"வெளியே போடா..." கத்தினார் விஞ்ஞானி சிவா.
"லேபில் உங்களைத் தனியே விட்டுப் போகமாட்டேன்" அசிஸ்டென்ட் குணா மறுத்தான்.
"அடம் பிடிக்காதே. விபரீதமா எதுவும் ஆகலாம். சொல்யூஷன் ராட்சஸ பீக்கரில் கொதிக்குது. டெம்பரேசர் அதிகமானால் வெடிச்சிடும். இன்னும் 300 நிமிடங்கள். சோதனை வெற்றியடையலாம். இல்லை தோல்வியடையலாம். தோல்வியானால் அருகிலிருப்பவர்களுக்கு என்ன வேணா நடக்கலாம். அதனால் விலகிடு" எச்சரிக்கையும் மிரட்டலும் கலந்த தொனி.
"நீங்க வயசானவர். உங்களைத் தனியே விட்டுட்டுப் போகக்கூடாது... முடியாது."
"நான் வயசானவன். வாழ்ந்து முடிச்சவன். நீ இளைஞன். நிறைய வாழ்நாள் பாக்கியிருக்கு. வெளியே ஓடு" கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்.
மறுபடி உள்ளே வந்த குணா, "என்ன தள்ளறீங்க? நான் தள்ளினா மண்டை உடைஞ்சிடும்" என்று சீறினான்.
"என்ன திடீரென்று ‘அந்நியன் அம்பி’ மாதிரி பேசறே?" சற்றே பயந்தார்.
"பின்னே என்ன? நான் உங்கக்கூடத்தான் இருப்பேன்" உறுதியாய் சொன்னான் குணா.
"சரி, இரு. உன் அன்புக்கு அளவே கிடையாது."
"இந்தச் சொல்யூஷனால் மனிதக் குலத்தின் பசி அடங்கப்போகுது. அவனவன் ஓட்டலில் ஒரு தம்ளர் வாங்கி குடிச்சா அன்று முழுதும் பசிக்காது. தானியங்கள் லைக் அரிசி, கோதமை, ரவை, புரோட்டாகளுக்கு லீவு. உலகில் உணவுப் பஞ்சமே இருக்காது. இவ்வளவு பெரிய அருமருந்தைக் கண்டுபிடிச்ச உங்களைக் காப்பது என் கடமை. உரிமையும் கூட..."
"பிரமாதம். எனக்கு இப்ப கடைசி நிமிட பதற்றம்."
"ஈஸி, ஈஸி", என்றபடி ரீடிங்கை நோட் பண்ணி எழுத ஆரம்பித்தான் குணா.
கரெக்டாய் 5 மணி நேரம் கழித்து சொல்யூஸன் கொதித்து, மறுமுனை பீக்கரில் கருநிறப் பொடியுடன் கலந்து, கூலாகி பவுடராய் இன்டிகோ கலரில் வெளி வந்தது
"சக்ஸஸ்" என்று கத்தினான் குணா.
"சும்மா இரு. உலக மஹா தோல்வி. பவுடர் கலர் மஞ்சளாய் இருக்கணும்."
"அப்படியா? ரிஸர்ச் பேப்பரில் இண்டிகோ கலர்னுதானே இருக்கு" - குணா சொல்ல
"துரோகி! என் ரிஸர்ச் பேப்பரை படிச்சியா?"
"ஆமாம்."
"யார் கொடுத்தா அனுமதி?"
"பெர்மிஷன் எடுத்துக்கிட்டேன்."
"குட். இப்படி செஞ்சதும் நல்லதாப்போச்சு" சிவா சிரிக்க...
"உங்களோட பேசவே பயமாயிருக்கு" குணா நடுங்க... கை கொடுத்தார் சிவா
"இப்ப நடுநிசி 2 மணி. அதிகாலை 6 மணிக்கு வா. இனிமே பவுடரை லாஞ்ச் பண்ண ஆக வேண்டியதை செய்வோம்."
"இப்ப வீட்டுக்குப் போடாங்கறீங்க. ஏன் பாஸ் என்னை விரட்டறதிலே குறியா இருக்கீங்க? எனக்கு தெரியாம என்னமோ பண்ணப்போறீங்க. உங்க விசுவாசி நான். எதற்கும் தடையா இருக்க மாட்டேன்."
குணாவை முறைத்தார்.
"என்ன பாஸ் பாக்கறீங்க? நான் போகமாட்டேன்"
"சரி தூங்கு இங்கேயே."
"தூக்கம் வரலை."
"வராது. எப்படி வரும்?"
"நீங்க தூங்குங்க பாஸ்."
“சரி. ஏதாவது வித்தியாசமா நடந்தா என்னைக் கூப்பிடு. பக்கத்து ரூமில் தூங்கறேன்."
"யெஸ் பாஸ்" என்றான் குணா.
பக்கத்து ரூம் போய் கதவைச் சாத்தினார் சிவா.
மளமளவென்று ரிசர்ச் ஃபைலை எடுத்தான் குணா.
லேபை மொத்தமாய் பூட்டினான். வெளியே வந்ததும் தோழி நிலா காரில் வர, "ஆச்சா?" என்று கேட்டாள்.
"யெஸ்."
"பைல் ஒகே. சேம்பில் சொல்யூசன்."
"காரை கிளப்பு. சொல்யூசன் இதோ..." ஆட்டிக்காட்டினான்
"குட்."
"ஃப்ளைட்டுக்கு நேரமாச்சா?"
"இல்லை."
"5 ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு டிஃபன் சாப்பிட்டு போகலாம்."
"எதற்கு ரூம்?"
"தெரியாத மாதிரி கேட்கறே?"
"நாட் நௌ. வெறும் டிஃபன் மட்டும்."
"வேண்டாம். டிஃபன் இங்கே இருக்கு" என்று சொல்யூசனை "எனக்கொரு மூடி உனக்கொரு மூடி" என்று இருவரும் குடிக்க, அடுத்த ஐந்தாவது நிமிடம் இருவரும் மயங்கி சரிந்தனர். கார் கண்ட்ரோல் இன்றி எதிரே வந்த லாரி மேல் மோதி...
அதே சமயம் விஞ்ஞானி சிவா "கொஞ்ச நாளா குணாவின் நடத்தை சரியில்லாததால் ரிசர்ச் பேப்பரில் கடைசி 10 பேப்பரைத் தப்பாக எழுதி வைச்சேன். அதை எடுத்துக்கிட்டு போயிருக்கான் குணா. சொல்யூஷன் கலர் தப்பு .ஃபார்முலாவே தப்பு. மஞ்சள் கலரில் சொல்யூஷன் வரணும். ஒரிஜினல் பேப்பரை வைத்து கரெக்டான சொல்யூஷன் ரெடி பண்ணிடலாம்" என்று போலீஸ் ஸ்டேஷனில் சொல்ல,
"குணாவுக்கு என்ன ஆகியிருக்கும்?" என்று இன்ஸ்பெக்டர் கேட்க, "சொல்யூஷனைக் குடிச்சிருக்கக்கூடாது. குடிச்சிருந்தால் என்னவேணா நடக்கலாம்" என்றார் விஞ்ஞானி சிவா.
டிவியில் ப்ரேக்கிங் நியூஸாய் கோர விபத்தின் காட்சிகள் ஓடின...
"தட்ஸ் இட். இது துரோகிகளுக்கு அறிவியல் தந்த தண்டனை" என்றார் சிவா