சிறுகதை - சுதாவா இப்படி...?

ஓவியம்; மாருதி
ஓவியம்; மாருதி

-கிருஷ்ணா

மார்க்கெட்டில் கத்தரிக்காய் விலையைக் கேட்டுக் கலங்கிப்போய் நின்ற சமயத்தில்தான் அவரருகில் குரல் கேட்டது.

"என்ன நாகநாதன், கறிகாயெல்லாம் வாங்கியாச்சா?"

திரும்பிப் பார்த்தார். ரகுராமன். அவரது அலுவலக சிநேகிதர். குடும்பத் தொடர்பும் உண்டு.

"நீ எங்கே இந்தப் பக்கம் அதிசயமாய்?" என்றார் நாகநாதன்.

காய்கறி வாங்குவது, ரேஷன் கடைக்குப் போவது இதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம் என்பது ரகுராமனின் நினைப்பு என்பது இவருக்குத் தெரியும்.

"திடீர் விருந்தாளிகள். வேற வழியில்லாம வந்துட்டேன், ப்ச்! டீ.வியிலே கிரிக்கெட் மாட்ச் பார்க்க முடியாம தடங்கல்."

விஷயம் ஆபீஸ் சமாசாரங்களில் தாவி, எதிரிலிருந்த சினிமா போஸ்டரில் வந்து நின்றது.

''அதோ பாரு நாகநாதா, எவ்வளவு அசிங்கமான போஸ்டர். சின்னப் பசங்க கெட்டுக்குட்டிச் சுவராப் போயிடறாங்க."

இதையும் படியுங்கள்:
விண்வெளியில் நீர் தயாரித்த ISRO.. எப்படி சாத்தியம்?
ஓவியம்; மாருதி

''உண்மைதான். வயசுக்கு வந்த பொண்ணை வைச்சுக்கிட்டு வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுத் திண்டாடறோம்...'' என்று இழுத்தாற்போல் நிறுத்தினார் ரகுநாதன்.

"ஏன் தயங்கற?"

"அது... உன் வீட்டுக்கு நேத்து யாராவது விருந்தாளிங்க வந்திருந்தாங்களா?"

"இல்லையே, ஏன்?"

"வந்து... உன் பொண்ணு சுதாவை...."

"அட சொல்லுப்பா!" என்றார் நாகநாதன் தவிப்புடன்.

"சுதாவையும், கூட ஒரு பையனையும் நேற்று ஐஸ்க்ரீம் பார்லரில் பார்த்தேன்" என்றவுடன் திக்கென்றது நாகநாதனுக்கு.

"ஜஸ்ட்... ஒண்ணுமில்லே... இருந்தாலும் வயசுப் பெண்ணு கண்ட சினிமாவையும் பார்த்துட்டுக் காதல், கீதல்னு ஏமாந்துடக் கூடாது, பாரு! எதுக்கும் ஜாக்கிரதையாய் இருப்பா" என்றவரை அதிர்ச்சி விலகாமல் பார்த்தார்.

சுதாவா இப்படி? பகீரென்றது அவருக்கு.

கல்லூரியில் கடைசி வருடம் படிக்கிறாள். குழந்தை என்று அவளை நினைத்திருப்பது எவ்வளவு பெரிய மடத்தனம் என்ற எண்ணமும் ஓடியது.

அதற்கு மேல் காய்கறி வாங்க முடியவில்லை. உடனே வீட்டுக்குப் போகத் துடித்தது.

உள்ளத்தின் பரபரப்பு நடையில் தெரிய, விருவிருவென்று வீட்டை நோக்கி நடந்தார்.

"என்னங்க, போன வேகத்திலேயே திரும்பிட்டீங்க?" என்று வரவேற்றாள் மனைவி.

"சுதா எங்கே?"

''மாடியிலே படிச்சுக்கிட்டு இருக்கா.''

“ஏன், கீழே படிக்கக் கூடாதா?”

"என்ன கேள்வி இது திடீர்னு?" என்ற புதிருடன் கணவனைப் பார்த்தாள் ஜானகி.

