சிறுகதை - தன்னைத்தான் காக்கின்...

ஓவியம்: கோபன்...
ஓவியம்: கோபன்...

-க. ஒப்பிலி அப்பன்

"என்னங்க... டாக்டர்கிட்டே செக்-அப்புக்குப் போகணும்னு நேத்துலேர்ந்து சொல்லிக்கிட்டிருக்கேன்... ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டு இப்ப எங்கே கிளம்பிட்டீங்க..." கான்ட்ராக்டர் மனைவி காமாட்சி கடுகடுத்தாள்.

"அட சும்மாயிரு... கிளம்பும்போது எதையாவது சொல்லிக்கிட்டு. இன்னிக்கு ஒரு பில்லுக்குப் பணம் வரணும். ஹைவேஸ் ஆபீஸ் வரை போயிட்டு வந்துடறேன்..." என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான் மாணிக்கம்.

மாணிக்கம் அந்த வட்டாரத்தில் செல்வாக்குள்ள கான்ட்ராக்டர். நெடுஞ்சாலை ரோடு போடுவதாகட்டும், ஓவர் பிரிட்ஜாகட்டும், எதுவானாலும் அவன்தான் கான்டிராக்டர். டெண்டருக்கு சாமர்த்தியமாக குறைந்த ரேட் கொடுத்து,  ஒர்க் ஆர்டரை வாங்குவதில் மிகவும் கெட்டிக்காரன் அவன். அரசியல்வாதியிலிருந்து, ஆபீஸ் ப்யூனில் தொடங்கி எஸ்.ஈ. வரை அவரவர் நிலைக்கேற்ப பணத்தைக் கொடுத்து மிகச் சுலபமாகத் தன் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விடுவான். போன மாதம்கூட ஒரு தார் ரோட்டுக்கான கான்ட்ராக்டை அவன்தான் எடுத்து முடித்தான். அதற்கான பில் பணத்தை வாங்குவதற்காகத்தான், அந்த ஹைவேஸ் ஆபீசுக்குப் போய்க்கொண்டிருந்தான் மாணிக்கம்.

மாணிக்கத்தின் ஸ்கூட்டர் அந்த ரோட்டில்(!) மேட்டில் ஏறியும் பள்ளத்தில் இறங்கியும் அவனைக் குலுக்கிக்கொண்டிருந்தது. ஒரு பாட்டிலில் பாலை எடுத்துக்கொண்டு வந்திருந்தால்,  நிச்சயம் வெண்ணெய் திரண்டிருக்கும். அத்தனை குலுக்கலுக்கும் ஒரு முணுமுணுப்புக்கூட இல்லாமல் மாணிக்கம் பொறுமையாக ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டிருந்தான். காரணம் இந்தத் தார் ரோடுகூட போன வருடம் அவன்தான் கான்ட்ராக்ட் எடுத்துச் செய்தான்!

''என்ன... இப்படி குண்டும் குழியுமாகவா ரோடு போடுவாங்க... கான்ட்ராக்ட்காரனுக்கு மனசாட்சியே கிடையாதா...?" என்று யாராவது மாணிக்கத்தைக் கேட்டுப் பார்க்கட்டும்.

இதையும் படியுங்கள்:
உடல் எடை கூடிக்கிட்டே போகுதா? அப்போ கற்றாழை ஜூஸ் குடிச்சா போதுமே! 
ஓவியம்: கோபன்...

"ஏன் சார்... ஒரு ஒர்க் ஆர்டரைப் பிடிக்கறதுக்கு முன்னாலேயே இத்தனை சதம்ன்னு தொகுதி எம்.எல்.ஏவுக்குக் கொடுத்து, அப்புறம் உதவிப் பொறியாளர், செயற் பொறியாளர்ன்னு பில்ல பாஸ் பண்ற க்ளார்க் வரை நான் கப்பம் கட்டினா,  நான் ரோட்டுல கல்லைப் போட்டு மண்ணைத்தான் மூடமுடியும்..." என்று கேள்வி கேட்பவர் வாயையே மூடி விடுவான் மாணிக்கம்!

அந்த நெடுஞ்சாலை ஆபீஸ் முன்பாக ஸ்கூட்டரை நிறுத்தினான் மாணிக்கம்.

காவிப் பல் தெரியச் சிரித்து, அவனை வரவேற்ற ப்யூன் முருகன் கையில் ஒரு ஐந்தை அழுத்தி விட்டு, எக்ஸிகியூடிவ் என்ஜினீயர் அறைக்குள் நுழைந்தான் மாணிக்கம். அவ்வளவுதான்... அவன் ரோடு வேலையை எவ்வளவு வேகமாக செய்து முடிப்பானோ அதே வேகத்தில் அவன் எதிர்பார்த்த செக்கும் அவனுக்குக் கிடைத்து விட்டது!

ஸ்கூட்டரை வீட்டுத் தாழ்வாரத்தில் நிறுத்தி விட்டு, 'காமாட்சி... காமாட்சி..." என்று மனைவியை அழைத்துக்கொண்டே உள்ளே சென்ற மாணிக்கம், அவன் மகள் அழுத கண்ணீரும், சிந்திய மூக்குமாக நிற்பதைப் பார்த்து மலைத்துப் போய் நின்றுவிட்டான்.

"ஏய்... எதுக்கு அழறே... என்ன ஆச்சு...?" பதற்றத்துடன் மகளை நெருங்கினான் .

"அப்பா... அம்மா ஆஸ்பத்திரியில் இருக்காங்க... யாரோ டவுனிலிருந்து வந்து சொன்னாங்க..." என்றபடி ஒரு கடிதத்தைக் கொடுத்தாள்.

"என்ன ஆச்சு? எந்த ஆஸ்பத்திரி?" என்று கேட்டவாறே அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு மீண்டும் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

ஸ்பத்திரியில் காமாட்சி மயக்கமாகப் படுத்திருந்தாள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஓர் அம்மாவிடம் பதற்றத்துடன் விசாரித்தான் மாணிக்கம்.

''பஸ்ஸுல இவங்ககூட நானும் வந்தேன். ரோடா அது?  எந்தப் பாவிப்பய போட்டானோ... ஒரே குண்டும் குழியுமா... அதுல பஸ் குலுங்கிக் குலுங்கி வந்ததால இவங்க திடீர்னு மயக்கமா எம்மேல சாய்ஞ்சுட்டாங்க. என்னன்னு தெரியலை. டவுன் வந்ததும் மத்த பொம்பளைங்க துணையோட இந்த ஆஸ்பத்திரியில கொண்டாந்து சேர்த்தேன். டாக்டரம்மா வந்து பார்த்துட்டு, இவங்க வயத்திலிருந்த ஆறு மாசக் குழந்தை, பஸ் குலுக்கலால - குறைப் பிரசவமாயிட்டுதுன்னு சொன்னாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. நல்லவேளையா உங்க வீட்டுக்காரியைத் தெரிஞ்ச ஒரு நர்ஸ் இங்க இருந்ததால, அவங்கதான் உங்ககிட்டே சேதி சொல்ல ஆளனுப்பினாங்க. நீங்க வர்ற வரைக்கும் துணையா இருப்போமேன்னு நானும் இருந்தேன்!''  என்றாள் அந்த அம்மாள்.

மாணிக்கம் பேசும் சக்தியற்று மனைவியையே பார்த்துக்கொண்டிருந்தான்!

பின்குறிப்பு:-

கல்கி 21 மார்ச் 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com