்கொண்டு அடுப்படியை விட்டு வெளியே வந்து "வாங்க..." வணங்கினார்.

சிரித்தேன்.

 "என்னான்னு தெரியல... நிச்சயத்துக்கு நாள் குறிக்க வர்றோம்னு மாப்பிள்ளையோட மாமாவும் சித்தப்பாவும் சொன்னாங்க. வரல... காரணம் தெரியலியேன்னு குழம்பிக்கிட்டு இருக்கிறப்பவே நீங்க... ஏதும் சேதி சொல்லி அனுப்பிச்சாங்களா...?"ஆர்வமாய்க் கேட்டார்.

"என்கிட்ட அதெல்லாம் ஒண்ணும் சொல்லலை. இந்த பக்கம் கொஞ்சம் வேலை இருந்துச்சி... போறேன்னு கணேசன்கிட்ட சொன்னேன்... அவன்தான் போயிட்டு வாடான்னு..."

"சரி...சரி... வந்தவரைக்கும் சந்தோஷம்... என்ன சாப்பிடறீங்க...? டீ...காபி....."

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..."

"ஐயய்யோ... அதெப்படி...? ஒண்ணும் சாப்பிட மாட்டேன்னா... ஏதாச்சும் குடிங்க..." என்றார்.

சிறிது நேரத்தில் டீ வந்தது. டீயை உறிஞ்சிக்கொண்டே தாழ்வாரத்து சுவரோரத்தில் வைக்கப்பட்டிருந்த வீணையைப் பார்த்துக்கொண்டே கேட்டேன்.

"ஒங்க டாட்டர் வீணை வாசிப்பாங்களா...?"

''பிரமாதமா வாசிப்பா... நாலு வருஷம் ஒரு அம்மா வீட்டுக்கு வந்து கத்துக் கொடுத்தாங்க..."

"அப்படியா...?"

"மூணு பேர்ல அவ ரொம்ப சுட்டி.... மதிய நேரத்துல கொஞ்சம் நேரம் படுக்கக்கூட மாட்டா... எம்பிராய்டரி பண்ணிக்கிட்டு இருப்பா... இல்ல படம் வரைவா..."

மனசுக்குள் கணேசனுக்கு வாழ்த்துச் சொன்னேன்.

அவர் சொன்னதில் நான் லயித்துப் போயிருக்க... பக்கத்து அறையிலிருந்து பளிச் என வெளியே வந்தாள் அவள்.

short story...
short story...

"வாங்க...." என்று என்னைப் பார்த்துச் சிரித்து விட்டுப்போக... அந்த திடும் ''வாங்க"வில் நான் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். நல்ல அழகாகவே இருந்தாள்.

"அப்புறம் நான் கிளம்பட்டுமாங்க...?"

"நல்ல வெயிலா இருக்கே.... இருந்து மதியம் சாப்பிட்டுட்டு பொழுது சாஞ்சி போகலாமே..."

"ஐயய்யோ... நான் பூந்தோட்டம் வரைக்கும் வியாபார வேலையா போகணும்..." என்றேன்.

"சரி... அப்ப வாங்க..."

வெளியே வந்த அம்மாவைப் பார்த்துக் கைகுவித்துவிட்டுத் திரும்பும்போது, அவள் வெளியே வந்த அறைக்குள் ஏதேச்சையாகச் பார்வை போனது. அந்த பீரோ கண்ணாடியின் மூலையில் ஜாதகத்தோடு கொடுத்தனுப்பிய கணேசனின் ஃபோட்டோ செருகப்பட் டிருந்தது.

நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

கணேசனிடம் சொன்னால் சந்தோஷப்படுவான் என்று நினைத்துக்கொண்டேன். நல்ல இடம். பார்க்க, பேச மிக நல்லவர்கள் மாதிரி தெரிகிறார்கள். நாலைந்து இடங்கள் தள்ளிப் போனாலும் அதுவும் நல்லதுக்குத்தான். கணேசா... கங்கிராட்ஸ்!

"ஏன் சேதி ஒண்ணும் சொல்லி அனுப்பல. பொண்ணு வீட்டுல பொண்ணோட அப்பா கவலைப்பட்டுக்கிட்டு இருக்காரு...'' என்றேன் மாலை கணேசன் வீடு சென்றபோது.

கணேசனின் அப்பா மௌனமாக இருந்தார்.

"நீ போனியா...?”அம்மா கேட்டார்.

"ஆமாம்மா... இவன் போயி பார்த்துட்டு வாடான்னு சொன்னான்... எங்க அவன்...?"

அம்மாவும்,அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"கொல்லப்பக்கத்துல இருக்கான்... இப்பத்தான் ஆபீஸ்லேந்து வந்தான்..."

கொல்லைப்புறம் சென்றேன்.

"வாடா..." கணேசன் அழுத்தமாக அழைத்தான்.

"ஏய்... கை கொடு மொதல்ல... ஒன் வுட்பி நாலு வருஷம் வீணை கத்திருக்காங்க. அதவிட சந்தோஷமான இன்னொன்னு... ஜாதகத்தோட கொடுத்தனுப்புனமே உன்னோட ஃபோட்டோ... அது அவுங்க ரூம் கண்ணாடியில ஒட்டி இருக்குடா... ஒன் ஆளு கனவு காண ஆரம்பிச்சாச்சி..."

"ப்ச்..." என்றான்.

"என்னடா...?"

"அது இல்லடா... மன்னார்குடி முடிஞ்சிட்டுது. வர்ற ஞாயிற்றுக்கிழமை நிச்சயம். காலையிலதான் பேசி முடிச்சோம்."

திடும் என்று பின்னந்தலையில் தாக்கப்பட்டதுபோல் உணர்ந்தேன்.

"ஏண்டா... திடீர்னு ஏன் இந்த முடிவு.."

''பொண்ணு வீட்டுல ஹண்ட்ரடு சிசி- வாங்கித் தர்றதா சொன்னாங்கடா... எனக்கும் ஆந்தகுடி பிரான்ஞ்சுக்கு டிரான்ஸ்ஃபர் ஆயிடும்போல இருக்கு... போக வர வசதியா இருக்கும்ல... அதான் சரின்னு சொல்லிட்டேன்..."

நான் அமைதியாக இருந்தேன்.

அந்தப் பெண்ணின் முகம் மனத்தில் ஓடியது. அவள் கண்ணாடியில் செருகி வைத்திருந்த கணேசனின் படம் நினைவில் ஓடியது. 'வாங்க... வாங்க'அந்த ஆர்ப்பாட்டமான வரவேற்பு!

ஹண்ட்ரட் சிசி - ஆந்தகுடி டிரான்ஸ்ஃபர்.

ஹண்ரட் சிசி.யின் சப்தத்தில் வீணையின் நாதம் காணாமல் போனது!

பின்குறிப்பு:-

கல்கி 31 டிசம்பர் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com