“சரிசரி, போய் வேலையைப் பாரு.''

''என்னங்க திடீர்னு கோபம்?"

"நேற்று மதியம் நீ எங்கே போயிருந்தே?"

''சினிமாவுக்கு. புதுப்படம். பக்கத்து வீட்டு ஆச்சி கூப்பிட்டாங்கன்னு போனேன். ஏன்?"

"நீ இப்படி பொறுப்பில்லாம சினிமா, டிராமான்னு அலையறதுனாலேதான் உன் மகளும் இப்படி இருக்கா."

“சுதாவா? எப்படி இருக்கா?''

''ஒண்ணுமில்லே. எல்லாம் நான் பார்த்துக்கறேன்" என்று சிடுசிடுத்தார்.

குளத்தில் கல்லை விட்டெறிந்த கதையாய் அவரின் தெளிந்த மனத்தில் ரகுராமன் கல்லை விட்டெறிந்து விட்டார்.

அலை அலையாய்க் குழப்பம். உண்மை முழுதும் தெரியாமல் எதையும் பேசவும் தயக்கம்.

மெதுவாக மாடி ஏறினார்.

யார் அந்தப் பையன்? ஒரு வேளை இதே தெருவில்தான் இருக்கிறானோ? அதனால்தான் படிக்கிறேன் பேர்வழி என்று சுதா எப்போதும் மாடியில் இருக்கிறாளோ? கண்காணிக்க வேண்டும். விபரீதமானால் அசிங்கமாயிற்றே?

மொட்டை மாடியின் வலது மூலையில் இவருக்கு முதுகைக் காண்பித்தபடி சுதா எதையோ எம்பிப் பார்ப்பது தெரிந்தது.

மாட்டிக் கொண்டாளோ... ? கையும், களவுமாய் வசமாய்ச் சிக்கினாள் !

பூனை நடையில் அவளை நெருங்கி.... அட, சட்! மாடியில் இருந்த கல்லில் கால்பட்டு, அது உருண்டு, சுதா திரும்பி.. போச்சு! எல்லாத் திட்டமும் காலி!

“என்னப்பா? வந்ததே தெரியலியே?" என்றவளைத் தீர்க்கமாய்ப் பார்த்தார்.

முகத்தை எப்படி அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டிருக்கிறாள்? இதைப் பார்த்துத்தானே இன்னும் சிறு பெண் என ஏமாந்து விட்டோம்....!

"என்ன பண்ற?"

"படிச்சுட்டு இருக்கேன்.”

"கையிலே புத்தகத்தைக் காணோம்?"

"அதோ" என்று எதிரிலிருந்த கைப் பிடிச்சுவரைக் காட்டினாள். புத்தகம், அதன் மேலே சிறு கல்லும் இருந்தது பறக்காமலிருக்க.

"புத்தகத்தை அங்கே வைச்சுட்டு இங்கே எப்படிப் படிப்பாய்?" என்றார் குத்தலாய்.

"கீழே ஏதோ தொம்முனு சத்தம் கேட்டுது. அதான் வேடிக்கை பார்த்தேன்."

“ஓஹோ!”

"கோடி வீட்டு கணேஷ் இல்லை... பி.எஸ்ஸி. படிக்கிறானே... அவன்தான். யார் மேலோ சைக்கிளை மோதி...." என்று சிரித்தாள்.

அப்படியானால்... கணேஷ்தானோ இவளுடன் நேற்றுச் சுற்றியவன்....? இவருக்குள் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தார்.

"என்னப்பா கூண்டுல நிற்க வைச்சுக் கேட்கற மாதிரி கேட்கறீங்க? கொஞ்சம் முன்பு கீழே அம்மாவிடம் கூட ஏதோ வேகமாப் பேசினது காதுல விழுந்ததே!”

கள்ளி! அனைத்தையும் கவனிக்கிறாள். குற்றமுள்ள நெஞ்சல்லவா? பயம்! அதுதான் என் செயலைக் கூர்ந்து கவனிக்கிறாள்!

"என்னப்பா?”

