-சுபா
"அந்தப் பையனுக்கு நாம ஏதாச்சும் பண்ணனுங்க'' என்றாள் நாகலட்சுமி.
''நானும் ஆனந்தனைப் பத்தித்தான் நெனச்சிக்கிட்டிருந்தேன்" என்றான் சுவாமிநாதன்.
"எட்டு வயசு கூட ஆகலை. ஆனா பம்பரம் மாதிரி சுத்திச் சுத்தி வேலை செய்றான்."
''மரியாதை தெரிஞ்ச பய."
''நம்ம லேகா ஒரு கிண்ணம் சோறு சாப்பிட என்னை எப்படி பாடாப்படுத்தும்? அவன் மடில உக்காந்து அண்ணா, அண்ணான்னு குருவி மாதிரி வாயைப் பொளக்குது!"
"சின்னதுகூட அவன்கிட்ட ஒட்டிரிச்சி."
இருவரும் மாறி மாறி ஆனந்தனையே பேசினார்கள். விடுமுறைக்காக நான்கு நாட்கள் ஊட்டியில், கம்பெனி கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்ததில், வாட்ச்மேன் லோகுவைவிட அவனது ஏழு வயது மகன் ஆனந்தன் நெருக்கமாகி விட்டான்.
கார் துடைப்பது, வெந்நீர் போடுவது, சிகரெட் வாங்கி வருவது, சாதம் ஊட்டுவது, டிரெஸ் பண்ணி விடுவது, பிக்னிக் சுமைகளைச் சிரித்துக்கொண்டே சுமந்து வருவது... ஆனந்தன். ஆனந்தன். ஆனந்தன்.
"லோகுவுக்கு ஆறு பொம்பளப் பசங்களாம். இவன் ஏழாவது. காலைல பேப்பரைத் தலைகீழா வெச்சிக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தான். என்னடான்னு கேட்டா, எழுதப் படிக்கத் தெரியாதாம். அப்பா ஸ்கூலுக்கு அனுப்பலையாம்.."
"…………"
"ஆனந்தனை நம்மகூட கூட்டிக்கிட்டுப் போய்ட்டா என்னங்க? காலேஜ் வரைக்கும் அவன் படிப்பு, டிரெஸ், போக்குவரத்து எல்லாத்தையும் நாம ஏத்துக்கிட்டா என்ன? அவனும் கொழந்தைங்ககிட்ட உசிரா இருக்கான்!''
"சொன்னா நம்ப மாட்டே லட்சுமி. நானும் இதேதான் யோசிச்சிட்டிருந்தேன். விடியட்டும். காலைல லோகு வந்தவுடனே சொல்லிடுவோம். ஆனந்தனுக்கு நாம ஏதாச்சும் செஞ்சாகணும்" என்றான் சுவாமிநாதன் உணர்ச்சியுடன்.
"லோகு, உம் பையனை எங்களுக்கு ரொம்பப் புடிச்சிப் போச்சு. அவனுக்கு ஏதாச்சும் செய்யணும். அவனைக் கூப்பிடேன். புறப்படணும். நேரமாயிரிச்சி."
ஆனந்தன் மூச்சிரைக்க வந்து சேர்ந்தான். சுவாமிநாதன் அவன் தோளை அணைத்தான். தன் பாக்கெட்டிலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவன் கையில் திணித்தான்.
"லோகு, ஆனந்தனுக்கு நல்லதா ஒரு சட்டை வாங்கிக் கொடு. வீண் செலவு பண்ணிடாதே!"
ஆனந்தன் கைகளைப் பின்னுக் கிழுத்துக் கொள்ள, "ஐயா, கொடுக்கறாங்க இல்ல? வாங்கிக்க.''
"மறுபடி எப்ப சார் வருவீங்க?" என்றான் ஆனந்தன் ஈரக் கண்களுடன்.
"அடுத்த வருஷம். அதுக்குள்ள நீ வளர்ந்திருப்பே. எங்களையெல்லாம் மறந்திட மாட்டியே?" என்று கேட்டான் சுவாமிநாதன் உதட்டில் புன்னகையுடன்.
இதயம் அன்பைத்தான் பேசுகிறது. ஆனால் புத்தி? அதற்கு நிறைய கூட்டல், கழித்தல் கணக்கெல்லாம் போடத் தெரிந்திருக்கிறது.
பின்குறிப்பு:-
கல்கி 19 ஜீன் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்