நேரிடையாக விஷயத்துக்கு வரவும் தயக்கமாய் இருந்தது.

''ஆமாம்! காதலிக்கிறேன்" என்று சொல்லிவிட்டால்... உண்மையை எதிர்கொள்ளவும் பயமாய் இருந்தது.

"சரி சரி, கீழே வா" என்றபடி படி இறங்கினார்.

"கடைசிப் பாடம். படிச்சிட்டு இதோ வந்துடறேன்" என்ற சுதாவின் குரல் அவர் பின்னால் கேட்டது.

கீழே ஜானகி யாரிடமோ வம்படிப்பது காதில் விழுந்தது. யாராயிருக்கும்?

“ஒரே போர் போ பானு! என்ன படம் எடுக்கிறான்? எதிர் வீட்டு கீதா சொன்னாளேன்னு போனேன். ஆ, ஊன்னு புகழ்ந்தாள் இதைப் போய். எதையும் நம்ம கண்ணோட்டத்துலதான் பார்த்து எந்த முடிவும் எடுக்கணும்னு புரிஞ்சிக்கிட்டேன். அடுத்தவங்க பேச்சை நம்பினால் இப்படித்தான் ப்ச்! இவரிடம் வேற இந்த அறுவைப் படம் பார்த்ததுக்குக் கொஞ்சம் முன்னாடி திட்டு,ஹும்!”

இதையும் படியுங்கள்:
ஆதித்யா எல் 1: இஸ்ரோ வெளியிட்ட புதிய அப்டேட்!
ஓவியம்; மாருதி

பளிச்சென்று அவருக்குள் மின்னல். ரகுராமன் பேச்சினால்தானே தனக்குள் இவ்வளவு குழப்பம்! அவர் பேசியதை மனத்தில் பதித்துக்கொண்டு அப்படியே பார்ப்பதால்தானே சுதாவின் ஒவ்வொரு செயலும் சந்தேகமாய்ப் படுகிறது?

அவர் சுதாவைப் பார்த்தது உண்மையாய் இருக்கலாம். ஆனால் சுதாவை விசாரித்தால்தானே உண்மை தெரியும்.

ஒரு வேளை, சுதா தான் நினைப்பதைப்போல வெகுளியாகவே இருந்து விட்டால்...?

மாடியிலிருந்து சுதா வருவது தெரிந்தது.

"என்னப்பா, என்னாச்சு இன்னிக்கு உங்களுக்கு?"

''ஒண்ணுமில்லேம்மா! ஆபீஸ் டென்ஷன். எங்கேயாவது நான், உன் அம்மா, நீ மூணு பேரும் வெளியிலே போய் வரலாமா?"

''குட் ஐடியா!'' என்று குதூகலித்தாள். ''ஐஸ்க்ரீம் பார்லருக்கு உன்னை கூட்டிட்டுப் போய் ரொம்ப நாளாச்சே. அங்கேயே போகலாமே" என்றபடி சுதாவை நோக்கினார்.

"ம்... பரவாயில்லே...." என்று யோசித்தவளைப் படபடப்பாய் பார்த்தார்.

"என்னம்மா?"

"அது... நேத்துத்தான் ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். அதான் யோசனை...''

''யாரோட போனாய்?" என்றார் சஸ்பென்ஸ் தாங்காமல்.

"என் தோழி மாலாவுக்கு நேற்று பிறந்த நாள். ஐஸ்கிரீம் பார்லர் கூட்டிட்டுப் போனாள் வழியிலே அவ அண்ணனைப் பார்த்தோம். அவனும் எங்களோட வந்தான். கம்ப்யூட்டர் படிக்கிறானாம். வயலின்கூட நல்லா வாசிப்பானாம். அவனைப் பற்றியே பேசி அறுத்துத் தள்ளிட்டா மாலா. ஒரே போர்” என்று தோளைக் குலுக்கிய மகளை நிம்மதியுடனும் தன் குழப்பத்தை நினைத்து வெட்கத்துடனும் பார்த்தார்.

பின்குறிப்பு:-

கல்கி 01  ஜனவரி 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com